உலக சிக்கன நாளையொட்டி முதல்வர் விஜய் பதிவு... முதல்வர் விஜய் - IANS ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில் ஒரு பகுதியைச் சேமிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய, சேமிப்பை வலியுறுத்தும் பொருட்டு அக். 30 ஆம் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சிக்கனத்தின் சிறப்புக் குறித்து அய்யன் திருவள்ளுவர், 'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்' என்ற குறளில், பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கையானது, பல வளங்களும் இருப்பதுபோல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார். செலவு செய்தது போக எஞ்சியதைச் சேமிக்காமல், சேமித்தது போக எஞ்சியதைச் செலவு செய்தால் எதிர்காலத்தில் நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கலாம். இன்று நாம் செய்யும் சிறுசேமிப்பு தான், ஆபத்துக் காலத்தில் நமக்குப் பேருதவியாகத் துணை நிற்கும். "சிறுதுளி பெருவெள்ளம்" என்பதற்கிணங்க, நாம் சேமிக்கும் ஒவ்வொரு சிறிய தொகையும் நம் எதிர்காலத்தைப் பாதுகாக்கும். ஒருவர் தன் நிதி நிலையை அறிந்து அதற்கு ஏற்றார் போல செலவழிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஆடம்பரத்திற்காக கடன் வாங்கிச் செலவு செய்வது ஒருவரை பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும். எனவே, ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில் ஒரு பகுதியைச் சேமிக்க வேண்டும்; அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்கிட வேண்டுகிறேன். சேமிப்பின் மூலம் சிறப்பான வாழ்வுக்கு வழிவகுப்போம் என்று உலக சிக்கன நாளில் உறுதியேற்போம். சிக்கனத்தைக் கடமையாக்குவோம்! சேமிப்பை வழக்கமாக்குவோம்! வளமான வாழ்வை உரிமையாக்குவோம்!" என்று பதிவிட்டுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆடம்பரத்திற்காக கடன் வாங்கினால் பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்! முதல்வர் விஜய்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗