பட மூலாதாரம், Getty Images இயந்திரங்கள் தங்கள் டிஜிட்டல் கைகளை நீட்டத் தொடங்கியுள்ளன. அதற்கு உங்கள் எதிர்வினைதான் சேவைத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடும். லாஸ் வேகஸில் உள்ள வெனிஷியன் ஹோட்டலில் ஸ்லாட் மெஷின்களை விளையாடும் மனநிலையில் நீங்கள் இல்லை என்றால், "தி டிப்ஸி ரோபோ" என்ற பாரில் சில பொழுதுபோக்குகளைக் காணலாம். அங்கு தானாகவே காக்டெய்ல் பானங்களைத் தயாரிக்கும் விசித்திரமான இரண்டு ரோபோ கரங்கள் உள்ளன. திரையில் "மார்கரிட்டா" என்பதைத் தொட்டு, அவை அசைந்து உயிர்பெறுவதைப் பார்த்தேன். அவை டெகீலாவுடன் (tequila) எலுமிச்சை சாறு மற்றும் டிரிபிள் செக் ஆகியவற்றை கலந்தன. கூடுதல் சுவாரசியத்திற்காகத் தேவையில்லாமல் சுழன்று, சிறிது காட்சிப் பிரமிப்பை ஏற்படுத்தியபின் பானத்தை எனக்கு வழங்கின. 20 ஆண்டுகளுக்கு முன்பு இது என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கலாம். ஆனால் இன்று, இது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தப் பானத்தின் விலை 17 டாலராக உள்ளது. ஆனால் அதில் 10% "சேவைக் கட்டணம்" என்கிற கூடுதல் கட்டணத்தைக் கண்டேன்: அதாவது, அந்த டிப்ஸி ரோபோ டிப்ஸ் கேட்டது. நான் இதைக் காண்பது முதல் முறை அல்ல. நியூயார்க்கில் உள்ள 'ஆர்ட்லி காபி' நிறுவனத்தில் இதேபோன்ற ஒரு ரோபோ பாரரிஸ்டா என்னிடம் டிப்ஸ் கேட்டது. நியூவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில், பணியாளர்கள் இல்லாத ஒரு கடையில் ஒரு பாட்டில் தண்ணீருக்கு சுய-செக்அவுட் இயந்திரம் அன்பளிப்பைக் கோரியது. நாட்டின் மற்றுமொரு பகுதியில் உள்ள போர்ட்லேண்ட், ஒரேகானில், 'டாப் பர்மீஸ்' உணவகத்தில் ஒரு மனிதர் என்னிடம் ஆர்டர் எடுத்தார், ஆனால் ஒரு ரோபோ சர்வர் தான் உணவை எடுத்து வந்தது. மனித வெயிட்டருக்கு, நான் மகிழ்ச்சியுடன் 20% டிப்ஸ் கொடுத்தேன். ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில் நான் தயங்கினேன். ரோபோக்கள் தங்கள் டிஜிட்டல் கைகளை நீட்டும்போது டிப்ஸ் கொடுப்பதற்கான விதிகள் காற்றில் பறந்துவிடுகின்றன. மேலும் அந்தப் பணம் யாருக்குச் செல்கிறது என்பது பல நேரங்களில் தெளிவாகத் தெரிவதில்லை. End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஆனால் இதுதான் புதிய இயல்பா அல்லது கடந்துபோகும் ஒரு ரோபோ மாயையா என்கிற கேள்விகள் எழுகின்றன. இதற்கான விடை உங்கள் பணப்பையை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதில் தான் உள்ளது. தி டிப்ஸி ரோபோ மற்றும் ஆர்ட்லி காபி பிரதிநிதிகள் கூறுவதாவது, "அவர்களது மனித ஊழியர்கள் அனைத்து டிப்ஸ்களையும் பிரித்துக் கொள்கிறார்கள், நிறுவனங்களுக்கு இதில் எதுவும் கிடைப்பதில்லை. நான் சென்று வந்த பிறகு, ஆர்ட்லி நிறுவனம் டிப்ஸ் கேட்கும் திரையை நிறுத்திவிட்டது. இருப்பினும் இவை விதிவிலக்குகளாக இருக்கலாம். உண்மையில், தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவரிடமிருந்தும் அதிகப் பணத்தைப் பிழிந்தெடுக்கும் ஒரு விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த 'ரோபோ-டிப்பிங்' இருக்கலாம் என்று சில நிபுணர்கள் என்னிடம் கூறுகிறார்கள். "சில நேர்மையற்ற முதலாளிகள் ரோபோக்களுக்கு அளிக்கப்படும் டிப்ஸ்களை தங்களுக்குள் எடுத்துக்கொள்கிறார்கள் என்று நம்புவதற்கு நமக்கு அனைத்துக் காரணங்களும் உள்ளன," என்கிறார் அமெரிக்காவின் லீஹை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் இணைப் பேராசிரியரும், 'Gratuity' புத்தகத்தின் இணை ஆசிரியருமான ஹோலோனா ஓக்ஸ். "யார் பலனடைவது, யார் அதற்கான விலையைக் கொடுப்பது என்பதுதான் மிக முக்கியமான கேள்வி" என்கிறார் ஓக்ஸ். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, டிஜிட்டல் கட்டண முறைகளின் தூண்டுதலால், எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான இடங்களில் மக்களிடம் டிப்ஸ் கேட்கப்படுகிறது. பரிந்துரைக்கப்படும் டிப்ஸ் சதவீதங்கள் மெல்ல உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் இது "உணர்ச்சி ரீதியான மிரட்டல்" என்று புகாரளிக்கின்றனர். மேலும் அமெரிக்கர்களின் "கட்டுப்பாடற்ற" டிப்ஸ் கலாசாரத்தை சிலர் கேலி செய்தாலும், அது உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்காவில் இந்த மாற்றங்கள் பெரும் விவாதப் பொருளாக உள்ளன, ஏனெனில் அங்கு டிப்ஸ் மூலம் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குக் குறைந்த அடிப்படைச் சம்பளத்தைக் கொடுக்க முடிகிறது. அமெரிக்க குறைந்தபட்ச ஊதியம் மணிக்கு 7.25 டாலராக உள்ளது. ஆனால் டிப்ஸ் பெறும் ஊழியர்களுக்கு இது வெறும் 2.13 டாலராகக் குறைகிறது. அமெரிக்காவில் நீங்கள் ஒரு ஊழியருக்கு டிப்ஸ் அளிக்கும் போது, சட்டப்படி நிறுவனங்களோ, உரிமையாளர்களோ அல்லது மேற்பார்வையாளர்களோ அதில் பங்கை எடுக்க முடியாது. ஆனால் நீங்கள் ஒரு இயந்திரத்திற்கு டிப்ஸ் கொடுத்தால், அதில் ஒரு சட்டப்பூர்வ ஓட்டையைக் காணலாம். பட மூலாதாரம், Artur Widak/NurPhoto via Getty Images "ரோபோ டிப்ஸ்கள் யாருக்குச் சொந்தம் என்பதற்கான சட்டப்பூர்வ தரநிலை இன்னும் உருவாக்கப்படவில்லை," என்கிறார் ஓக்ஸ். டிரம்ப் நிர்வாகம், டிப்ஸ் தொடர்பான புகார்களை ஊழியர்கள் சட்டப்படி தொடர்வதைக் கடினமாக்கியுள்ளது, மேலும் பழிவாங்குதலுக்குப் பயந்து ஊழியர்கள் தங்கள் கதைகளை ரகசியமாக வைத்திருக்கலாம் என்கிற நிலையையும் இது உருவாக்கியுள்ளது. "எனவே முதலாளிகள் ரோபோக்களுக்குக் கொடுக்கப்படும் டிப்ஸ்களை எடுத்துக்கொண்டால், குறைந்தபட்சம் இப்போதைக்கு, ''அதை அறிந்துகொள்ள நமக்கு வழியே இல்லை," என்கிறார் ஓக்ஸ்.. தொடர்ந்து பேசிய அவர், "சமையலறையிலோ அல்லது பாரிலோ மனிதர்கள் வேலை செய்வதை நீங்கள் பல நேரங்களில் பார்க்கலாம், ஆனால் அந்த டிப்ஸ் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்குச் செல்லக்கூடும். இதற்கு எந்த விதிகளும் இல்லை." என்றும் தெரிவித்தார். அதற்காக தானியங்கி இயந்திரங்கள் சேவை ஊழியர்களுக்கு கெட்டது என்று அர்த்தமல்ல. டிப்ஸி ரோபோ மற்றும் ஆர்ட்லி காபி போன்ற இடங்களில் ரோபோக்களின் புதுமையே பிரதான அம்சம், அந்த ரோபோக்கள் இல்லையென்றால், அந்த பணியாளர்களுக்கு அந்த வேலைகளே கிடைக்காமல் இருந்திருக்கலாம். வாடிக்கையாளர்களின் புகார்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே டிப்ஸ் கேட்கும் திரைகளை நிறுத்திவிட்டு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்ததாக ஆர்ட்லி கூறுகிறது. சில இடங்களில் இப்போது டிப்ஸ் ஜார்கள் உள்ளன, ஆனால் 100% டிப்ஸ்களும் மனித ஊழியர்களுக்கே செல்கின்றன என்கிறார் ஆர்ட்லியின் உள்ளடக்க இயக்குனர் அபிகாயில் ஸ்மாதர்ஸ். "மனிதர்களை இழந்து செலவைக் குறைப்பதற்காகத் தானியங்கி முறையைப் பயன்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை," என்றும் அவர் தெரிவித்தார். சேவைத் துறையில் தொழிலாளர் தட்டுப்பாடு உள்ளது, மேலும் மனிதர்களை இடமாற்றம் செய்யாமல் ரோபோக்கள் உதவ முடியும் என்கிறார் ஸ்மாதர்ஸ். இருப்பினும், செயற்கை நுண்ணறிவு தேவையில்லாத இடங்களில் பயன்படுத்தப்படுவதை அவர் ஒப்புக்கொள்கிறார். "ஆனால் இறுதியில், பிரச்னை அங்குதான் உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இயல்பிலேயே கெட்டது அல்ல. இதன் நன்னெறி அதன் நோக்கம் மற்றும் செயல்படுத்துதலில் தான் உள்ளது," என்று அவர் கூறுகிறார். மேலும் அவர், "ஆனால் நாங்கள் நோக்கத்துடனும், நேர்மையுடனும் கட்டியெழுப்பவும், இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் சிலருக்கு மட்டுமல்லாமல் பலருக்குப் பயனளிப்பதை உறுதி செய்யவும் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்." என்றும் தெரிவித்தார். ஹோட்டல் தொழில்நுட்பத்தைப் பற்றி ஆய்வு செய்யும் அமெரிக்காவின் மிசிசிபி பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கேடரினா பெரெஸினா, இந்தத் துறைக்கு இன்னும் கூடுதல் அங்கீகாரம் தேவை என்கிறார். பட மூலாதாரம், CFOTO/Future Publishing via Getty Images "நிறுவனங்கள் எந்த விலையையும் கொடுத்து லாபம் ஈட்ட முயல்கின்றன என்று மட்டும் கருதுவது நியாயமல்ல," என கேடரினா பெரெஸினா கூறுகிறார். "அந்த டிப்ஸ் அல்லது சேவைக் கட்டணம் என்பது ரோபோட்டிற்குத் தேவையான பராமரிப்பு அல்லது புதுப்பிப்புகளைச் செய்வதற்கான ஒன்றாக இருக்கலாம். இந்தத் துறையில் டிப்ஸ் கொடுப்பது வழக்கம் தான், மேலும் நிறுவனங்கள் சந்தைக் கட்டுப்பாடுகளுக்குள் இயங்குகின்றன," என்று அவர் கூறுகிறார். மறுபுறம், 'ஒன் ஃபேர் வேஜ்' போன்ற ஆதரவு அமைப்புகள், உணவகங்களில் தொழிலாளர் தட்டுப்பாட்டிற்கு உண்மையான காரணமான குறைந்த ஊதியத்தைத் தொடர்ந்து வழங்குவதற்கான ஒரு முயற்சியே இந்த ரோபோக்கள் என்று வாதிடுகின்றன. காரணிகள் எதுவாக இருந்தாலும், இப்போது நாம் காணும் இந்தச் சோதனைகளுக்கு நீங்களும் மற்ற வாடிக்கையாளர்களும் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "டிப்ஸ் கொடுப்பதற்கான முக்கியக் காரணங்களை யோசித்துப் பாருங்கள்," என்கிறார் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் லின். இவர் 'டிப்ஸ் கொடுப்பதன் உளவியல் - The Psychology of Tipping' புத்தகத்தையும் எழுதியுள்ளார். சிறந்த சேவையைப் பாராட்டுவதற்காகவோ அல்லது குறைந்த ஊதியத்தை ஈடுசெய்வதற்காகவோ நாம் பெரும்பாலும் டிப்ஸ் கொடுக்கிறோம் என்று லின் கூறுகிறார். நிச்சயமாக, தகுதி மற்றும் அங்கீகாரம் பற்றிய கேள்வியும் உள்ளது; "நான் டிப்ஸ் கொடுக்காவிட்டால், அவர்கள் என்னை வெறுப்பார்கள்," என்று அவர் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறோம். "ரோபோக்களுக்கு இதில் எதுவும் பொருந்தாது, எனவே டிப்ஸ் கொடுக்க எந்தக் காரணமும் இல்லை என்பது தெளிவாகிறது," என்கிறார் லின். இருப்பினும், மக்கள் எப்படியும் அதைச் செய்து கொண்டிருக்கலாம். ஓர் ஆய்வில், பங்கேற்பாளர்களில் சுமார் 11% பேர் மட்டுமே ஒரு ரோபோ பார்மேனுக்கு டிப்ஸ் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். பட மூலாதாரம், MAGALI COHEN/Hans Lucas/AFP via Getty Images "ஆனால் உண்மையில் ரோபோ பார்மேன்களிடம் அனுபவம் பெற்றவர்கள், மற்றவர்களை விட டிப்ஸ் கொடுக்க அதிக விருப்பம் கொண்டிருந்தனர்," என்கிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரியரான பெரெஸினா. பெரும்பாலான மக்கள் ஒரு ரோபோவிற்கு டிப்ஸ் கொடுக்க மாட்டோம் என்று கூறிய போதிலும், அந்த டிப்ஸ் மனித ஊழியர்களுக்குச் செல்கிறது என்றால் சுமார் 42% பேர் தங்கள் மனதை மாற்றிக் கொண்டனர். இருப்பினும், ரோபோக்களுக்கு டிப் கேட்பது பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை என்று லின் வாதிடுகிறார். ''வருமானத்தை அதிகரிக்கவே சில நிறுவனங்கள் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்துகின்றன. ஆனால், அது வாடிக்கையாளர்களை கடைக்கு வருவதை விரும்பாமல் செய்தால், இந்த நடைமுறையே மறைந்து போகக்கூடும்'' என அவர் கூறுகிறார். "டிப்ஸ்களுக்கு உங்களை யாரும் கட்டாயப்படுத்திப் பணம் வாங்க முடியாது. மேலும் இந்த விதிமுறைகள் கீழிருந்து மேல் நோக்கி வருகின்றன," என்று அவர் கூறுகிறார். "வணிகங்கள் இதைப் புரிந்து கொண்டு இந்த விரிவாக்கங்களைக் கைவிடும் என்று நான் நினைக்கிறேன்." வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்களும் நானும் வரலாற்றில் ஒரு சிறிய மற்றும் மிகவும் எரிச்சலூட்டும் தருணத்தை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று லின் கூறுகிறார். "அது உண்மைதான் என்று நான் நம்புகிறேன். ஆனால் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்று யார் சொன்னாலும் அது பொய்." என்று அவர் தெரிவிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
மனிதர்களிடம் டிப்ஸ் கேட்கும் ரோபோக்கள் - பணம் உண்மையில் யாருக்கு செல்கிறது?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk