அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி. 29.10.1976 - Dinamani புதுடில்லி, அக். 28 - மத்திய புலனாய்வு ஸ்தாபனத்திற்கு (சி.பி.ஐ.) சில தஸ்தாவேஜுகளைக் கொடுக்க முன்னாள் தி.மு.க. அரசு தயக்கம் காட்டியதும், மறுத்ததும் குற்றத்தை வலியுறுத்தும் மிக வலிமையான ஒரு சான்று ஆகும் என்று அடிஷனல் சொலிஸிடர் ஜெனரல் வி.பி. ராமன் இன்று சர்க்காரியா கமிஷன் முன்பு கூறினார். விவசாய நிலங்களுக்கு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்க ஒப்பந்தங்களை வழங்க லஞ்சம் பெற்றதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் விவசாய மந்திரி அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் மீது கூறப்பட்டுள்ள புகார் பற்றி சர்க்காரியா கமிஷன் முன்பாக ராமன் இன்று மத்திய அரசு தரப்பில் வாதங்களை எடுத்துரைத்தார். அரசாங்க ஒழுங்குமுறை நியதிகளின் நலனையொட்டி இந்த தஸ்தாவேஜுகள் அடங்கிய பைல்கள் சி.பி.ஐ.க்குத் தரப்படவில்லை என்று கருணாநிதி, மற்றும் அவரது மந்திரிசபை சகாக்கள் சார்பில் கூறப்பட்ட வாதத்தை ராமன் ஆட்சேபித்தார். தமிழ்நாடு விவசாயத் துறை டைரெக்டராக இருந்த ஹரிபாஸ்கர் மீதான சில புகார்கள் பற்றிய சி.பி.ஐ. விசாரணை இறுதியில் தங்களைப் பிடித்துக்கொள்ளும் என்ற பயத்தின் காரணமாகத் தான் எதிர்வாதிகள் தஸ்தாவேஜிகள் அடங்கிய பைல்களை சி.பி.ஐ.க்குக் கொடுக்க மறுத்தார்கள் என்று ராமன் கூறினார். "இந்த பைல்கள் வேண்டும் என்று 1973-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் சி.பி.ஐ. கேட்டது. ஒரு வருடத்திற்குப் பிறகு தமிழ்தாடு அரசை இது சம்பந்தமாக சி. பி. ஐ. மீண்டும் கவனப்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும், மத்திய நிதி சம்பந்தப்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரம் ஒரு மாநிலத்திற்கு அதிகமான விரிவெல்லை கொண்டது என்றும் சி. பி. ஐ. கூறியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மாநில அரசில் பணி புரிந்தவர் என்றும், எனவே ஒரு மத்திய அமைப்பு குறுக்கிட மாநில அரசு அனுமதிக்கவில்லை என்றும் கருணாநிதி தமது பிரமாண வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். அவரது இந்த நிலை சரியல்ல" என்று ராமன் கூறினார். ... புதுடில்லி, அக். 28 - 59 ஷரத்துக்கள் கொண்ட 44-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவில் 6 ஷாத்துக்களை லோக சபை இன்று நிறைவேற்றியது. மசோதாவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்ற (பொது அங்கீகார) பிரேரணை 346 ஆதரவு வோட்டுகளுடனும், 2 எதிர்ப்பு வோட்டுகளுடனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, ஷரத்து வாரி விவாதம் ஆரம்பமாகியது. பொது ஜன அபிப்ராயத்தைப் பெறுவதற்காக இந்த மசோதாவை சுற்றுக்கு விடக் கோரி ஷிபன் லால் சாக்ஸேனா கொண்டு வந்த திருத்தம் தோற்றது. சோஷலிஸம், மதச்சார்பின்மை ஒருமைப்பாடு ஆகிய கருத்துக்களை முகவுரையில் திட்டவட்டமாகக் குறிப்பிடும் ஷரத்து(2-வது ஷரத்து) இன்று நிறைவேற்றப்பட்டவைகளில் ஒன்றாகும். ... தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
29.10.1976: சர்க்காரியா கமிஷன் விசாரணை - சிபிஐக்கு திமுக அரசு பைல்களை தர மறுத்தது முக்கிய சான்று
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗