"பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றிருந்த போது எனது பெண் தன்மையைப் பயன்படுத்தி என்னை பாலியல் ரீதியாக சிலர் வற்புறுத்தினார்கள். நான் மறுத்தபோது என்னை கழிவுநீர்த் தொட்டியில் தள்ளிவிட்டார்கள். அதில் இருந்து நான் மீண்டு வந்ததே பெரிய விஷயம்" சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது வாழ்க்கையில் நடந்த இந்த கசப்பான நினைவுகளை பகிர்கையிலேயே ரியானாவின் கண்கள் கலங்கிவிட்டன. திருச்சி மன்னார்புரத்தைச் சேர்ந்தவர் திருநங்கை ரியானா. தனது பெண்மையை உணரத் தொடங்கிய போது அவருக்கு வயது 12. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது அண்ணியுடன் பங்கேற்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருந்தார். ரியானாவை அவரது அண்ணி 'நாத்தனார்' எனக் குறிப்பிட்டிருந்ததே அதற்கு காரணம். 'நாத்தனார்' என்ற இந்த உறவு வழக்கமான ஒரு உறவாக தோன்றலாம். ஆனால் ரியானாவைப் பொறுத்தவரை அது அவரின் அடையாளத்திற்கான அங்கீகாரம். ஆனால் இந்த அங்கீகாரம் அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. தனது பாலின அடையாளத்தை ஏற்றுக்கொள்வதற்கும் அதை குடும்பத்தினர் புரிந்துகொள்வதற்கும் இடையில் நீண்ட பயணத்தை எதிர்கொண்டுள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "பள்ளியில் படிக்கும்போது மாறுவேடப் போட்டியில் என் அக்கா எனக்கு பெண் வேடம் அணிவித்தார். அப்போதுதான் நான் ஒரு பெண் என்பதை ஆழமாக உணர்ந்தேன். பின் உடல்நலக் குறைவால் என் அக்கா இறந்துவிட, என் அக்காவே எனக்குள் இருப்பதைப் போல உணர்ந்தேன்" என தனது பயணத்தை விவரித்தார். தனது பள்ளி கால அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். "பள்ளியில் என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை. என்னை கேலி செய்வார்கள். ஆனால் நான் அதை அப்போது வீட்டில் சொல்ல மாட்டேன். 2010-ல் சில திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்பட்ட பின் ஜமாத்தில் ரீத் போட்ட பிறகு என்னை அந்த சமூகத்தில் திருநங்கையாக தத்தெடுத்துக் கொண்டார்கள்." என்றார். அந்த சமயத்தில் வீட்டில் தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படையாக சொல்லாமல் செய்கைகள் மூலம் வெளிப்படுத்தியதாக அவர் கூறுகிறார். "நான் எனது மாற்றத்தை வீட்டில் இப்போது வரை வெளிப்படையாக சொல்லவில்லை. முடி வளர்ப்பது, புருவத்தை திருத்திக்கொள்வது, உடைகளை மாற்றுவது என நான் செய்ததை பார்த்து அவர்களாகவே உணர்ந்துகொண்டார்கள். ஆனால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை" என்று கூறினார். End of அதிகம் படிக்கப்பட்டது இதுபற்றி பேசிய ரியானாவின் தாய் இன்ஸியா மேரியும் முதலில் மன வருத்தமாக இருந்ததாக கூறினார். "உங்கள் மகன் ஏன் பெண் போல நடக்கிறாள் என அக்கம்பக்கத்தினர் கேட்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது. அவரிடம் இதுபற்றி கேட்டபோது முதலில் அவர் மறுத்துவிட்டார். ஆனால் பின்நாட்களில் இதுகுறித்து கேட்கையில் நான் வீட்டை விட்டு சென்றுவிடுவேன் எனக் கூறினார். நம்ம பிள்ளை கண்காணாத இடத்திற்கு சென்றால் நம்மால் பார்க்க முடியாதே என யோசித்து பின் ஏற்றுக்கொண்டேன்" என்கிறார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் ரியானாவுக்கு கிடைத்த ஓர் முக்கியமான உறவுதான் அண்ணி காயத்ரி. தனக்கு குடும்ப அங்கீகாரம் கிடைக்க உதவிய தனது அண்ணி பற்றி ரியானா கூறுகையில் "திருமணமாகி எங்கள் வீட்டுக்கு வந்த பிறகு அண்ணி எனக்கு ஆதரவாக இருந்தார். என் அம்மா நடந்துகொள்வது வருத்தமளிப்பதாக நான் அவரிடம் கூறி அழுதுள்ளேன். எனது தனிப்பட்ட விஷயங்களை அனைத்தையும் அவரிடம் பகிர்ந்துகொண்டுள்ளேன். அவர் என் அம்மாவிடம் 'நீங்களே உங்கள் மகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மற்றவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்' என பேசிப் புரிய வைத்துள்ளார்" என்றார். தனது மருமகள் காயத்ரி வந்த பிறகே ரியானாவை முழுமனதாக தான் ஏற்றுக்கொண்டதாக இன்ஸியா மேரி கூறுகிறார். "பல ஆண்டுகளாக என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் மகனின் திருமணத்தின் போதுதான், இது நம் மகள், நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் மனதார புரிந்துகொண்டேன். எனது மருமகள் அதை எனக்கு புரியவைத்தார்." என்றார். இதுபற்றி காயத்ரியிடம் கேட்டபோது, "அவர் ஒரு திருநங்கை என்பதை தாண்டி, முதலில் அவர் எங்க வீட்டுப் பிள்ளை. நாங்களே அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இந்த சமூகம் அவரை எப்படி ஏற்றுக்கொள்ளும்" என எளிமையாக சொல்லிவிட்டார். காயத்ரியின் அத்தை மகள்தான் ரியானா. சிறுவயதில் ரீகனாகவே பார்த்துள்ள அவர், ரியானாவாக முதலில் அவரை பார்த்த அனுபவத்தை பகிர்ந்தார். "சிறுவயதில் அத்தை பையனாக அவரை பார்த்துள்ளேன். பின் பல ஆண்டுகளாக எங்களுக்குள் தொடர்பே இல்லாமல் போனது. பின் எனது திருமண நிச்சயத்தின் போது மீண்டும் அவரை நேரில் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது. பிறகு சரி முன்பு நமது அத்தை பையனாக இருந்தவர், இப்போது அத்தை பொண்ணாக இருக்கிறார் என நான் புரிந்துகொண்டேன்." என்றார். ரியானாவுடன் தனக்கு இருக்கும் பிணைப்பு குறித்தும் அவர் பேசினார். "நாங்கள் இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். எனக்காக அண்ணனிடமே அவர் சண்டை போட்டுள்ளார். மருமகளாக வந்த எனக்கு ஆதரவாக நின்ற அந்த தருணத்தில் நான் அவரை என் அம்மாவாக பார்த்தேன். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது" என ஆனந்த கண்ணீருடன் விவரிக்கிறார். காயத்ரி மட்டுமல்லாது காயத்ரியின் குடும்பத்தினரும் உறுதுணையாகவே நின்றுள்ளனர். ஒரு காலத்தில் அடையாளத்தைப் புரிந்துகொள்ள போராடிய ரியானா இன்று அதே அடையாளத்துடன் ஒரு குடும்பத்தின் அன்பையும், உறவுகளின் அரவணைப்பையும் பெற்றிருக்கிறார். இளம் வயதில் நடனக் கலைஞராக இருந்த ரியானா தான் எதிர்கொண்ட சவால்கள் காரணமாக ஒரு கட்டத்தில் நடனத்தை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபற்றியும் நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார். "நடனப் பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கூறி என்னை வரவழைத்து 10 பேர் என்னை தாக்கினார்கள். என் வீட்டிற்கு போன் செய்து மிரட்டினார்கள். என் செல்போனில் இருக்கும் பெண்களுக்கு தேவையில்லாமல் போன் செய்து மிரட்டினார்கள். திருநங்கையாக இருந்து நடனப் பயிற்சி அளிக்கிறேன் என்ற காழ்ப்புணர்ச்சியில் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். இது நடந்தது 2019ல். அப்போது இருந்து நான் நடனத்தையே விட்டுவிட்டேன்" என்றார். அதன்பிறகு மாடலிங்கில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மிஸ் கூவாகம் 2022, மிஸ் திருச்சி 2023, மிஸ் டிரான்ஸ் குயின் 2023, மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் 2023 என பல்வேறு பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். தற்போது தனது மகளை நினைத்து பெருமை கொள்வதாக இன்ஸியா மேரி கூறுகிறார். "இப்போது திரும்பும் பக்கம் எல்லாம் எனது மகள் பற்றி பெருமையாக பேசுகிறார்கள். முன்பு திருநங்கை என தெரிந்ததும் இழிவாக பேசிய சொந்தபந்தம், அக்கம்பக்கத்தினர் கூட இப்போது பெருமையாக பேசுகிறார்கள். இதை பார்க்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது" என்றார். ரியானா தத்தெடுத்துள்ள இரண்டு திருநங்கைகளிடம் நாம் பேசினோம். அதில் ஒருவர் ஜோஷ்கா ஜாஸ்மின். இவர் ஒரு வழக்கறிஞராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய ஜாஸ்மின், திருநர் சமூகத்திற்குள் அம்மாவாக தேர்தெடுத்துக் கொண்ட ஓர் உறவுதான் ரியானா. "நான் சட்டப் படிப்பு படிப்பதற்கும், எனக்கு தங்குமிடம் கொடுத்து உதவியது ரியா அம்மாதான்." எனக் கூறினார். ரியானாவால் கல்வி உதவி பெற்ற மற்றொருவர் சாயிஷா, இவர் ஆசிரியராக உள்ளார். அவர் ரியானா பற்றி கூறுகையில், "கல்லூரி படிக்கும் சமயத்தில் நான் பகுதி-நேர வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் ரியானாவை முதன்முதலில் பார்த்தேன். எனக்கு அப்போது திருநர் சமூகம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. இவரிடம் பழகப்பழகதான் எனக்குள் இருந்த பெண்மையை உணர்ந்தேன். எனது படிப்பு செலவு, பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு என இப்போதுவரை எனக்கு ரியா அம்மாதான் உதவி வருகிறார்" எனக் கூறினார். தனது காதல் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களைப் பற்றியும் ரியானா வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். "கல்லூரியில் படிக்கும்போது எனக்கு காதல் ஏற்பட்டது. என்னைப் பற்றியும், நான் பெண்ணாக மாறியது பற்றியும் அனைத்தும் தெரிந்த நபர். என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் என்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று அவர் கூறியது எனக்கு வருத்தமளித்தது. இத்தனை ஆண்டுகள் பழகியும் ஒரு நண்பனாக கூட இந்த வார்த்தையை அவர் என்னிடம் சொல்லியிருக்கக் கூடாது என்ற வருத்தம் எனக்கு உள்ளது." என வேதனையுடன் தெரிவித்தார். "திருநர் சமூகத்தினர் மீதான சமூகத்தின் பார்வை மாற வேண்டும். அதற்கு கல்வியும், குடும்பத்தினரின் அங்கீகாரமும் தேவை" என்று அவர் கூறுகிறார். தன்னைப் போல அனைத்து குடும்பங்களிலும் திருநர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். "இந்த சமூகம் எங்களுக்கென தனி இடம் கூட கொடுக்க வேண்டாம். எங்களை சக மனிதராக பார்த்தாலே போதும். சகஜமாக பேசினாலே போதும். கல்வியில் உரிய இடம் வழங்க வேண்டும். ஒரு ஆண் தவறு செய்தாலோ, ஒரு பெண் தவறு செய்தாலோ அது தனிநபர் தவறாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு திருநர் தவறு செய்தால் மட்டும், ஒட்டுமொத்த திருநர் சமூகமே இப்படித்தான் என ஏன் சொல்கிறீர்கள்?" என்றார். அதேநேரத்தில், சமூகத்தின் பார்வை முன்பை விட சற்று மாறியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் அவர், தான் கடந்து வந்த பாதை குறித்து பெருமை கொள்கிறார். "இப்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எனது குடும்பம், திருநர் குடும்பங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களை செய்துள்ளேன். அதை நினைக்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது." என மனநிறைவுடன் பேசினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
'அப்போ அத்தை பையன், இப்போ அத்தை பொண்ணு' - திருச்சியில் திருநங்கையை குடும்பம் அரவணைத்த கதை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk