செய்தியாளர் -ராஜ்குமார்.ர “இவ்வளவு நகை... இவ்வளவு பணம்...” என ஆடம்பர வாழ்க்கை குறித்த வீடியோக்களை ஆன்லைனில் பதிவிட்டு வந்த யூடியூபர் வீட்டின் பின்பக்கக் கதவை கட்டிங் மெஷின் மூலம் உடைத்து, 118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற சம்பவம் வைரலாகி இருந்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. மத்தியப் பிரதேசம் சிவபுரியைச் சேர்ந்த யூடியூபர் ரச்சனா குர்ஜர், தனது வீடியோக்களில் வீட்டின் அமைப்பு, தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றைக் காட்டியிருந்தார். இதையடுத்து, அதிகாலை நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், குடும்பத்தினரை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் என சுமார் 8 முதல் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்பட்டது. பின்னர், இந்தச் சம்பவம் குறித்து அவர் அழுதபடி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இதேபோன்ற சம்பவம் ஒன்று தமிழகத்திலும் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டன் குடியிருப்பில் வினோத்குமார் - மதுமிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மதுமிதா யூடியூபராக இருந்து வருகிறார். தனது ஆன்லைன் வீடியோக்களில் தன்னிடம் உள்ள பணம் மற்றும் நகைகள் தொடர்பான காட்சிகளையும் அவர் வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரிடம் இவ்வளவு நகை மற்றும் பணம் இருப்பது குறித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை குழந்தைக்கு துணிகள் வாங்குவதற்காக தம்பதியினர் வெளியே சென்றுள்ளனர். பின்னர் இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 118 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், மேலும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து அகற்றி, கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறுகின்றனர். கொள்ளை நடந்த விஐபி கார்டன் குடியிருப்பைச் சுற்றிலும் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, கொள்ளையர்களின் நடமாட்டம் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில், சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இவ்வளவு பெரிய அளவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆடம்பர வாழ்க்கையை ஆன்லைனில் பதிவிட்ட YOUTUBER.. வீடு புகுந்து 118 சவரன் அபேஸ்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk