பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அமெரிக்கப் பயணம் பற்றி இதுவரை நடந்தவற்றை பார்க்கும்போது, அது பிரமாண்ட வரவேற்புகளால் கவனம் ஈர்த்திருந்தாலும், முக்கியமான விவகாரங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. புதன்கிழமை ராணுவ விமானத் தளத்தில் அளிக்கப்பட்ட பாரம்பரிய வரவேற்பிலிருந்து, வியாழக்கிழமை காலை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசுமுறை வரவேற்பு வரை, அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன அதிபருக்கு அனைத்துவித மரியாதைகளையும் வழங்கினார். இரு தலைவர்களும் பொதுவெளியில் பேசியபோது, அன்பான வார்த்தைகளும் தூதரக ரீதியான மரியாதைச் சொற்களும் நிறைந்திருந்தன. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், சீன பாண்டாக்களை அன்பளிப்பாக வழங்குவதாகவும், புதிய மாணவர் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்குவதாகவும் ஷி அறிவித்தார். "நமது இரு நாட்டு மக்களுக்கிடையேயான நட்பை மேலும் வலுப்படுத்தி, சிறந்த உலகை உருவாக்க இணைந்து செயல்படுவோம்," என்று அவர் கூறினார். தனது பங்கிற்கு டிரம்ப், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் அவர் செயற்கை நுண்ணறிவைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தும் "சூப்பர் இன்டெலிஜென்ஸ்" உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார். "இன்று இந்த துறைகளில் நாம் எடுக்கும் முடிவுகள், பல தசாப்தங்களுக்கு அமைதியையும் செழிப்பையும் உருவாக்கக்கூடும்," என்றார் அவர். வியாழக்கிழமை நடைபெற்ற இசைக்குழு அணிவகுப்புகள் மற்றும் இராணுவ விமானக் காட்சிகள் வேறு ஒரு அரசியல் நோக்கத்தையும் கொண்டிருக்கலாம் - குறைந்தபட்சம் டிரம்பின் பார்வையில். "இந்த உச்சிமாநாட்டைச் சுற்றியுள்ள நேர்மறையான சூழலை வலியுறுத்தும் வகையில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளாக இதைப் பார்க்கலாம்," என்று பிபிசியிடம் பேசிய ப்ளூம்பெர்க் எகனாமிக்ஸின் தலைமை பொருளாதார ஆய்வாளர் ஜெனிபர் வெல்ச் கூறினார். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு "அமெரிக்கா-சீனா உறவில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் முக்கிய சக்தியாகத் தன்னை டிரம்ப் கருதுகிறார். இந்த உச்சிமாநாட்டையும் அதே கண்ணோட்டத்தில்தான் அவர் அணுகுகிறார்," என்றார் அவர். அதே நேரத்தில், ஜின்பிங் உரைகளில் சில கருத்துகள் இன்னும் எச்சரிக்கையான தொனியைக் கொண்டிருப்பதாக வெல்ச் சுட்டிக்காட்டுகிறார். வெள்ளை மாளிகையில் பேசிய அவர், மீண்டும் ஒருமுறை "தூசிடிடீஸ் பொறி" என்ற கோட்பாட்டைக் குறிப்பிட்டார். உலக அதிகாரச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள், எழுச்சி பெறும் சக்திகளுக்கும் நிலைநிறுத்தப்பட்ட சக்திகளுக்கும் இடையிலான மோதலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தே அந்த கோட்பாட்டின் அடிப்படை. "சீனாவும் அமெரிக்காவும் வெவ்வேறு தேசிய சூழ்நிலைகளைக் கொண்ட நாடுகள். இருப்பினும் வெளிப்படையான, ஆழமான மற்றும் தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம், நாம் ஒருவரை ஒருவர் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்; வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து பொதுவான அடிப்படையைத் தேட முடியும்; பரஸ்பர நம்பிக்கையையும் வளர்க்க முடியும்," என்று ஜின்பிங் தெரிவித்தார். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் கணிசமான உடன்பாடுகளை எட்டுவதற்கான தடைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. டிரம்ப் மற்றும் ஜின்பிங் இருவரும் கடந்த மே மாதம் பெய்ஜிங்கில் சந்தித்தபோது, பொருளாதார உறவுகளை மேற்பார்வை செய்ய வர்த்தக மற்றும் முதலீட்டு வாரியங்களை அமைப்பதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டனர். அதற்கு அப்பால் பெரிய முன்னேற்றம் எதுவும் பதிவாகவில்லை. புதன்கிழமை அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட், இரு நாடுகளுக்கும் இடையிலான சுங்கவரி பதற்றத்தைக் கட்டுப்படுத்தியிருந்த ஓராண்டு கால வர்த்தக "போர்நிறுத்தம்" மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டைப் போன்ற வர்த்தகப் போர் மீண்டும் வெடிப்பதை இரு தரப்பும் விரும்பாத நிலையில், இந்த உச்சிமாநாடு முடிவடையும் முன் அந்த ஏற்பாடு மேலும் நீட்டிக்கப்படலாம் என நிதிச் சந்தை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இரானுடன் தொடர்புடைய அமெரிக்க நடவடிக்கைகள், யுக்ரேன் போர், செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை போன்ற மற்ற முக்கிய விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அமெரிக்க வேளாண் பொருட்களை அதிகமாக வாங்குவதாகவும், அரிய நிலக்கனிமங்களை அதிக அளவில் அமெரிக்காவுக்கு வழங்குவதாகவும் அளித்த உறுதிமொழிகளை சீனா முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற அமெரிக்க குற்றச்சாட்டும் சூழலை சிக்கலாக்குகிறது. மறுபுறம், தைவானுக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்பனை செய்வது தொடர்பாக டிரம்ப் முன்வைத்த திட்டத்தை அவர் நடைமுறைப்படுத்துகிறாரா என்பதை சீனா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அந்தத் திட்டம் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பட மூலாதாரம், Getty Images செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அமெரிக்காவும் சீனாவும் முற்றிலும் மாறுபட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளன என்று லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராக உள்ள ராபின் கிளிங்லர்-விடா பிபிசியிடம் தெரிவித்தார். "அமெரிக்காவின் பார்வையில், இது மனிதகுலத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய அபாயங்களை கட்டுப்படுத்துவது மற்றும் தேவையெனில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் வேகத்தை ஓரளவு குறைப்பது பற்றியது," என்றார் அவர். "ஆனால் சீனாவின் பார்வையில், ஏஐ தொழில்நுட்பப் போட்டியில் முன்னிலை பெறுவது, அதன் வளர்ச்சியை விரைவுபடுத்துவது மற்றும் நிஜப் பொருளாதாரத்தில் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவது முக்கியமாகக் கருதப்படுகிறது," என்றும் அவர் கூறினார். வலிமை வெளிப்பாடுகளைத் தாண்டி பார்த்தால், சில குறியீட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வுகளும், உறவுகளில் நிலைத்தன்மையைப் பேணும் வாக்குறுதியும் மட்டுமே ஜின்பிங்கின் இந்தப் பயணத்தின் இறுதி விளைவாக அமையக்கூடும். "சீனா பேசுவது பெரும்பாலும் தத்துவார்த்தமான மற்றும் பரந்த கருத்துகளின் அடிப்படையில் இருக்கும். ஆனால் அமெரிக்கா குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை விரும்புகிறது," என்று டிரம்பின் முதல் ஆட்சிக் கால வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோவின் முக்கிய சீன கொள்கை ஆலோசகராகப் பணியாற்றிய மைல்ஸ் யூ பிபிசியிடம் கூறினார். "மிகவும் வேறுபட்ட இந்த இரண்டு அணுகுமுறைகளும் எந்தவொரு முடிவுக்கும் வழிவகுக்கப் போவதில்லை," என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
அமெரிக்காவில் ஜின்பிங்: பிரமாண்டம் இருந்தாலும் பெரிதாக முன்னேற்றம் இல்லாதது ஏன்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk