சென்னை: ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீது நவம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், ரிச்சர்ட்ஸன் வில்சன் ஆஜராகி முன்வைத்த வாதங்கள்: “அனைவரும் பணம் கொடுத்தது அரசகுமாரிடமும், புகார்தாரரான இளங்கோவனிடமும் தான். ரூ.30,40 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக கூறிய தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என விசாரிக்கவில்லை. பதில் மனுவில் அனைத்து ஆதாரங்களும் சேகரித்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. அன்பில் மகேஸ் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார். இங்குதான் இருப்பார். குடும்பத்தை விட்டுவிட்டு எங்கும் செல்ல முடியாது. அன்பில் மகேஸின் அனைத்து மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை புலன் விசாரணையில் தலையிடப்போவதில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் உஷாராணி ஆகியோர் முன்வைத்த வாதங்கள்: “அரசகுமார், முத்துக்குமார் இருவரும் சேர்ந்து சங்கம் நடத்தினர். அங்கீகாரம் கோரும் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்துள்ளனர். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர் தொடர்பு குறித்து புகார்தாரருக்கு தெரியாது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல. இந்த மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரித்ததில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. இது வெறும் மோசடி வழக்கல்ல, சிக்கலான வழக்கு. முத்துக்குமாரை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டும். அதுகுறித்து அன்பில் மகேஸிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. பள்ளிகள், மாணவர்கள் நலனுக்காக 20 ஆண்டுக்கு ஒருமுறை அங்கீகாரம் அரசாணை கொண்டு வரப்படவில்லை. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை அங்கீகாரத்தால் தனியார் பள்ளிகளுக்கு அதிக செலவு ஏற்படும். அதனால் அவர்கள் பணம் கொடுத்துள்ளனர். 400 கோடி ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரிக்கையும் விடுக்கப்பட்டது. அன்பில் மகேஸ் கைதான இரு நாள்களில் முத்துக்குமார் சரணடைந்துள்ளார். அவருக்கு அடைக்கலம் கொடுத்தது அன்பில் மகேஸ்தான். அதற்கு காரணம் பணத்தை வசூலித்தது முத்துக்குமார். சரவணன் என்பவர் பணத்தை அன்பில் மகேஷ் வீட்டுக்கு கொண்டு சென்றார். அதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. தற்போது சரவணன் தலைமறைவாக உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நவம்பர் 10-ம் தேதி வழங்கப்படும் தெரிவித்தார். முன்னதாக, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 400 கோடி வரை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகத் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை கடந்த 3 நாட்களாக தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நேற்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்னிலையில் அன்பில் மகேஸை ஆஜர்படுத்தினர். அப்போது, அன்பில் மகேஸின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, “போலீஸார் உங்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினார்களா?” என்று அன்பில் மகேஸைப் பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அன்பில் மகேஸ், ‘போலீஸார் துன்புறுத்தவில்லை. முறையான உணவு வழங்கப்பட்டது’ என்று தெரிவித்தார். பின்னர் அன்பில் மகேஸை இன்று (நவ.6) வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து போலீஸார் மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பில் மகேஸ் ஜாமீன் மனு மீது நவ.10-ல் தீர்ப்பு: முன்வைக்கப்பட்ட வாதங்கள் என்னென்ன?