பட மூலாதாரம், Getty Images எல் நினோ காரணமாக, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக மழையும் வெள்ளமும் ஏற்படலாம் என்றும், அதன்பிறகு தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, கடுமையான வெப்பம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. எல் நினோ என்றாலே மழை குறைந்து வறட்சி ஏற்படும் என்ற பொதுவான கருத்து தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரியாக இருக்காது என்றும் குழு கூறியுள்ளது. எல் நினோ தாக்கம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, தமிழ்நாடு அரசு பல்வேறு சாத்தியமான பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. பட மூலாதாரம், Getty Images ஆகஸ்ட் 29-ஆம் தேதி நிலவரப்படி, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட 2.20 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகவும், இது வலுவான எல் நினோ நிலவுவதைக் காட்டுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எல் நினோ 2026-ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2027-ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 2026-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் இயல்பைவிட அதிக மழை பெய்யக்கூடும் என்று பருவகாலக் கணிப்பு தெரிவிப்பதாக அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இயல்பைவிட 50 முதல் 200 மில்லி மீட்டர் வரை கூடுதல் மழை பெய்யக்கூடும் என்ற கணிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது இதனால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது அதிக மழை, நகர்ப்புற வெள்ளம் மற்றும் ஆற்று வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு அரசு தயாராக வேண்டும் எனக் குழு கூறியுள்ளது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான மழை பெய்யும் என்று கூற முடியாது என்றும் அறிக்கை எச்சரிக்கிறது. ஒரு பகுதியில் அதிக மழை பெய்யும் அதே நேரத்தில் மற்றொரு பகுதியில் மழைப்பற்றாக்குறை ஏற்படலாம். எனவே, மாநிலத்தின் மொத்த மழையளவு இயல்பைவிட அதிகமாக இருந்தாலும் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் எனக் குழு கூறியுள்ளது. பட மூலாதாரம், Getty Images தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட எல் நினோவின் தாக்கங்களை ஆய்வு செய்தால், ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான வானிலை நிலவவில்லை என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனால், எல் நினோவை வறட்சியுடன் மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பது சரியல்ல என்பதே இந்த குழுவின் முக்கியமான முடிவு. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு அரசு எல் நினோவின் சாத்தியமான தாக்கங்களை ஆய்வு செய்வதற்காக இந்த நிபுணர் குழுவை அமைத்தது. வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மொத்தம் ஏழு நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். எல் நினோவின் தாக்கம் ஒரு துறையில் மட்டும் இருக்காது என்பதால், பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தனித்தனியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. பட மூலாதாரம், Getty Images இந்த ஆண்டு அதிக மழை பெய்யக்கூடிய சூழல் இருப்பதாகக் கணிக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழலுக்கும் தமிழ்நாடு தயாராக வேண்டும் என அறிக்கை கூறுகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை சமமாக பெய்யாது என்ற கணிப்பே இதற்குக் காரணம். சில பகுதிகளில் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டால் நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து குறையலாம். இதனால் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலை ஏற்படலாம். எனவே, அதிக மழை பெய்யும் பகுதிகளில் கிடைக்கும் நீரை சேமிப்பதுடன், குறைவான மழையைப் பெறக்கூடிய பகுதிகளிலும் நீர் இருப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குழு தெரிவித்துள்ளது. அடுத்த கோடைக்காலத்தில் வெப்ப அலை மற்றும் வெப்ப அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் குடிநீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் முன்கூட்டியே எதிர்கொள்ள வேண்டும் என அறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம், Getty Images எல் நினோவின் தாக்கத்தை மழை மற்றும் வெப்பநிலை ஆகிய இரண்டுடன் மட்டும் நிறுத்திவிடக் கூடாது என்று குழு தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Getty Images இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், வலுவான எல் நினோ நிலவும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதிக மழை பெய்திருக்கிறது என்று கூறினார். "அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களிலும் தொடர்ந்து மழை பெய்யும். எனது கணிப்பு சரியாக இருந்தால், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே அதிக மழை பெய்யக்கூடும்" என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் பதிவான அதிகபட்ச மழையளவு 1997-ஆம் ஆண்டில் பதிவான 810 மில்லி மீட்டர் என்று குறிப்பிட்ட பிரதீப் ஜான், இந்த ஆண்டு அந்த அளவைத் தாண்டக்கூடும் என்றும் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி வரையிலான தென் மாவட்டங்களிலும், குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில், மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார். வலுவான எல் நினோ நிலவும் ஆண்டுகளில் வங்கக்கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் ஜனகராஜன், எல் நினோவின் தாக்கம் அடுத்த ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு நீடிக்கலாம் என்று கூறுகிறார். இதனால் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு வழக்கமான குளிர்காலத்தின் தாக்கம் பெரிதாக இருக்காது என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த ஆண்டு இந்தியப் பெருங்கடலும் வெப்பமாக இருப்பதால், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார். அதேநேரம், இந்த ஆண்டு பெய்யும் மழைநீரைச் சேமிக்கத் தவறினால் அடுத்த கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார். 2015-ஆம் ஆண்டு அதிக மழை பெய்தபோதும், தமிழ்நாடு அந்த நீரைச் சரியாகச் சேமிக்கத் தவறியதால் அடுத்த ஆண்டு வறட்சியை எதிர்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார். சரியான முன்னேற்பாடுகளை செய்யாவிட்டால், சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் இருப்பதால் ஓரளவு பாதிப்பை சமாளிக்க முடியும் என்றாலும், நீராதாரங்களைச் சார்ந்திருக்கும் ஆவடி, தாம்பரம் போன்ற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்பது அவரது எச்சரிக்கை. பட மூலாதாரம், Getty Images எல் நினோவின் தாக்கம் வேளாண் உற்பத்தியிலும் எதிரொலிக்கலாம் என்பதால் உணவுப் பொருட்களின் விலை குறித்தும் கவலை எழுந்துள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் ஸ்ரீ வேலவன் அக்ரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி. சிவராமகிருஷ்ணன், எல் நினோவால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகமாகவும், வளங்கள் குறைவாகவும் உள்ள நிலையில் எல் நினோவின் தாக்கம் விலை உயர்வை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்றார். எல் நினோவை ஒரு மழைப்பிரச்னையாக மட்டும் பார்க்காமல், பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பல்வேறு அபாயங்களுக்கான தயார் நிலையை உருவாக்க வேண்டும் என்பதே நிபுணர் குழு அறிக்கையின் முக்கிய பரிந்துரையாக உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
'வரலாற்றிலேயே அதிக மழை பெய்யக்கூடும்': தமிழ்நாட்டில் எல்நினோ தாக்கம் எப்படி இருக்கும்? நிபுணர் குழு அறிக்கை
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk