வானத்தை நோக்கி திரிசூலம் போல வேகமாகப் பறந்து சென்று வெடிக்கும் வண்ணமயமான பட்டாசு அது. அதன் பெட்டியில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலை (M.R.P.) ரூ.1200. கடையில் தரப்பட்ட விலைப்பட்டியலில் அதற்கு குறிக்கப்பட்டுள்ள விலை ரூ.280. ரூ.200 என்று பெட்டியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மற்றொரு வகை பட்டாசுக்கு கடையில் கூறப்படும் விலை வெறும் 40 ரூபாய். இந்த ஆண்டு தீபாவளிக்கு சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் பட்டாசுக் கடைகளில் 80 சதவீதம், 90 சதவீதம் தள்ளுபடி என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த தொகைக்கு விற்பனை செய்தாலும் தங்களுக்கு வாங்கிய விலையை 50 முதல் 100 சதவீதம் லாபம் இருக்கும் என்கின்றனர் பட்டாசு விற்பனையாளர்கள். அதிகபட்ச சில்லறை விலை என்பதே ஏமாற்று வேலை என்கிறார் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன். இந்த எம்ஆர்பி விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பிபிசியிடம் கூறினார் தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிபொருள் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சங்கர். தமிழகத்தில் பட்டாசுக் கடைகளுக்கு நிரந்தர உரிமம் மற்றும் தற்காலிக உரிமம் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்படுகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பட்டாசுக் கடைகள், தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் அமைக்கப்படுவது வழக்கமாகவுள்ளது. இந்த கடைகளில் பட்டாசு விலைக்கு தள்ளுபடி தருவதாக விளம்பரம் செய்வதும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த தள்ளுபடி சதவீதம் முன்பு 30 சதவீதம், 40 சதவீதம் என்றிருந்தது, இந்த ஆண்டில் 80 முதல் 90 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இந்த விலை எப்படி இருக்கிறது என்பது குறித்து பல்வேறு பட்டாசுக்கடைகளில் பிபிசி தமிழ் விசாரித்ததில், பட்டாசுப் பெட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்த விலையை விட, கடையில் தரப்பட்ட விலைப்பட்டியலின் விலை மிகமிகக் குறைவாக இருந்தது தெரியவந்தது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு கோவை நகரில் பல பகுதிகளில் பட்டாசுக் கடைகள் சார்பில் தள்ளுபடி விலை குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கோவை சாய்பாபா காலனியில் பட்டாசுக் கடை ஒன்றில் 80 சதவீத தள்ளுபடி என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அந்தக் கடையில் விலைப்பட்டியலைக் கேட்டு வாங்கி, குறிப்பிட்ட சில பட்டாசுகளின் பெட்டிகளில் இருந்த விலையைப் பார்த்தபோது அதில் குறிப்பிடப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 70 முதல் 80 சதவீதம் வரை குறைவாக விற்பனை விலை வைக்கப்பட்டிருந்ததை அறியமுடிந்தது. பிபிசியிடம் பேசிய அந்த பட்டாசுக் கடையின் உரிமையாளர் சதீஷ், ''நாங்கள் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் வைத்துள்ளோம். கோவையில் எங்களுக்கு 3 கடைகள் இருக்கின்றன. எங்களிடம் குறைந்தபட்சம் 30 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரையிலான பட்டாசுகள் விற்பனைக்கு இருக்கிறது. நாங்கள் வாங்கும் விலையிலிருந்து மிகவும் குறைவான லாபம் வைத்துக் கொடுத்து, அதிகளவு பட்டாசுகளை விற்பனை செய்து லாபம் பார்க்கும் நோக்கத்தில்தான் இதுபோன்று தள்ளுபடி கொடுக்கிறோம். இதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.'' என்றார். உதாரணத்திற்கு ஒரு பட்டாசு பெட்டியைக் காண்பித்த அவர், ''இந்த பெட்டியில் ரூ.1200 என்று அதிகபட்ச சில்லறை விலை (MRP) குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இது சிவகாசியில் 200 ரூபாய்க்கு கிடைக்கும் அதை நாங்கள் ரூ.280 என்று விற்பனை செய்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கான வகை பட்டாசுகளை விற்கும் போது லாபம் அதிகம் கிடைக்கிறது என்பதுதான் இப்படி விலை குறைப்பதற்குக் காரணம்.'' என்றார். சிவகாசிக்கு மிக அருகிலுள்ள சாத்தூரில் பட்டாசு ஆலை நடத்தும் ஒரு நிறுவனத்தின் விளம்பரத் துண்டறிக்கையில், 90 சதவீதம் தள்ளுபடி என்று கூறப்பட்டிருப்பதுடன் 162 வகையான பட்டாசுகளின் விலையும், 90 சதவீதம் கழித்த பின் விற்கப்படும் விலையும் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது. அதில் 60 ரூபாய் குருவி வெடி 6 ரூபாய்க்கு தருவதில் துவங்கி ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுப்பெட்டி, ரூ.10 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை வித்தியாசம், வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்திழுப்பதாகவுள்ளது. மதுரையில் தற்காலிக பட்டாசுக் கடை நடத்தும் கெவின் ராஜா, ''தீபாவளி முடிந்து சிவகாசியில் பட்டாசு உற்பத்தி துவங்கும் காலத்தில் அதாவது ஜனவரி, பிப்ரவரியில் பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்தால் அதற்கு அக்டோபர் மாதத்தில் ரூ.30 லட்சத்துக்கான பட்டாசு கிடைக்கும். அதே அளவு பட்டாசுகளை செப்டம்பர், அக்டோபரில் சென்று வாங்கினால் 20 முதல் 25 லட்ச ரூபாய் தர வேண்டியிருக்கும். நிரந்தர பட்டாசு உரிமம் வைத்திருப்பவர்கள், முதலிலேயே பட்டாசுகளை வாங்கி குடோனில் வைத்துக்கொள்வர்.'' என்றார். ''அவர்கள் 10 ரூபாய்க்கு வாங்கும் ஒரு வெடியை, 50 ரூபாய்க்கு சில்லறைக் கடைக்கு விற்பார்கள். அந்த பட்டாசு விலை ரூ.200 என்று எம்.ஆர்.பி. குறிக்கப்பட்டிருக்கும். அதை சில்லறைக்கடைக்காரர் 50 சதவீதம் தள்ளுபடி என்று விளம்பரம் செய்து 100 ரூபாய்க்கு விற்றாலே அவருக்கு 100 சதவீத லாபம் கிடைக்கும். இதில் அதிகபட்சவிலை என்பதே ஒரு கேம்தான். வாடிக்கையாளரை ஈர்க்கவே இப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது.'' என்றார். பெயர் கூற விரும்பாத மற்றொரு பட்டாசுக்கடைக்காரர், ''ஒரு புஸ்வாணம் பெட்டி எங்களுக்கு சிவகாசியில் 25 ரூபாய்க்குக் கிடைக்கும். அதில் விலை 500 ரூபாய் என்று எம்ஆர்பி இருக்கும். அதை சில்லறைக் கடைகளில் 100 ரூபாய்க்கு விற்பார்கள். நாங்கள் 90 சதவீதம் தள்ளுபடி என்று கூறி 50 ரூபாய்க்கு விற்போம். அதிலும் எங்களுக்கு 100 சதவீதம் லாபம் இருக்கிறது. '' என்றார். அதேபோல 900 ரூபாய் விலை குறிப்பிட்டுள்ள பட்டாசு பெட்டியை 120 ரூபாய்க்கு சிவகாசியில் வாங்கி 240 ரூபாய்க்கு விற்பதாகவும், ரூ.46க்கு வாங்கப்படும் ரூ.500 விலையுள்ள ஃபிளவர் பாட் பிக் என்ற பட்டாசை 80 ரூபாய்க்கும், டச் மீ ஃபால்ஸ் என்ற ரூ.1100 விலையுள்ள பட்டாசை 110 ரூபாய்க்கு வாங்கி 230 ரூபாய்க்கும் விற்பதாக பல்வேறு பட்டாசுக் கடைக்காரர்களும் தகவல் பகிர்ந்தனர். இதுபற்றி பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மாவட்ட பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவருமான சின்னச்சாமி, ''பட்டாசு விற்பனையில் 80–90 சதவீதம் தள்ளுபடி என்பது பெரிய பொய். இங்குள்ள சில்லறைக் கடைகளில் மட்டுமின்றி, சிவகாசியிலும் மொத்த விற்பனைக் கடைகளிலும் அப்படித்தான் தள்ளுபடி என்று விளம்பரம் செய்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் செயல். மக்களை ஈர்ப்பதற்கான ஒரு உத்தி. இதில் எங்களுக்கு உடன்பாடில்லை.'' என்றார். ''உதாரணமாக ஒரு ராக்கெட் பெட்டி 1200 ரூபாய் என்று விலை குறிக்கப்பட்டிருந்தால் சிவகாசியில் 200 ரூபாய்க்கு கிடைக்கும். அதை 300 ரூபாய்க்கு விற்பார்கள். இந்த விலைக்கு விற்றாலும், பட்டாசு விற்பனையில் செலவு போக விற்பனையாளர்களுக்கு அதிகபட்சமாக 30 முதல் 40 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். இந்த எம்.ஆர்.பி. விலையை ஆலைக்காரர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள். எம்ஆர்பி நிர்ணயிப்பதை சரி செய்ய வேண்டுமென்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.'' என்றார் அவர். பட்டாசுக்கடைகளில் இருந்த பல்வேறு வாடிக்கையாளர்களிடமும் பிபிசி தமிழ் பேசியபோது, பெரும்பாலானவர்கள் தள்ளுபடி என்பதைப் பார்த்தே கடைகளை தேர்வு செய்து வாங்க வந்ததும் தெரியவந்தது. கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த ராகவேந்திரன், ''சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 100 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுப் பெட்டியை 80 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்குவோம். இப்போது 80 சதவீதம், 90 சதவீதம் என்று தள்ளுபடி போட்டு விளம்பரம் செய்து பட்டாசு விற்கிறார்கள். அதேபோன்று பட்டாசுகளிலும் புதுப்புது ரகங்கள் குவிந்து இருப்பதால் அவற்றின் ஒரிஜினல் விலையைக் கணிக்க முடியவில்லை. '' என்றார். வடவள்ளியைச் சேர்ந்த திவ்யா, ''பட்டாசுப் பெட்டிகளில் இருக்கும் விலைக்கும், இங்கே விற்கும் விலைக்கும் இவ்வளவு வித்தியாசம் இருப்பதைப் பார்த்தால் இந்த பட்டாசுகளின் உண்மையான விலை என்னதான் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல இவ்வளவு விலை குறைவான பட்டாசுகளை வாங்கிச் சென்றால் அவை தரமாக இருக்குமா என்றும் சந்தேகம் கிளம்புகிறது. வெடித்துப் பார்த்தால்தான் தெரியும். ஆனால் இதற்கு முன்பாக இவ்வளவு தள்ளுபடி விலையில் பட்டாசுகளை வாங்கியதாக நினைவில்லை.'' என்றார். பட்டாசுப் பெட்டிகளில் குறிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கும், விற்பனை விலைக்கும் பெருமளவு வித்தியாசம் இருப்பதற்கு, பட்டாசு ஆலைக்காரர்களே காரணமென்று விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், அதற்கான காரணத்தை பட்டாசு ஆலை நிர்வாகிகள் விளக்குகின்றனர். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சிவகாசியிலுள்ள பிரபல பிராண்டடு பட்டாசு ஆலை நிர்வாகி பிரபு, ''இப்படி அதிகபட்ச விலை அதிகமாக நிர்ணயித்து பிரிண்ட் செய்வதற்கு வடமாநிலங்களில் உள்ள பட்டாசு விற்பனையாளர்களே காரணம். டெல்லி, குஜராத் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பே 50 சதவீதத்தில் துவங்கி 90 சதவீதம் வரை தள்ளுபடி என்று விளம்பரம் செய்து பட்டாசு விற்பனை செய்வார்கள். அந்த கலாசாரம் கடந்த 3 ஆண்டுகளாக இங்கேயும் பரவத்துவங்கிவிட்டது.'' என்றார். ''பட்டாசுகளை வாங்கும் மக்களின் பொருளாதாரத் திறனுக்கேற்ப ஒரே மாதிரியான பட்டாசுக்கு வெவ்வேறு மாநிலங்களுக்கும் வெவ்வேறு மாதிரியான அதிகபட்சவிலை குறிக்கப்படுகிறது. உதாரணமாக ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குறிக்கப்படும் தொகை, குஜராத் செல்லும் பெட்டிகளில் குறிக்கப்படாது. அதற்கு வேறு ஒரு விலை இருக்கும்.'' என்றார் பிரபு. தள்ளுபடி தருவதற்கான காரணத்தை விளக்கிய அவர், ''ஒரு லட்ச ரூபாய்க்கு பட்டாசு வாங்கும் ஒருவருக்கும், 10 லட்ச ரூபாய்க்கு பட்டாசு வாங்கும் ஒருவருக்கும் ஒரே விலைக்குத் தரமுடியாது என்பதால்தான் தள்ளுபடி என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. தள்ளுபடி இல்லையென்றால் வேறு ஆலைக்குப் போய்விடுவார்கள் என்பதால் 2 ஆயிரம் ரூபாய் எம்ஆர்பி குறிப்பிட்டுள்ள பட்டாசுப் பெட்டியை நாங்கள் 300 ரூபாய்க்குதான் கொடுப்போம். அதை அவர்கள் வாங்கிச் சென்று தங்கள் விருப்பத்திற்கேற்ப தள்ளுபடி என்று குறிப்பிட்டு விற்பார்கள்.'' என்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சிவகாசியில் பட்டாசு ஆலைகளிலேயே ஒரு பகுதியில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடந்து வந்ததாகக் கூறும் பட்டாசு ஆலை நிர்வாகிகள், சமீபத்திய ஆண்டுகளாக மொத்த விற்பனைக் கடைகள் புற்றீசலாகப் பெருகிவிட்டதால் 90 சதவீத ஆலைகளில் நேரடி விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர். இன்றைய நிலையில் சிவகாசியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமாக மொத்த விற்பனை பட்டாசுக் கடைகள் இருப்பதாகத் தகவல் பகிர்கின்றனர். இதுபற்றி பேசிய பட்டாசு ஆலை நிர்வாகி பிரபு, ''இது மிகவும் ரிஸ்க் நிறைந்த தொழில். சிறு விபத்து நடந்தாலும் பெருத்த நஷ்டம் ஏற்படும். விற்பனையாளருக்கும் இதே நிலைதான். அவர்களுக்கு விபத்து நடந்தாலும் விற்பனை இல்லாவிட்டாலும் நஷ்டமாகிவிடும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளாக போட்டி அதிகமாகிவிட்டதால் பட்டாசு உற்பத்தியாளர்களால் விலையைக் கூட்ட முடியவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு குருவி வெடியை 10 ரூபாய்க்கு விற்றோம். இப்போதும் அதே விலைக்கு விற்கக் காரணம் போட்டிதான்!'' என்றார். இதே கருத்தைத் தெரிவித்த மற்றொரு பட்டாசு ஆலை நிர்வாகி கதிரேசன், ''நீண்டகாலமாக இந்தத் தொழிலில் இருக்கும் பட்டாசு நிறுவனங்கள் மட்டுமே, குறிப்பிட்ட சதவீதம் லாபம் வைத்து ஒரே மாதிரியாக விலை நிர்ணயம் செய்கின்றன. மற்ற பட்டாசு ஆலை நிர்வாகங்கள், பட்டாசு விற்பனையாளர்களுக்குத் தகுந்தது போன்று விலையை நிர்ணயித்து, அளவுக்கு அதிகமாக தள்ளுபடி தருவதாகக் காட்டுகிறார்கள்.'' என்றார். பட்டாசு பெட்டிகளில் அதிகபட்சவிலை குறிக்கப்பட்டிருப்பதால், அதற்கேற்ப வரி செலுத்த வேண்டியிருக்குமா என்ற கேள்வியும் பல தரப்பிலும் எழுப்பப்படுகிறது. ஆனால் அதற்கும் ஜிஎஸ்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் கதிரேசன். விற்பனையாளருக்கு பட்டாசு விற்கப்படும் பில் தொகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி போடப்படுகிறது என்றார் அவர். பட்டாசு வாங்கும் விலையில் 18 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்தி பட்டாசு வாங்குவதாகக் கூறினார் பட்டாசு விற்பனையாளர் சங்க கோவை மாவட்டத்தலைவர் சின்னச்சாமி. அதிகபட்சவிலை அதாவது எம்ஆர்பி என்பதே இப்போது எம்சிபி (மேக்ஸிமம் சீட்டிங் பிரைஸ்) என்றாகி விட்டது என்று விமர்சிக்கிறார் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன். சமீபத்தில் புற்றுநோய் மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு தலையிட்ட பின் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், எல்லாப் பொருட்களிலும் இதே நிலைதான் என்றார். பிபிசியிடம் இதுபற்றி பேசிய கதிர்மதியோன், ''பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு, பொதுமக்களை விட டீலர், கடைக்காரர் நலனே முக்கியம். அதனால் அவர்கள் கேட்கும்படி விலையை பிரிண்ட் செய்து கொடுக்கின்றனர். இதனால்தான் எல்லாப் பொருட்களுக்கும் ஆலையிலிருந்து வெளியேறும்போது, உற்பத்திச் செலவு என்ன என்பதை அந்தப் பொருளில் குறிப்பிட வேண்டுமென்று 5 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.'' என்றார். ''மொத்த வர்த்தகத்தைக் கணக்கிட்டு, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆர்பி) அடிப்படையில் குறைந்தபட்ச வரியை நிர்ணயிக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். அப்படிச் செய்தால்தான் இந்த எம்ஆர்பி ஏமாற்றுவேலையை நிறுத்தமுடியும்.'' என்றார் கதிர்மதியோன். பட மூலாதாரம், Handout தள்ளுபடி இல்லாமல் பட்டாசு வர்த்தகமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மற்ற எல்லாப் பொருட்களிலும் இப்படி அதிகபட்ச சில்லறை விலை வைத்து தள்ளுபடி கூறி விற்கப்படும் போது, பட்டாசு விலை தள்ளுபடி மட்டுமே எல்லோராலும் விமர்சிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (TANFAMA) செயலாளர் சங்கர் இதுபற்றி பிபிசியிடம் விரிவாக விளக்கினார். ''இப்போது தள்ளுபடி இல்லாத பொருளே இல்லை என்றாகிவிட்டது. ஆனால் மற்றவர்களுக்கு ஆண்டு முழுவதும் வர்த்தகம் என்றால் எங்களுக்கு ஒரு நாள் அல்லது ஒரு வாரம்தான் வர்த்தகம். அதனால் அந்த ஒரு நாளில் அதிக தள்ளுபடி என்று விளம்பரம் செய்து வியாபாரம் செய்யும் பொருட்டே இப்படிச் செய்கின்றனர். உற்பத்திச்செலவு, லாபம் ஆகியவற்றுடன் 4 முதல் 6 மடங்கு அதிகபட்ச சில்லறை விலை வைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.'' என்றார் சங்கர். சிவகாசியில் தற்போது 1300க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இருப்பதாகவும், அவற்றில் 'டான்ஃபாமா' சங்கத்தில் நீண்டகாலமாக தொழில் செய்யும் பழமை வாய்ந்த 350 பட்டாசு ஆலைகள் உறுப்பினர்களாக இருப்பதாகவும் கூறிய அவர், அவற்றைத் தவிர்த்து தற்போது ஏராளமான பட்டாசு ஆலைகள் உருவாகிவிட்டதால் போட்டி அதிகமாகிவிட்டதாக தெரிவித்தார். மேலும் இதுபற்றி விளக்கிய சங்கர், ''உதாரணமாக 100 ரூபாய்க்கு நாங்கள் தயாரித்துத் தரும் ஒரு பட்டாசுக்கு ரூ.350 என்று விலை நிர்ணயிப்போம். அதில் அவர்கள் 60 சதவீதம் தள்ளுபடி என்று வைத்தால்தான் அந்தக் கடைக்கே நுகர்வோர் உள்ளே வருகிறார்கள். அதற்கேற்ப எம்ஆர்பி நிர்ணயிக்கிறோம். சரியான விலையைக் கூறி 20 சதவீதம் மட்டும் ஒருவர் லாபம் வைத்து விற்றால் அந்தக் கடைக்கு யாருமே வரமாட்டார்கள்.'' என்றார். சிவகாசியில் பட்டாசு மொத்த விற்பனை செய்யும் கடைகள் அதிகமாகிவிட்டதால் போட்டியும் தள்ளுபடியும் அதிகமாகிவிட்டதாகக் கூறிய சங்கர், ''80 சதவீதம், 90 சதவீதம் தள்ளுபடி என்பதைக் குறைப்பது குறித்தும், எம்ஆர்பி விலையை நிர்ணயிப்பது குறித்தும் நாங்கள் இப்போது சங்கத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். விரைவில் முடிவெடுக்கப்படும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
பட்டாசு விலை: சிவகாசிக்கும் மற்ற ஊர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏன்? 80% அல்லது 90% தள்ளுபடி எப்படி சாத்தியம்?