மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இது புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கோபால்பூர் இடையே நாளை காலை கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். புயல் காரணமாக கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த புயல் உருவானால் அதற்கு வங்கதேசம் பரிந்துரைத்த அர்ணாப் என்று பெயர் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இது இந்தாண்டு வங்கக்கடலில் உருவான முதல் புயலாகவும் பார்க்கப்படுகிறது. பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே வங்கக்கடலில் அதிக அளவிலான புயல்கள் உருவாகும். ஆனால், இந்த முறை செப்டம்பர் மாதமே வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வானிலை ஆய்வு மைய தரவுகளின் படி கடந்த 165 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் உருவாகும் 47 வது புயலாகவும், கடந்த 25 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் உருவாகும் 4 வது புயலாகவும் இது பதிவாக அதிக வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல் : 25 ஆண்டில் 4-வது புயல்.. யாருக்கெல்லாம் பாதிப்பு?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk