சட்டம் ஒழுங்கு தொடர்பான சில முக்கியத் தகவல்களை, இனிமேல் RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சமூக - சாதி மோதல்கள், மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான விவகாரங்கள் இனி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது. அதேபோல் அரசியல் காரணங்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், காவல்துறையின் துப்பாக்கிச் சூடு, காவல் மரணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளும் வழங்கப்படாது எனவும் தெரிவித்திருந்தது. எனினும், தமிழக அரசின் இந்த முடிவுக்கு கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக மற்றும் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ”சட்டம் ஒழுங்கு தொடர்பாக 'தகவல்கள் ஏதும் கேட்க முடியாதென' , தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது மனித உரிமைகளை நசுக்குவதற்கு வழிவகுக்கும். எனவே, அரசு இதனை உடனே திரும்ப பெறவேண்டுமென வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பிய எம்.பி. கனிமொழி, “வெளிப்படையான அரசு” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது. 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு, இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது. இதுதான் மாற்றமா?” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதேசமயம், தமிழக அரசின் முடிவு குறித்து விளக்கமளித்த அமைச்சர் நிர்மல்குமார், மாவட்டங்களுக்குள் சமூகம் சார்ந்து நடக்கும் பிரச்னைகளுக்கான விசாரணை தொடர்பான விவரங்களை இனி பெற முடியாது. ஏனெனில் அவை மேலும் சர்ச்சையாகும். இதில் ஏதும் மக்களுக்கு சங்கடம் ஏற்படும் எனில் முதல்வரிடம் தெரிவிக்கப்படும். பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படும். சட்டத்தின் 20 பிரிவுகளில் ஒரு சிலவற்றிற்கு தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். எனினும், இந்தச் சட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்த நிலையில் தான், ஆர்டிஐயில் சட்டம் ஒழுங்குக்கு விலக்கு அளித்ததை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள பதிவில், ”தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
RTI சட்டம் ஒழுங்கு விலக்கு.. எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள்.. வாபஸ் பெற்றது தவெக அரசு!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk