பட மூலாதாரம், Gurpreet Chawla/BBC "இப்போது எங்கள் மகனைக் காப்பாற்ற மோதி அரசாங்கத்தாலும் மோதியாலும் மட்டுமே முடியும்; மற்ற அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. நாங்கள் அனைத்து நீதிமன்றங்களையும், ஏன் சௌதி அரேபியாவின் உச்ச நீதிமன்றத்தைக்கூட அணுகிப் பார்த்துவிட்டோம்; ஆனாலும் அவருக்கான தண்டனை மாறவில்லை." பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியின் சுஜான்பூர் வட்டாரத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜிந்தர் சிங்கின் வயதான பெற்றோரின் வார்த்தைகள் இவை. சௌதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பல்ஜிந்தர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது குடும்பத்தினர் இந்திய மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளிடம் உதவி கோரி வருகின்றனர். பல்ஜிந்தர் சிங் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். பஞ்சாபில் உள்ள பல்ஜிந்தர் சிங்கின் வீடு உறவினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிறரின் வருகையால் எப்போதும் பரபரப்பாக உள்ளது. வீட்டில் அவரது வயதான பெற்றோர்கள், மனைவி மற்றும் 2 சிறு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினரின் முகங்களில் கவலையும் இயலாமையும் குடிகொண்டுள்ளன. குடும்பத்தினரின் கூற்றுப்படி, பல்ஜிந்தர் சிங் 2024 முதல் சௌதி அரேபிய சிறையில் உள்ளார். அதற்கு முன், அவர் 2017 முதல் வேலைக்காக துபாயில் வசித்து வந்தார் மற்றும் லாரி ஓட்டுநராகப் பணியாற்றினார். 2023-ல் விடுமுறைக்காக ஊருக்கு வந்து சென்ற பிறகு, அவர் மீண்டும் வெளிநாடு சென்றதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவலின்படி, "பிப்ரவரி 6, 2024 அன்று பல்ஜிந்தர் சிங் துபாயிலிருந்து சௌதி அரேபியாவிற்கு லாரியில் சென்று கொண்டிருந்தார். சௌதி எல்லையை அடைவதற்கு முன் அவர் சிறிது நேரம் நின்றிருந்த போது, ஒரு நபர் சௌதி அரேபியாவில் வசிக்கும் தனது வயதான தந்தையின் வீடியோவைக் காண்பித்து, அங்கு ஒரு மருந்துப் பொட்டலத்தைக் கொண்டு சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்." End of அதிகம் படிக்கப்பட்டது அந்த நோய்வாய்ப்பட்ட முதியவருக்கு மருந்து கொடுப்பதற்காகவே பல்ஜிந்தர் அந்தப் பொட்டலத்தை எடுத்துச் சென்றார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இருப்பினும், துபாய்-சௌதி எல்லையில் லாரியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அந்தப் பொட்டலத்திலிருந்து போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது; அதைத் தொடர்ந்து பல்ஜிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். சௌதி அரேபியாவிற்கு வந்து அந்தப் பொட்டலத்தைப் பெற்றுக் கொள்ளவிருந்த நபரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். வழக்கின் விசாரணையின் போது அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம், Gurpreet Chawla/BBC பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு பல்ஜிந்தரின் தந்தை ஜஸ்விந்தர் சிங், தங்கள் குடும்பம் முன்பு இயல்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகக் கூறுகிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்; இருவரும் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். இந்த குடும்பத்தினர் தங்களை 'அம்ரிததாரி குர்சிக்' (தீட்சை பெற்ற சீக்கிய) குடும்பமாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், பல்ஜிந்தர் கைது செய்யப்பட்ட பிறகு, ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கையும் மாறிவிட்டது. ஜஸ்விந்தர் சிங் கூறுகையில், "நாங்கள் பல்வேறு நீதிமன்றங்களில் இந்த வழக்கை எதிர்த்துப் போராடினோம்; ஆனால் இப்போது உச்ச நீதிமன்றமும் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்துவிட்டது." என்றார். இதையடுத்து, அக்குடும்பத்தின் நம்பிக்கை இப்போது இந்திய அரசின் மீது உள்ளது. பல்ஜிந்தரின் மனைவி சுனில் லதா, தனது கணவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து வீட்டில் சூழல் மாறிவிட்டதாகக் கூறுகிறார். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சிறையிலிருந்து பல்ஜிந்தர் தொலைபேசியில் பேசினாலும், ஏதேனும் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையில் அக்குடும்பத்தினர் தினமும் பிரார்த்தனை செய்கிறார்கள். சுனில் லதா கூறுகையில், "நாங்கள் பஞ்சாபில் உள்ள பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பல தலைவர்களைச் சந்தித்துள்ளோம். இது தவிர, உதவி கோரி இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் பிரதமர் நரேந்திர மோதிக்கும் மின்னஞ்சல்களும் அனுப்பப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார். துபாயில் வசிக்கும் பல்ஜிந்தரின் தம்பியும், உதவி கோரி இந்திய அரசுக்கு மின்னஞ்சலும், இந்தியத் தூதரகத்திற்குக் கடிதமும் அனுப்பியுள்ளார். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று அக்குடும்பத்தினர் கூறுகின்றனர். சுனில் லதா கூறுகையில்,"என் கணவர் ஒருபோதும் போதைப்பொருள் பயன்படுத்தியதில்லை; இந்தியாவில் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பல்ஜிந்தர் ஒரு அம்ரிததாரி குர்சிக் ஆவார்; அவர் உடல்நலக்குறைவுள்ள முதியவர் ஒருவருக்காக மருந்து பொட்டலம் ஒன்றை மட்டுமே எடுத்துச் சென்றார்." என்று தெரிவித்தார். அவரது 12 வயது மகள் சில கேள்விகளை மட்டுமே கேட்பதாகவும், ஆனால் அவரது இளைய மகன் தொடர்ந்து தன் தந்தையைப் பற்றி விசாரிப்பதாகவும் சுனில் லதா கூறுகிறார். குழந்தைகளின் பல கேள்விகளுக்குத் தங்களிடம் பதில் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். மறுபுறம், இந்த அதிர்ச்சியால் வயதான பெற்றோரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சௌதி அரேபியாவில் பல்ஜிந்தர் சிங்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசு மீது மட்டுமே தங்களுக்கு இறுதி நம்பிக்கை இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்திய அரசு சௌதி அரேபிய அரசிடம் இந்த விவகாரத்தை எடுத்துரைத்து, பல்ஜிந்தருக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். பட மூலாதாரம், Gurpreet Chawla/BBC சௌதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் பல்ஜிந்தர் சிங்கின் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மறுஆய்வு மனுவைத் (cassation petition) தாக்கல் செய்த வழக்கறிஞர் அக்பர் அல்-முதைரி, மின்னஞ்சல் வாயிலாக இந்த வழக்கு குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். வழக்கு நடவடிக்கைகளின் இறுதிக்கட்டமான உச்ச நீதிமன்றத்திலான மறுஆய்வு நடவடிக்கைகளில் மட்டுமே தனது பங்கு இருந்ததாக அவர் விளக்கினார். அவரது கூற்றுப்படி, விசாரணை நீதிமன்றத்திலோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திலோ அவர் பல்ஜிந்தர் சிங்கிற்காக ஆஜராகவில்லை. அவருக்கு கிடைத்த தகவலின்படி, இந்த இரண்டு நிலைகளிலும் பல்ஜிந்தர் சார்பில் ஆஜராக எந்த வழக்கறிஞரும் இருக்கவில்லை. உச்ச நீதிமன்ற நிலையில், பல்ஜிந்தர் சிங்கின் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ததாகவும், அவருக்குச் சாதகமான அனைத்து சட்டப்பூர்வமான காரணங்களையும் வாதங்களையும் முன்வைத்ததாகவும் அந்த வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், சௌதி அரேபிய உச்ச நீதிமன்றம் 'தாசீர்' (Tazir) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ததன் மூலம், அந்த மறுஆய்வு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தற்போது பல்ஜிந்தர் சிங்கின் குடும்பத்தினர் இந்திய அரசின் தலையீட்டை நாடுகின்றனர். சௌதி அரேபிய அதிகாரிகளிடம் இவ்விவகாரத்தை எடுத்துரைத்து, பல்ஜிந்தருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையிலிருந்து அவருக்கு நிவாரணம் பெற்றுத்தர சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் அக்குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
சௌதியில் இந்தியருக்கு மரண தண்டனை - 2 குழந்தைகளுடன் பரிதவிக்கும் மனைவி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk