அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஐதராபாத்: “தமிழகத்துக்கு தனி மாநிலக் கொடி வேண்டும் என்று கோரிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்” என்று தெலங்கானா பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் என்.வி.சுபாஷ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்துப் பேசிய என்.வி. சுபாஷ், “தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எப்படி ஒரு தனி மாநிலக் கொடியைக் கோர முடியும்? நாளை அவர் தனி நாணயம், தனிப் பிரதமர், தனி அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தனி அதிகாரங்கள் வேண்டும் என்று கேட்பார். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா இத்தகைய சூழலை ஏற்கனவே சந்தித்துள்ளது. 1947-க்குப் பிறகு, அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் தலைமையில் 550 சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டன. இதனால் தெலங்கானாவில் ரத்தக் களரியையும் நாம் கண்டிருக்கிறோம். 1947-க்குப் பிறகு, 16 மாத இடைவெளியில், ஐதராபாத் சமஸ்தானம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. எனவே தமிழக முதல்வர், ஆதவ் அர்ஜுனாவை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோருகிறது. மேலும், தமிழ்நாடு காவல்துறை அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமையும் கருத்துகளைத் தவிர்த்து, பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை போன்ற அரசியலமைப்பு சார்ந்த பொறுப்பில் இருக்கும் ஒரு பொறுப்பான அமைச்சர், இத்தகைய கருத்தைக் கூறக்கூடாது” என்று அவர் கூறினார். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (நவ.1) அன்று சென்னையில் நடைபெற்ற “தமிழ்நாடு நாள்” நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பிற மாநிலங்களுக்குத் தனித்தனி மாநிலக் கொடிகள் இருப்பது போல, தமிழ்நாட்டுக்கும் தமிழ் அடையாளத்தை மையமாகக் கொண்ட ஓர் அதிகாரப்பூர்வ மாநிலக் கொடி இருக்க வேண்டும். இந்தக் கொடியை நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய நாட்களில், தேசிய மூவர்ணக் கொடியுடன் சேர்த்துப் பெருமையுடன் ஏற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
“ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்” - பாஜக செய்தித் தொடர்பாளர் கோரிக்கை
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗