லக்னோ: வன்முறை மூலம் ஆட்சி மாற்றத்தை கோரும் நபர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்குவது நிறுத்தப்படும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. சமீபத்திய போராட்டங்களில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சிலர் கோஷமிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான், உத்தர பிரதேச அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அரசுக்கு எதிராக ஆட்சி மாற்றம் கோருவோருக்கு கடிவாளம் போடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அரசு பணியாளர் நியமன துறையின் முதன்மை செயலாளர் எம் தேவராஜ் புதிய வழிக்காட்டுதல்களை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ''வன்முறை மூலமாக ஆட்சி மாற்றம் கோரும் நபர்களுக்கு உத்தர பிரதேசத்தில் அரசு வேலை வழங்க கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு அரசு பணிகளுக்கும் தேர்வாகும் நபர்களின் பின்னணி, நன்னடத்தை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும். இதனை போலீசார் 30 நாட்களில் வழங்க வேண்டும். ஒருவர் அரசு பணிக்கு தேர்வாகும்போது ஆவணங்கள் சரிபார்ப்பு தேதியில் இருந்து முந்தைய 3 ஆண்டுகள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தால் அவர் இன்னும் கூட அதே செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கருதப்படும். அதேவேளையில் 3 ஆண்டு இடைவெளியில் நடத்தையில் மாற்றம் இருந்தால் அதுபற்றி பரிசீலனை செய்யப்படும். அதேவேளையில் ஒருவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டாலோ அல்லது விசாரணை நிலுவையில் இருப்பதாலோ அவர் தானாகவே தகுதியிழக்கமாட்டார். அதேவேளையில் அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்வோரின் அரசியல் சித்தாந்தத்தை மட்டும் வைத்து பணிக்கு அவர் தகுதியற்றவர் என நிர்ணயிக்கப்படாது. '' என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு என்பது மாநில அரசு பணிகள், ஆணையங்கள், கவுன்சில்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என்று அனைத்திற்கும் பொருந்தும். உத்தர பிரதேச அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளனர். தற்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி ஆட்சி மாற்றம் கோரி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தான் உத்தர பிரதேச அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆட்சி மாற்றம் கோரி போராடினால் இனி அரசு வேலை கிடையாது.. உத்தர பிரதேச முதல்வர் அதிரடி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: oneindia.com (original report) ↗