பட மூலாதாரம், Reuters சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு தெளிவான நோக்கம் உள்ளது. சீனா ஒரு வல்லரசாக உருவெடுப்பதை அமெரிக்கா தடுக்க முயற்சிப்பதாக சீனா கருதுகிறது. குறிப்பாக வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் தைவான் விவகாரங்களில் அமெரிக்கா தனது பாதையிலிருந்து விலக வேண்டும் என்று சீனா விரும்புகிறது. இந்தப் பயணத்தின் போது டிரம்ப், ஷி ஜின்பிங்குக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பை அளித்தபோதிலும், சீன அதிபர் தான் விரும்பிய அனைத்தையும் பெறவில்லை. வர்த்தகப் போரில் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் இன்னும் சில மாதங்களுக்கு மட்டுமே, அதாவது நவம்பர் முதல் ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டபோது, இரு நாடுகளும் தங்களது வரி விதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தின. இதன் மூலம் பதற்றம் மேலும் அதிகரிப்பது தடுக்கப்பட்டது. டிரம்பின் அதிபர் பதவிக்காலத்தில் மீதமுள்ள காலத்தை எப்படியாவது சமாளிக்க ஷி ஜின்பிங் முயற்சித்து வரும் நிலையில், குறைந்தது ஓராண்டுக்காவது இந்தப் போர் நிறுத்தம் நீடிக்கும் என சீனா எதிர்பார்த்தது. அதாவது, வரி விதிப்புகள் தொடர்பான முக்கியப் பிரச்னைகள், அரிய கனிமங்களின் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்காவின் அதிநவீன சிப்களுக்கான அணுகல் ஆகிய விவகாரங்கள், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக மீண்டும் தள்ளிவைக்கப்படுகின்றன என்பது தான் இதன் பொருள். நீண்டகால சலுகைகளை வழங்குவதற்கு முன்பு, ஒப்பந்தத்தின் கீழ் சீனா தனது பங்கை நிறைவேற்றுவதற்கு மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதை இது உணர்த்துகிறது. End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஷி ஜின்பிங்கைப் பொறுத்தவரை அவரது நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் சிக்கலில் உள்ளது என்பதே கசப்பான உண்மையாகும். உலக அளவில் சீனா மிகப்பெரிய அளவில் பொருட்களை விற்பனை செய்து வரும் நிலையில், உள்நாட்டு நுகர்வோர் தங்களது கொள்முதலில் சிக்கனமாக இருக்கின்றனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகமாக உள்ளது. நாட்டில் 80% பேர் சொந்த வீடுகளை வைத்திருந்தாலும், வீடுகளின் விலைகள் குறைந்துள்ளன. வர்த்தகம் என்பது பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்கியாக இருப்பதால், வெளிநாட்டுச் சந்தைகளுக்கான அணுகல் முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா விதித்த, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வரிகளிலிருந்து இந்த ஏற்றுமதிகளை ஷி ஜின்பிங் பாதுகாக்க வேண்டியிருக்கும். தைவான் விவகாரத்தைப் பொறுத்தவரை, தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது சீனாவைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை ஷி ஜின்பிங் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். சுயாட்சி நிர்வாகத்தைக் கொண்ட இந்தத் தீவு தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வழங்க அமெரிக்கா சட்டப்படி கடமைப்பட்டுள்ளது. மே மாதம், இந்த விவகாரத்தைத் தவறாகக் கையாள்வது இரு நாடுகளுக்கும் இடையே "மோதல் அல்லது பெரும் சண்டைக்கு கூட " வழிவகுக்கும் என்று ஷி ஜின்பிங், டிரம்பை எச்சரித்திருந்தார். அதன்பின்னர், தைவானுக்கான 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்புக்கு ஒப்புதல் அளிப்பதை டிரம்ப் ஒத்திவைத்தார். இதை "மிகச் சிறந்த பேச்சுவார்த்தைக் கருவி" என்று அவர் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைகளின் போது ஷி ஜின்பிங் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கலாம். தைவானுக்கான ஆதரவைக் கட்டுப்படுத்துவது மோதல் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்று அவர் வாதிட்டிருக்கலாம். வியாழக்கிழமை, தைவான் சுதந்திரத்தை எதிர்ப்பதில் அமெரிக்கா தனது "சரியான நிலைப்பாட்டை" தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று தான் நம்புவதாக அவர் மீண்டும் தெரிவித்தார். இருப்பினும், தைவானுக்கான அமெரிக்காவின் ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற பரவலான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள டிரம்ப், சீன அதிபரின் கருத்துகளுக்கு இதுவரை வெளிப்படையாகப் பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம், Getty Images இரு தலைவர்களும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்து குறைந்தபட்சம் விவாதித்துள்ளனர். எனினும், ஏஐ பாதுகாப்பு தொடர்பாக அவர்கள் ஏதேனும் நடவடிக்கைகளில் உடன்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏஐ தொடர்பாக, குறிப்பாக ஒரு உச்சி மாநாட்டை நடத்துவதற்கான ஒப்பந்தம் போன்ற உறுதியான முடிவுகள் ஏதேனும் எடுக்கப்படுமா என்பதிலேயே அனைவரது கவனமும் இருந்தது. இதற்குக் காரணம், ஏஐ-யை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற அதன் வளர்ச்சியைக் குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடெய் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன்பிறகு, அந்த நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர், ஏஐ காரணமாக மனித இனம் அழிந்துபோக 10%-க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக எச்சரித்திருந்தார். ஆனால், செயற்கை நுண்ணறிவை "எப்போதும் மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்" வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து ஷி ஜின்பிங் பேசியதைத் தவிர, வேறு அதிகமான தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இந்தத் தொழில்நுட்பம் மனித இனம் அழிவதற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை டிரம்ப் சமீபத்தில் நிராகரித்தார். அவற்றை "தவறானவை" என்று அவர் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல், பாண்டாக்களையும் நாம் மறந்துவிடக் கூடாது. அட்லாண்டாவுக்கு பிங் பிங் மற்றும் ஃபு ஷுவாங் ஆகிய பாண்டாக்களை பரிசாக வழங்குவது குறித்து ஏப்ரல் மாதமே முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை இன்னும் சில நாட்களில் வந்து சேரும் என்று ஷி ஜின்பிங் தற்போது அறிவித்துள்ளார். இதன் மூலம் சீனாவின் பாண்டா ராஜதந்திரம் மீண்டும் தொடங்குகிறது. பட மூலாதாரம், Getty Images ஆனால், இப்போதைக்கு இந்த உச்சி மாநாட்டின் மூலம் சீனாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று, சர்வதேச அளவில் சீனாவின் பிம்பத்தை மேம்படுத்தியிருப்பது தான். பிரமாண்டமான வரவேற்பு, விமான நிலையத்தில் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட வரவேற்பு, சிறப்பான அரசு முறை விருந்து ஆகியவை சீன மக்களால் பாராட்டப்பட்டன. இதன் மூலம், டிரம்புக்கு இணையான தலைவராக சீனாவில் ஷி ஜின்பிங்கின் பிம்பம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இரு தலைவர்களையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட மீம்கள் சீன சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. டிரம்ப் அளித்த வரவேற்பின் போது போர் விமானங்கள் வானில் பறந்து கொண்டிருந்த நிலையில், அவரது முகம் சற்றே மாறியிருப்பது போலவும், அதே நேரத்தில் ஷி ஜின்பிங் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இருந்தது போலவும் காட்டும் புகைப்படம் ஒன்று வைரலானது. உலகின் கணிக்க முடியாத தலைவர்களில் ஒருவரான டிரம்பை கையாள்வதற்கான ஒரு வழியை ஷி ஜின்பிங் கண்டுபிடித்துள்ளார். ஆனால், டிரம்ப் "உண்மையான மிகச் சிறந்த நட்பு" குறித்து பேசினாலும், சீனத் தலைவர் அதைவிட மிகப் பெரிய இலக்கில் அதாவது, அமெரிக்காவுக்கு இணையாக ஒரு வல்லரசாக சீனாவின் இடத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறார். பாண்டாக்கள், பிரமாண்டமான நிகழ்வுகள் மற்றும் இனிமையான வார்த்தைகள் இந்த உறவைச் சீரமைக்க உதவக்கூடும். ஆனால், இந்தப் பிரமாண்டமான காட்சிகளுக்குப் பின்னால், உலகின் இரு சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையிலான போட்டி முன்பைப் போலவே தொடர்ந்து கடுமையாக உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
டிரம்பை கையாள ஜின்பிங் ஒரு வழி கண்டுவிட்டாரா? சீனா விரும்பிய அனைத்தும் கிடைத்ததா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk