செய்தியாளர் - கார்த்திகேயன் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வழக்கத்திற்கு மாறாக வெப்பம் அடைவதைதான், ’எல் நினோ’ என்று அழைக்கிறோம். இந்தக் காலநிலை மாற்றத்தால், உலகின் ஒருசில நாடுகளில் அதீத வறட்சியும், மற்ற சில நாடுகளில் வெள்ளமும் ஏற்பட்டு, பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மாதிரியான நாடுகளில், வறட்சி, வெள்ளம் ஆகிய இரண்டும் ஒருசேர வந்து, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இவ்வாறு உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் எல் நினோவால், இந்தியாவின் மாநிலம் ஒன்றும், மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதாவது, இந்தியா பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பு செய்யும் மாநிலங்களில் முதன்மையானது மகாராஷ்டிரா. இந்த மாநிலத்தில், மொத்தமாக 358 தாலுக்காக்கள் இருந்து வருகின்றன. இதில், 265 தாலுக்காக்களில் தீவிர வறட்சி நிலவுவதாக, மகாராஷ்டிரா அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 75 சதவீத நிலப்பரப்பு வறட்சியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. போதுமான மழை பெய்யாதது போன்ற காரணிகளால், இந்த வறட்சியான சூழல் உருவாகியுள்ளது. பருவமழை காலம் வந்தபோதும், குறைந்தது 21 நாட்களுக்கு போதுமான மழை பெய்யாமல் வறண்ட வானிலை நீடித்தது இப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரண நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவரியை தள்ளுபடி செய்தல், விவசாய பயிர்க்கடனை அடைக்க அவகாசம் அளித்தல், விவசாயக் கடன்கள் வசூலிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, கடந்த சில வருடங்களில் நூற்றுக்கணக்கான அடிகளுக்கு கீழே நிலத்த நீர் மட்டம் சரிந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது எல் நினோ காரணமாக, வறட்சி ஏற்பட்டு மேலும் இந்தப் பிரச்னை அதிகரித்துள்ளது. இதே நிலை இன்னும் நீடித்தால், நிலத்தடி நீர் முற்றிலும் மனிதர்களின் பயன்பாட்டிற்குக் கிடைக்காத ஆழத்திற்குச் சென்றுவிடும் அபாயம் இருப்பதாக, நீர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
75% நிலத்தில் வறட்சி.. ஆபத்தில் இந்திய மாநிலம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk