செழிக்காமல் வறண்டுபோன சிந்தியல் வெண்பா!

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
செழிக்காமல் வறண்டுபோன சிந்தியல் வெண்பா!

மூன்றடி கொண்ட சிந்தியல் வெண்பா வகை ஏன் சங்க இலக்கியங்களில் பெரிதும் பயன்படுத்தவில்லை என்பது பற்றி... சங்க இலக்கியங்கள்... - Gemini AI தமிழ்ச் செய்யுள் ‘பா’ வகைகளுள் முதலிடம் பெறுவது வெண்பா. ஏனைய பாக்களைவிட வரையறுக்கப்பட்ட இலக்கணக் கட்டுக்கோப்பு வெண்பாவுக்கு அதிகம். வெண்பாவுக்கு உரிய சீர்களோ தளைகளோ அல்லாத வேறு சீர்கள், தளைகள் வெண்பாவில் இடம்பெற முடியாது. இத்தகைய கடுங்கட்டுப்பாடுகள் காரணமாகவே வெண்பாவைப் ‘வன்பா’ எனக் குறிப்பிடுவர்; ‘வெண்பா புலவர்க்குப் புலி’ எனவும் கூறுவர். இப்பாவகை (வெண்பா), சங்கம் மருவியகால இலக்கியங்களில்தான் மெல்ல மெல்ல அதிகமாகி, வளர்ச்சியடைந்து தனித்த யாப்பு வடிவமாகி நிற்கிறது. தமிழின் தொன்மை இலக்கண நூலாகிய தொல்காப்பியம், வெண்பா யாப்பு ஐந்து வகைப்படும் என்கிறது. அவை, நெடுவெண்‌பாட்டு, குறுவெண்பாட்டு, கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச்‌ செய்யுள்‌ என்றே வரையறுத்துள்ளது. ஆனால், தொல்காப்பியருக்குப் பின்வந்த யாப்பருங்கலம், வெண்பா வகைகளாக குறள்‌ வெண்பா, சிந்தியல்‌ வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா எனப்‌ புதிதாகப் பாகுபடுத்தியது. [“குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை / என்வைந் தாகும் வெண்பாத் தானே” - யாப்பருங்கலம், நூற்பா, 58 ] ‘வெண்பா’ அடி வரையறை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு அடிகளால் அமைவது குறள் வெண்பா, மூன்று அடிகளால் ஆவது சிந்தியல் வெண்பா, நான்கு அடிகள் கொண்டது இன்னிசை வெண்பா. நான்கடிகள் பெற்று, இரண்டாமடியின் நான்காம் சீரில் தனிச் சொல் வருமாயின் அது நேரிசை வெண்பா, ஐந்து முதல் பன்னிரெண்டு அடிகள் வரையுள்ள வெண்பா அமைப்பு பஃறொடை வெண்பா என்பது அறிந்து வைத்திருக்க உரியது. சிந்தியல் வெண்பா தமிழ் யாப்பிலக்கணத்தில் சிந்தியல் வெண்பா என்பது மூன்று அடிகளைக் கொண்டமையும் ஒரு தனித்துவமான பாவகையாகும். முதல் இரண்டு அடிகள் நான்கு சீர்களையும் (அளவடி), இறுதி அடி மூன்று சீர்களையும் (சிந்தடி) கொண்டிருக்கும். சிந்தியல் வெண்பாவும், 'நேரிசைச் சிந்தியல் வெண்பா', 'இன்னிசைச் சிந்தியல் வெண்பா' என இரண்டு வகைகள் கொண்டது. சிந்தியல் வெண்பாவின் சிறப்பு இரண்டே அடிகளைக் கொண்ட குறள் வெண்பாவுக்கும், நான்கடிகள் கொண்ட அளவியல் (நேரிசை / இன்னிசை) வெண்பாவுக்கும் இடைப்பட்ட பாவடிவமாக சிந்தியல் வெண்பா' அமைகிறது. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைப்போல மிகக் குறைந்த சொற்களில் (மொத்தம் 11 சீர்கள்) ஒரு முழுமையான கருத்தை அல்லது காட்சியைப் பதிவு செய்யும் சுருக்கமான கட்டமைப்பு இந்தப் பா வகையிடம் உள்ளது. மேலும், சாதாரணமாக இரண்டு அடிகளில் சொல்ல முடியாத, ஆனால் நான்கு அடிகளுக்கு நீட்டவும் தேவையில்லாத கருத்துகளைச் சொல்வதற்கு - மூன்று அடி வடிவம் - ஒரு கூர்மையான வெளிப்பாடு; மிகச் சரியான வாகனம். (‘தேவைக்களவான சொற்கள் போதும்!’ - “Brevity is the soul of wit” - என்ற அடிப்படை!) கூடுதலாக, வெண்பாவுக்குரிய ‘செப்பலோசை’ சிதையாமல், மூன்றே அடிகளில் ஒரு இசை நயச் சுழற்சியையும் (Rhythm) நிறைப்பது சிந்தியல் வெண்பாவின் அழகியலைக் கூட்டுகிறது. இலக்கண நூல்களில் சிந்தியல் வெண்பா இருப்பும் தொடர்ச்சியும் தொல்காப்பியர் சிந்தியல் வெண்பா என நேரடியாகப் பெயர் சுட்டவில்லை. பின்வந்த யாப்பருங்கலம், "வெண்பாப் பொதுவியல் பான் முச்சீரான் ஈற்றடி முற்றுப்பெறின் சிந்தியல் வெண்பா" (நூற்பா 186) என்று இலக்கணம் சொல்கிறது. அதாவது, ‘வெண்பாவிற்குரிய பொதுவான இலக்கணங்கள் அமைந்து, மூன்று அடிகளால் மட்டுமே பாடப்படும் வெண்பா ’சிந்தியல் வெண்பா’ என்பது யாப்பருங்கலம் வகுத்த இலக்கணம். இதுபோலவே யாப்பருங்கலக்காரிகையும் சிந்தியல் வெண்பாவின் இலக்கணத்தையும் அவ்வெண்பாவின் ஈற்றடி அமைப்பையும் வரையறை செய்துள்ளது. நேரிசை இன்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால் / நேரிசை இன்னிசைச் சிந்தியல் ஆகும்; நிகரில் வெள்ளைக் /கோரசைச் சீரும் ஒளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற /சீருடைச்சிந்தடியேமுடிவாமென்று தேறுகவே. - ( நூற்பா 25) இதன் விளக்கம்: ‘நேரிசை வெண்பாப் போல இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் பெற்று, மூன்றடியாய் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. இன்னிசை வெண்பாப்போலத் தனிச்சொல் இன்றி, மூன்றடியாக வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. வெண்பாவின் ஈற்றடி சிந்தடியே (மூன்று சீர்) ஆகும். ஈற்றடியின் ஈற்றுச்சீரானது ஓரசைச் சீராகவோ, காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளையுடைய, குற்றியலுகர ஈறுகொண்ட நேரீற்று இயற்சீராகவோ வரும்.’ தமிழிலக்கியங்களில் சிந்தியல் வெண்பா பண்டைய தமிழ் இலக்கியங்கள் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத்தொகை நூல்கள் - பெரும்பாலும் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் போன்ற யாப்புகளால் ஆனவை. குறள் வெண்பா (திருக்குறள்), நேரிசை வெண்பா (நாலடியார், நீதிநூல்கள்) அளவுக்குச் சிந்தியல் வெண்பாக்கள் தமிழ் இலக்கியங்களில் பயனாகவில்லை. சிந்தியல் வெண்பாக்களால் மட்டுமே ஆன தனி நூல்கள் ஏதும் முற்காலத்திலில்லை; காலத்தொகுப்புகளிலும் காணோம். இருப்பினும், 'யாப்பருங்கலக் காரிகை' போன்ற இலக்கண நூல்களில் சிந்தியல் வெண்பாவிற்கான மேற்கோள் பாடல்கள் காணக் கிடைக்கின்றன. ஆனால், அம்மேற்கோள் பாடல்கள் எந்தநூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன என்ற விவரங்கள் நாம் அறியக் கிடைக்கவில்லை. தொல்காப்பியருக்குப் பின்வந்த (யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை உள்ளிட்ட) இலக்கண நூல்கள் புதிதாகக் குறிப்பிட்டு இலக்கணம் வகுத்த சிந்தியல் வெண்பா எனும் பா வகை ஏன் பிற்காலத்தில் செழித்து வளரவில்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. சங்கம் மருவியகாலப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் - ஆசாரக்கோவை எனும் ஒரே ஒரு நூல் தவிர்த்து - சிந்தியல் வெண்பாக்களின் பயன்பாட்டில் கடும் வறட்சியே காட்சி. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய ஆசாரக்கோவை பெருவாயின் முள்ளியார் இயற்றியதாகும். ஆசாரங்களது கோவை அல்லது ஆசாரங்களைக் கோத்த கோவை என நூற் பெயர் விரியும். இந்நூலின் பாக்கள், பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி முதலிய இலக்கியங்களின் உரைகளிலும், இலக்கண விளக்கம், நன்னூல் பிரயோக விவேகம் முதலான இலக்கணங்களின் உரைகளிலும் மேற்கோள்களாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. “இலக்குமிவிலாசம் பொருந்திய வண்கயத்தூரில் வாழும் பெருவாயின் முள்ளி என்பவர், சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கி, ஸ்மிருதிகளில் எல்லாரும் அறியத்தக்க சதாசாரங்களை ஒன்றாகத் திரட்டி, ஆசாரக்கோவை என்னும் இந்நூலை அருளிச்செய்தார்’’ என இந்நூலின் தற்சிறப்புப் பாயிரம் கூறியிருப்பதிலிருந்து, இந்நூலை இயற்றியவர் சைவரென்பதும், நூல் வடமொழியிலுள்ள சுக்ர ஸ்ம்ருதியிலிருந்து தொகுத்தவை என்பதும் விளங்கும். இந்நூலுக்கு ஆதாரம் ஆரிடம் என்று தற்சிறப்புப் பாயிரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 'ஆரிடம்' என்பது வடமொழி இருடிகள் (ரிஷிகள்) எழுதிய நூல்களைக் குறிக்கும். குறிப்பாக, வடமொழியில் உள்ள மனு ஸ்மிருதி, சுக்ரஸ்மிருதி, போதாயன தர்மசூத்திரம் போன்ற வைதிக ஆசார நூல்களின் கருத்துகளைத் தழுவியே இந்நூலைப் பெருவாயின் முள்ளியார் தொகுத்துள்ளார் என்பது அறிஞர் பலரது முடிபு. சங்க இலக்கியங்களிலோ அல்லது திருக்குறளிலோ பிறப்பின் அடிப்படையிலான வருணாசிரமக் கோட்பாடு கிடையாது. ஆனால், வடமொழி ஸ்மிருதிகளை அடியொற்றி உருவானதால் ஆசாரக் கோவையில் நால்வருண வேறுபாட்டின் அடர்நிழல் முற்றிலும் படிந்துள்ளதைக் காண முடிகிறது. இந்நூல், முந்தைய தமிழிலக்கியங்கள் மரபாகப் போற்றி வந்துள்ள ‘பிறப்பில் சமத்துவம்’ (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்); ‘மானுடப் பொதுமை’ (யாதும் ஊரே, யாவரும் கேளிர்); போன்ற தமிழ்ச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட வைதிகக் கோட்பாடுகளை நேரடியாக வெளிப்படுத்துகிறது. சமுதாயத்தில் உள்ள மனிதர்களை அவர்களின் குலம் அல்லது வருணத்தின் அடிப்படையில் பிரித்து, குறிப்பிட்ட சில கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற தொனி பாடல்களில் மறைமுகமாக வெளிப்படுகிறது. மனிதர்களைப் "புனிதமானவர்கள்" என்றும் "தீட்டுடையவர்கள்" (அசுத்தமானவர்கள்) என்றும் பிரித்துப் பார்க்கும் வைதிக சமூகப் படிநிலையின் தாக்கம் நூலெங்கும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டுகளாக நான்கு வேதங்களை ஓதும் அந்தணர்களைத் தன்குலப் பெரியோர்களைப் போல மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்; வான்முறை யான்வந்த நான்மறை யாளரை /மேன்முறைப்பாற்றம்குரவரைப்போலொழுகல் / நூன்முறை யாளர் துணிவு. - [ஆ.கோ. பாடல்- 61 ] எச்சிலார்‌ தீண்டார்‌ பசுப்பார்ப்பார்‌ இத்தேவர்‌ /உச்சர்‌ கலையோ டிவையென்ப யாவரும்‌ /திட்பத்தால் தீண்டாப்‌ பொருள்‌. - [ ஆ.கோ. பாடல் - 5 ] ‘இருதேவர்‌ பார்ப்பார்‌ இடைபோகார்‌....’ - [ஆ.கோ. பாடல் - 31] எந்த இடத்திலும் (கூட்டத்திலும்) இரண்டு தேவர்‌ நடுவிலும்‌ பல பார்ப்பார்‌ நடுவிலும்‌ புகுந்து போதல்‌ கூடாது எனவும், ‘....நீர்தொடார்‌ நோக்கார்‌ புலை’ - [ஆ.கோ. பாடல் -13 ] உடம்பின்மேல் நீரைத்‌தெளித்துத் தன்னைப் புனிதப்படுத்திக் கொள்ளாமல் ஒரு ‌புலையனைக் கண்ணால் தீண்டலும்‌ ஆகாது எனவும், பஞ்சபூதம், பிராமணர்‌, பசு, சந்திரன், சூரியன் ‌என்பவைகளைச்‌ தன்னுடம்புபோலப்‌ போற்றாவிட்டால்‌, தன்னுடம்பிலுள்ள ஐந்து பூதங்களும் (தெய்வங்கள்) ‌உடனே நீங்கிவிடும்‌ [ ஆ.கோ. பாடல் -15] என்ற அச்சுறுத்தலுடனும் ஆசாரங்கள் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் ‘உண்ணல், உடுத்தல், உறங்கல், நீராடல், காலக்கடன், ஐங்குரவரை வழிபடல், இல்லொழுக்கம், மன்னரைச் சேரந்தொழுகல் முதலிய அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கான நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் பல தற்கால வாழ்வியல் நடைமுறைகளோடு பெரிதும் முரண்படும் நிலை மிக வெளிப்படை. ஆசாரக்கோவையில் கூறப்பட்டுள்ள சில விதிகள் இன்றைய நவீன, அறிவியல், பகுத்தறிவுப்பூர்வமான சமுதாய வாழ்க்கை நடைமுறைகளோடு, நேரடியாக முரண்படுகின்றன. சான்றுகளாக - இந்நூலிலுள்ள 100 பாடல்களில் உள்ள ஒரே ஒரு குறள் வெண்பாப் பாடல் (33) கூறும் ஆசாரம்: பகற்றெற்கு நோக்கார்‌; இராவடக்கு நோக்கார்‌ / பகற்பெய்யார்‌ தீயினுள்‌ நீர்‌. இதன் பொருள்: பகலில்‌ தெற்கு நோக்கியும்‌ இரவில்‌ வடக்கு நோக்கியும்‌ இருந்து மலசலம்‌ கழித்தலாகாது; பகலில்‌ நெருப்பிலே தண்ணீரை ஊற்றலாகாது; ‘உண்ணுங்கால்‌ நோக்கும்‌ திசைகிழக்கு...’ ’‌[ஆ.கோ. பாடல் - 20] உணவருந்தும்போதல்லாம் கிழக்குத் திசையைப் பார்த்து அமர்ந்துதான் உண்ண வேண்டும் (எல்லா உணவகங்களிலும் இது சாத்தியமா?); ‘தலையுரைத்த எண்ணெயால்‌ எவ்வுறுப்பும்‌ தீண்டார்‌...' [ஆ.கோ. பாடல் -12] தலையில்‌ தேய்த்த எண்ணெயை வழித்து உடம்பின் மற்ற அவயங்களில்‌ பூசுதலாகாது. ‘முதியவரைப்‌ பக்கத்து வையார்‌...’ [ஆ.கோ. பாடல்-26] உணவருந்தும்போது, தம்மைவிட‌ முதியவரைத்‌ தமது பக்கத்திலே வைத்து உண்ணலாகாது. இருகையால்‌ தண்ணீர்‌ பருகார்‌. ஒருகையால்‌ / கொள்ளார்‌. கொடாஅர்‌ குரவர்க்‌ இருகை / சொதியார்‌ உடம்பு மடுத்து. - [ஆ.கோ. பாடல் -28]; அதாவது, தண்ணீரை இரண்டு கைகளால்‌ மொண்டும்‌ வாங்கியும்‌ குடிக்கலாகாது, பெரியோர்‌ கொடுப்பதை ஒருகையால்‌ வாங்குதலும்‌ அவர்க்குக் ‌கொடுப்பதை ஒருகையால் ‌கொடுத்தலும் ‌கூடாது. உடம்‌பை இரண்டு கையாலும்‌ ஒருபோதும் சொறியலாகாது. பெண்ணடிமைத்தனம் மேலோங்கியிருந்த காலத்து வடநூல் ஸ்மிருதிகளின் தழுவல் என்பதால், இன்றைய பாலினச் சமத்துவ (Gender Equality) சிந்தனைகளுக்கு ஒவ்வாத ஆசாரக் கட்டுப்பாடு: ‘தீண்டாநாள்‌ முந்நாளும்‌ நோக்கார்...’‌. [ஆ.கோ. பாடல் - 42 ] மனைவியர்க்கு மாதப்பூப்பு (மாதவிலக்கு) நிகழ்ந்தால்‌ அம்மூன்று நாளும் மனைவி முகத்தைக் கூடக்‌ கணவன்‌ கண்ணாலுங் காணுதலாகாது (சிறுவீடுகளிலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் வாழ்வோர் எங்கே போவது?); இவைபோக, நாய், பூனை போன்ற விலங்குகள் தீண்டினாலோ அல்லது அவற்றின் எச்சில் பட்டாலோ உடனே குளித்துவிட வேண்டும்; (செல்லப் பிராணிகள் வளர்க்கக் கூடாது போலும்) 24 மணி நேரமும் ஓயாது இயங்கும் இன்றைய நவீனத் தொழில்நுட்ப உலகில் அந்திப்பொழுதில் படிக்கக் கூடாது, பிரயாணம் செய்யக் கூடாது என்பன போன்ற விதிகளும் காலமுரண்களே. ஆசாரக்கோவை, திருக்குறளைப்போல "மானுடப் பொதுநிலை’’ பேசும் நூலல்ல; தமிழ் மொழியில் அமைந்த, காலாவதியான, ஒரு வைதிக ஒழுக்கவியல் நூலாகும். இந்நூலில் தற்காலத்திற்கு ஒவ்வாத சடங்குகள், நடைமுறை விதிகள், நால்வருணச் சார்புகளும் விரவிக் கிடப்பது கண்டோம். இருப்பினும், தற்கால மாந்தர் இந்நூலில் இருந்து – காலத்திற்கு ஒவ்வாத வைதிகச் சடங்கு நெறிகளைப் புறந்தள்ளிவிட்டு- எடுத்துக் கொள்ள வேண்டியவையும் உண்டு. அகத்தூய்மை, நன்றியறிதல், இன்சொல், சகிப்புத்தன்மை (அகிம்சை), கல்வி, பெரியோரை மதித்தல், பொது சுகாதாரம் போன்ற பொது நற்பண்புகளை இந்நூல் பேசுகிறது. அவை கொள்ள உரியவை. ஆசாரக்கோவையில் சிந்தியல் வெண்பா பயன்பாடு ஆசாரக்கோவை, தற்சிறப்புப் பாயிரம் நீங்கலாக, நூறு வெண்பாக்கள் கொண்டது. அந்த 100 வெண்பாக்களில் குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்கிற வெண்பாவின் வகையெல்லாம் உண்டு. சங்க நூல்கள், சங்கம் மருவியகாலத்து நூல்கள் யாவற்றிலும் சிந்தியல் வெண்பாவின் இருப்பைத் தேடிக் காண்பது அரிதினும் அரிதாக உள்ள இலக்கியச் சூழலில், ஆசாரக்கோவை என்ற ஒரு நூலில் மட்டும் மூன்றடிச் சிந்தியல் வெண்பாவின் பயன்பாடு மிக அதிகமான எண்ணிக்கையில் 100 -க்கு 53 என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் - அமைத்திருப்பது விரிவியப்புக்குரியது. நூல் முழுவதுமாக இல்லாவிடினும், புலவர் பெருவாயின் முள்ளியார் வழங்கியுள்ள ஆசாரக்கோவையின் தனித்தன்மை, ஒரு தமிழ் நூலில், மிக அதிக எண்ணிக்கையில் (53/100) சிந்தியல் வெண்பாக்கள் கொண்டு அமைந்திருப்பதாகும். சிந்தியல் வெண்பா வகை ஏன் செழிக்கவில்லை? பொதுவாகவே வெண்பாவுக்கு கடுமையான இலக்கண விதிகள் உண்டு. சாதாரணமாக, நான்கடிகளுள்ள வெண்பாவில் சொல்ல விரும்பும் ஒருகருத்தை விரித்து விளக்கக் புலவருக்கு ஓரளவு போதுமான இடம் கிடைக்கும். திருக்குறளின் ஏழு சீர்கள்கொண்ட ஈரடிக் குறள் வெண்பாவில் தன்காலத்தில் வள்ளுவரால் (மட்டுமே) 1330 குறட்பாக்கள் ஒவ்வொன்றிலும் சுருக்கமாக நீதிக் கருத்தைச் சொல்லிவிட முடிந்தது. ஆனால், நான்கிற்கும் இரண்டுக்கும் இடையிலான - மூன்று அடிகளுக்குள் - தளை தட்டாமல் சொற்களைக் கோர்த்து, கருத்தையும் அந்தரத்தில் தொங்கவிடாமல் முழுமையாக முடிப்பது புலவர்களுக்கு கடுஞ்சவாலாக இருந்திருக்கிறது போலும். யாருமே சிந்தியல் வெண்பாக் கோர்த்து நூல் நெய்யத் துணியக் காணோம். இலக்கியத்திலிருந்துதானே இலக்கணம் வந்திருக்க வேண்டும்? தொல்காப்பியருக்குப் பின்வந்த இலக்கண நூல்களில், பா வகைகளில் ஒன்றாகச் சிந்தியல் வெண்பா குறிப்பிடப்பட்டிருப்பது பற்றியும், அந்த நூல்களில் சிந்தியல் வெண்பாவிற்கான எடுத்துக்காட்டுகளாக மூன்றடிச் சிந்தியல் வெண்பாப் பாடல்கள் பல காட்டப்பட்டுள்ளன; ஆனால், அவை எந்த நூல்களைச் சேர்ந்தவை என்ற விவரங்களேதும் எங்கும் காணோம் என்பதும் முன்னரே அறிந்து வந்துள்ளோம். செழிக்காமல் வறண்டுபோனதே சிந்தியல் வெண்பா என்ற ஆதங்கத்தில், ஒருவேளை, இலக்கண நூல்கள் எடுத்துக்காட்டிய சிந்தியல் வெண்பாக்கள் இடம்பெற்றிருந்த நூல்கள் அழிந்துபட்டிருக்கும் அல்லது இலக்கண நூலாசிரியர்களே அந்த எடுத்துக்காட்டுப் பாடல்களை யாத்திருக்க வேண்டும் என்ற விசாலயூகமே நமக்குத் தற்போதைய சாத்தியமாகிறது. [கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்] தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை