கும்பகோணம்: கும்பகோணம் அருகே மூன்று வயது குழந்தையை கொஞ்சுவது போல் உடல் முழுவதும் கடித்து காயப்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரின் வெறிச் செயலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த குழந்தையின் தாயும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் கம்மாள தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி அட்சயா (24). இவர்களுக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை, மூன்று வயதில் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு மாதங்கள் முன்பு அன்பழகன், மலேசியாவுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் திருப்புரம்பியம் பகுதியை சேர்ந்த யோகராஜ் என்பவர் சாய் பவுண்டேஷன் என்ற பெயரில் சுய உதவிக் குழு நடத்தி வருகிறார். இதில் கடந்த இரண்டு மாதங்களாக கலெக்சன் ஏஜெண்டாக அக்ஷயா வேலை செய்து வருகிறார். இதனால் யோகராஜ், அக்ஷயா வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்படி வரும் போது மூன்று வயது குழந்தை பெண் குழந்தையை தூக்கி கொஞ்சி உள்ளார். குழந்தையின் உடல் முழுவதும் பல இடங்களில் கடித்த தழும்பு உள்ளது. இது குறித்து தெருவாசிகள் அட்சயாவிடம் கேட்டதற்கு, அவர் எந்தவித பதிலும் கூறாமல் கண்டுக்கொள்ளாமல் இருந்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தெருவை சேர்ந்த மக்கள், குழந்தையை தூக்கிக் கொண்டு நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு சென்றனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த காவல் நிலையத்திற்கு அட்சயாவும் வந்திருந்தார். இது குறித்து ஆடுதுறையில் உள்ள திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குதகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி விசாரணை செய்ததில் குழந்தை இடம் அநாகரிகமாக நடந்து கொண்டது தெரிய வரவே யோகராஜை கைது செய்தனர். மேலும் பெண் குழந்தையிடம் யாராவது அநாகரீகமாக நடந்து கொண்டால் கொந்தளித்து தட்டிக் கேட்கக் கூடிய இடத்தில் இருக்கும் தாயோ, அதை தடுக்காமல் இருந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 வயது குழந்தையை கொஞ்சுவதாக கூறி அநாகரீகமாக நடந்த இளைஞர்! தடுக்காத தாய்! இருவரும் கைது!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: oneindia.com (original report) ↗