Tamil Nadu Latest News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்! பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரம் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. அரசாணை வெளியிட்டுவிட்டு இன்னும் முடிவு செய்யவில்லை எனக் கூறுவது ஏன் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 58-வது கூட்டத்தில் அணைகளின் நீர்வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தலைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து வரும் 25-ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், கூட்டம் நடைபெறும் இடம் அச்சரப்பாக்கத்தில் இருந்து ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாற்றப்பட்டுள்ளது. மறுபுறம், திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து அக்டோபர் 3-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும், தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த திருமாவளவன், மாணிக்கம் தாகூர், வைகோ உள்ளிட்டோரின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் நீக்கப்பட்டுள்ளன. மழை, டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் மழை மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரசு மருத்துவமனைகளை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 5 இடங்களில் 9,413 சிலைகள் கரைக்கப்பட்டுள்ள நிலையில், சிலை கரைப்புக்குப் பின்னர் 900 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் ஊழியர் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படும் பிரகாஷை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி மீது நேற்று பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில், 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மாதவரத்தில் பதுங்கியிருந்த பிரகாஷை பிடிக்க போலீசார் சென்றபோது, அவர் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தற்காப்புக்காக ஆய்வாளர் சிவக்குமார் துப்பாக்கியால் சுட்டதில் பிரகாஷின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
Chennai News Live Updates: பொன்னேரி அரசு மருத்துவமனை பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு; குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk