பட மூலாதாரம், AP "ஒப்பீட்டளவில் மட்டக்களப்பு சிறைச்சாலை சொர்க்கம் போல இருந்தது. ஆனால், சிங்களப் பகுதியான ஹோமாகமாவில் சிறைச்சாலை ஒன்று அவசரமாக கட்டப்பட்டு வருவதை நாங்கள் அறிந்துகொண்டோம். கடந்த காலத்தின் அத்தனை கொடூரமான அனுபவங்களையும் நினைத்துப் பார்த்தோம், மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும் சிறையை உடைத்துத் தப்பிச் செல்வது என முடிவெடுத்தோம். அதன்படி, 1983 செப்டம்பர் 23 அன்று நாங்கள் தப்பினோம்." 'கறுப்பு ஜூலை' வன்முறைகளில் இருந்து உயிர்பிழைத்து, மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து தப்பித்த நாற்பதுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளில் (இலங்கைத் தமிழர்கள்) ஒருவரான சாலமன் அருளானந்தம் டேவிட் பதிவு செய்த வார்த்தைகள் இவை. மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 1983 செப்டம்பர் 23 இரவு, தப்பித்த டேவிட், பின்னர் இந்தியா வந்தடைந்தார். சென்னையில் பல ஆண்டுகள் வாழ்ந்த அவர், 2015இல் இலங்கையின் கிளிநொச்சியில், தனது 91வது வயதில் மரணமடைந்தார். "அந்த ஒரு இரவுக்காக நாங்கள் பல நாட்களாக திட்டமிட்டோம், வன்முறைகள் ஏதுமின்றி தப்பிக்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அப்படியே தப்பித்தோம்" என்று 43 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் இரவை பிபிசி தமிழிடம் நினைவு கூர்ந்தார் இலங்கையின் முன்னாள் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த 'மட்டக்களப்பு சிறைச்சாலை' சம்பவம், இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக இருக்கும் 'கறுப்பு ஜூலை' வன்முறைகளின் தொடர்ச்சியாகும். பட மூலாதாரம், AP இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போர், 2009-ஆம் ஆண்டு மே 18 அன்று முடிவுக்கு வந்தது. இலங்கை உள்நாட்டுப் போர் தொடங்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முக்கியக் காரணமாக இருந்தது கறுப்பு ஜூலை சம்பவம். விடுதலை புலிகள் அமைப்பு, 1983-ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று, முதல்முறையாக ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. அதில் 13 சிங்கள ராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர். அடுத்த சில நாட்களில் இலங்கைத் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. End of அதிகம் படிக்கப்பட்டது சில சிங்கள இனவாதக் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள், நிர்வாணமாக்கப்பட்டார்கள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பலரது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. லட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். பலர் நாட்டை விட்டே வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்தார்கள். 2004-ஆம் ஆண்டில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 'கறுப்பு ஜூலை'யை நாசிசத்துடன் ஒப்பிட்டு, தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். அவர் நியமித்த ஆணையம் ஒன்று, 'கறுப்பு ஜூலை வன்முறைகளில் கிட்டத்தட்ட 1,000 பேர் உயிரிழந்ததாகவும், 7,00,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும்' தெரிவித்தது. பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இந்த 'கறுப்பு ஜூலை வன்முறைகளில்', வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 53 தமிழ் கைதிகள் சிங்கள கைதிகளால் இரண்டு வெவ்வேறு நாட்களில் (25 மற்றும் 27 ஜூலை 1983) கொல்லப்பட்டதும் அடங்கும். இலங்கைத் தமிழர்கள் பலரும் அப்போது அரசியல் கைதிகளாக 'பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக 'அம்னெஸ்டி இன்டெர்நேஷனல்' அறிக்கை கூறுகிறது. அதில் ஒருவர் தான், சாலமன் அருளானந்தம் டேவிட் எனப்படும் எஸ்.ஏ.டேவிட், அவருக்கு அப்போது வயது 59. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்து (1924), ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் படித்து, பிரிட்டனில் ஆர்கிடெக்ட்டாக பணியாற்றி வந்த எஸ்.ஏ.டேவிட், காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இலங்கையில் 'காந்தியம்' என்ற அமைப்பை தனது நண்பர் ராஜசுந்தரத்துடன் இணைந்து தொடங்கினார். "எங்கள் காந்தியம் பயிற்சி மையத்தில் நாங்கள் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம் என்ற முடிவுக்கு இலங்கை அரசாங்கம் வந்து, 1983-இல் என்னையும் ராஜசுந்தரத்தையும் கைது செய்தது. சிறைச்சாலை கலவரங்களுக்குப் பிறகு, மனித உடல்களின் குவியலை நான் கண்டேன். அந்தக் கலவரங்களில் எனது நண்பர் ராஜசுந்தரமும் உயிரிழந்தார்" என 2012-இல் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் டேவிட். 27 ஜூலை, 1983 அன்று வெலிக்கடை சிறையில் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் தனது 'டிடன்ஷன், டார்ச்சர் அண்ட் மர்டர்' என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "27-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் நாங்கள் இருந்த பிரிவைச் சுற்றி கூச்சல் எழுந்தது. ஆயுதம் ஏந்திய கைதிகள் சுற்றுச்சுவர்களில் ஏறிக்குதித்து, பிரிவின் கதவுகளை உடைக்கத் தொடங்கினர். கோடாரிகள், வாள்கள், கடப்பாரைகள், இரும்புக் குழாய்கள் மற்றும் மரக்கட்டைகளுடன் ஆயுதமேந்திய சுமார் 40 கைதிகள் எங்கள் சிறை அறைக்கு முன் தோன்றி, அதன் பூட்டை உடைக்கத் தொடங்கினர்." "ராஜசுந்தரம் கதவருகே சென்று, 'நாங்கள் எந்த கொள்ளையிலோ அல்லது கொலையிலோ ஈடுபடவில்லை, எங்களை விட்டுவிடுங்கள்' என அவர்களிடம் கெஞ்சினார்; 'இந்துக்களான நாங்கள் வன்முறையில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, பௌத்தர்களான நீங்கள் கொலை செய்யக்கூடாது' என்றும் மன்றாடினார். திடீரென கதவு திறக்கப்பட்டவுடன், ராஜசுந்தரம் வெளியே இழுக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, உயிரிழந்தார்". "எஞ்சியிருந்த நாங்கள் எங்கள் அறையில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேசைகளை உடைத்து, அவற்றைக் கொண்டு அந்தக் கூட்டத்தை சுமார் அரை மணி நேரம் எங்களை நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினோம். அதன்பின் ராணுவம் அங்கு வந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அந்தக் கூட்டத்தைக் கலைத்தது" என அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம், DOUGLAS CURRAN/AFP via Getty Images இந்த சம்பவத்திற்கு பிறகு டேவிட் உள்ளிட்ட அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அடைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள வரிகளை அவர் குறிப்பிடுகிறார், "ஒப்பீட்டளவில் மட்டக்களப்பு சிறைச்சாலை சொர்க்கம் போல இருந்தது. ஆனால், சிங்களப் பகுதியான ஹோமாகமாவில் சிறைச்சாலை ஒன்று அவசரமாக கட்டப்பட்டு வருவதை நாங்கள் அறிந்துகொண்டோம். கடந்த காலத்தின் அத்தனை கொடூரமான அனுபவங்களையும் நினைத்துப் பார்த்தோம், மரணத்தைச் சந்திக்க நேரிட்டாலும் சிறையை உடைத்துத் தப்பிச் செல்வது என முடிவெடுத்தோம். அதன்படி, 1983 செப்டம்பர் 23 அன்று நாங்கள் தப்பினோம்." 1983, செப்டம்பர் 25 தேதியிட்ட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் செய்தியின்படி, 'குறைந்தது 250 கைதிகள் அன்றைய இரவு (செப்.23, 1983) தப்பிச் சென்றுள்ளனர்'. 'சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் 10 பேர், அதற்கு மறுநாளே மீண்டும் கைது செய்யப்பட்டதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஐந்து கைதிகள் காவல்துறையிடம் சரணடைந்த நிலையில், அவர்கள் பயணம் செய்த பேருந்துகளிலிருந்து ஆறு பேரை காவல்துறையினரும், ஐந்து பேரை ராணுவத்தினரும் கைது செய்தனர்' என அந்தச் செய்தி குறிப்பிடுகிறது. 'தப்பியோடிய அரசியல் கைதிகளில் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல தமிழர்களும் அடங்குவர்' என அச்செய்தி விவரிக்கிறது. 'ராணுவச் சீருடை அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் மட்டக்களப்பு அதிஉயர் பாதுகாப்புச் சிறைக்குள் நுழைந்து, பணியிலிருந்த காவலர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கைதிகளை விடுவித்ததாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் காவலர்கள் அனைவரும் காயங்களின்றி கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.' 'இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தப்பிய கைதிகளைத் தேடும் வீடு வீடாக சோதனைப் பணிகளும் தொடங்கப்பட்டன' என 1983, செப்டம்பர் 25 தேதியிட்ட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் தெரிவிக்கிறது. பட மூலாதாரம், Douglas Devananda/Facebook "வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தமிழ் அரசியல் கைதிகளான எங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சிங்களர்கள் அதிகம் உள்ள ஒரு சிறைச்சாலைக்கு நாங்கள் கொண்டுசெல்லப்பட்டால், மீண்டும் ஒரு மோசமான தாக்குதல் நடக்கலாம் என்ற தகவல் கிடைத்தது, அதுவே எங்களை அப்படி ஒரு முடிவெடுக்கச் செய்தது" என்கிறார் இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. வெலிக்கடை சிறை வன்முறைகளில் உயிர்பிழைத்து, மட்டக்களப்பு சிறைக்கு அனுப்பப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் தேவானந்தாவும் ஒருவர். 43 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்த அவர், "அப்போது நான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் (EPRLF) அமைப்பில் இருந்தேன். என்னுடன் ப்ளொட் (PLOTE) அமைப்பின் தரப்பில் பரந்தன் ராஜனும், தம்பாப்பிள்ளை மகேஸ்வரனும் மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பிக்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர்" என்கிறார் அவர். இதற்காக 10 நாட்களுக்கும் மேலாக திட்டம் தீட்டப்பட்டது எனக் குறிப்பிடும் அவர், "அந்த பத்து நாட்களும் சிறைக் காவலர்களின் நடவடிக்கைகளை நாங்கள் நோட்டமிட்டோம். கைதிகளைப் பார்ப்பதற்காக வந்த உறவினர்கள், நண்பர்கள் மூலம் வெளியில் உள்ள எங்களது ஆட்களுக்கு தகவல்களை பரிமாறினோம்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "அப்போது இரவில் ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்தது. எனவே ஒரு சிறு ஓசை கூட கேட்டுவிடும். என் சக கைதிகள் பலரையும் இரவில் ஆறேமுக்கால் முதல் எட்டு மணி வரை 'பய்லா' (இசை மற்றும் நடனம்) பாடுவது, சத்தம் போடுவது என ஒரு பத்து நாட்களுக்கு அதைச் செய்ய வைத்தேன். ஏனென்றால், ரோந்து செல்லும் ராணுவம் அல்லது போலீசார் என்ன யோசிப்பார்கள்? உள்ளே திடீரென்று விசித்திரமாக சத்தம் கேட்டால் உடனே அவர்களுடைய கவனம் சிறையின் மீது இருக்கும் அல்லவா?" என விவரித்தார். "எனவே செப்டம்பர் 23 இரவு இரவில் ஆறேமுக்கால் முதல் எட்டு மணிக்குள் தப்பிப்பது தான் எங்களது திட்டம். ஆனால், வன்முறை நடவடிக்கைகள் ஏதுமில்லாமல் தப்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்" என்றும் அவர் கூறுகிறார். 'அன்றைய தினம் வெளியே எங்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் நபர்கள் ஆயுதங்களுடன் வந்திருந்தார்கள், ப்ளொட் அமைப்பு இரண்டு வாகனங்களைக் கொண்டு வந்திருந்தது' என விவரித்தார் தேவானந்தா. பட மூலாதாரம், Ishara S.KODIKARA/AFP via Getty Images தேவானந்தா மற்றும் குழுவினர் சிறையைக் கைப்பற்றும் போது ஏற்பட்ட சத்தத்தை ஈடுசெய்ய, ஒருபுறம் பய்லாவும் அரங்கேறியுள்ளது. ஆனால், 'சிறையில் பய்லா தான் நடக்கிறது என ரோந்து படையினர் அதைக் கடந்து சென்றுவிட்டார்கள்' எனக் குறிப்பிடுகிறார் தேவானந்தா. வெளியில் இருந்து தன்னுடைய குழுவினர் கொண்டுவந்த ஆயுதங்களைக் கொண்டு சிறையைக் கட்டுப்படுத்தி, தானும் பிற தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்லாது, வேறு சில கைதிகளும் வெளியேறியதாக அவர் கூறுகிறார். "அதில் யாருக்கும் எந்தக் காயமும் இல்லை. குறிப்பாக சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தரப்பில் கூட எந்த விதமான உடல் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ இல்லாமல் அதனை நாங்கள் லாவகமாகச் செய்து முடித்தோம்". "பின்னர் ப்ளொட் அமைப்பு கொண்டுவந்த வாகனங்களில் நாங்கள் தப்பிச் சென்றுவிட்டோம். சில நாட்கள் குறிப்பிட்ட இடங்களில் பதுங்கி இருந்து, யாழ்ப்பாணத்தை அடைந்தோம். பிறகு அங்கிருந்து படகு மூலம் இந்தியாவை அடைந்தோம்" என்கிறார் தேவானந்தா. இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையான வெலிக்கடை, 1800களில் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டது. வெலிக்கடை சிறை வரலாற்றில் பல மோதல்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, நவம்பர் 2012இல், கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் இறந்தனர். கூடுதல் தகவல்கள்- ரஞ்சன் அருண்பிரசாத், பிபிசி தமிழுக்காக - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
'மரணத்தை சந்தித்தாலும் தப்பிப்போம்' - கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கை சிறையில் இருந்து தமிழ் கைதிகள் தப்பியது எப்படி?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk