சென்னை: வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் சி.பழனி உட்பட 3 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் 2 பேர், 69 துணை ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) டி.ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநராகவும், அந்த பதவியில் இருந்த சி.பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல, விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய கே.எம்.சரயு, பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்தப் பொறுப்பில் இருந்த கே.பி.கார்த்திகேயன், மத்திய அரசுப் பணிக்கு சென்றதைத் தொடர்ந்து அங்கு சரயு பணியமர்த்தப்பட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர், பேரூராட்சிகள் இயக்குநர் ஆகிய பதவிகள், சமூக நலத் துறை இயக்குநர் பதவிக்கு இணையான அந்தஸ்து மற்றும் பொறுப்புகளைக் கொண்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை பாஸ்கர பாண்டியன் கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மாவட்ட வருவாய் அதிகாரிகள் நிலையில் உள்ள ஈரோடு மாவட்ட ஆவின் பொது மேலாளர் எம்.அமிர்தலிங்கம், விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், கிருஷ்ணகிரி உதவி நிலவரித் திட்ட அதிகாரியாக இருந்த வி.ரவி, நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார். வருவாய்த் துறை செயலர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, வருவாய் கோட்டாட்சியர்களாக நாமக்கல் - ச.பிரபாகரன், கிருஷ்ணகிரி - கு.பூமா, திருப்பத்தூர் - இரா.குணசேகரன், ராமநாதபுரம் - எஸ்.ஜெயசித்ரகலா, மன்னார்குடி - சு.தனலட்சுமி, தாம்பரம் - எஸ்.ரேணுகா, கூடலூர் - ஏ.வி.கல்பனா, மதுரை - மா.வேலாயுதம், கோவை தெற்கு - டி.பாலமுருகன், மயிலாடுதுறை - கா.அமுதா, சென்னை மத்தி - ர.கிருபா உஷா, கடலூர் - ப.லாவண்யா உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகள், மாவட்டங்களில் 69 துணை ஆட்சியர் நிலையில் உள்ள வருவாய் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗