டெல்லியின் புழுதி நிறைந்த வீதிகளில் எளிய மக்களின் உரிமைகளுக்காக ஒலித்த ஒரு குரல், சென்னை குடிசைப் பகுதிகளுக்குள் இறங்கி, அடிப்படை சுகாதார வசதிகளுக்காக வரைபடம் வரைந்த ஒரு கரம்... இன்று உலகின் மிக ஆடம்பரமான, ‘ஹாலிவுட்’ அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரத்தின் மேயர் செங்கோலைக் கையில் ஏந்தியிருக்கிறது! அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரத்தின் மேயராகப் பதவியேற்கும் முதல் இந்தியர், முதல் தெற்காசியப் பெண் மற்றும் முதல் இந்துப் பெண் என்ற பல பெருமைகளை நித்யா தன் வசமாக்கியுள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகமும் எம்ஐடி (MIT) இவருக்கு கல்விக் கோட்பாடுகளைக் கற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால், டெல்லி மற்றும் சென்னையின் குடிசைப் பகுதிகளில் நேரடியாகக் கற்றுக் கொண்ட கள அனுபவத்தை அமெரிக்க அரசியலில் ஆயுதமாக மாற்றி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேயர் அரியணையை அவர் கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் அவர் பெற்ற இந்த அனுபவங்கள்தான், பிற்காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸின் மிகப்பெரிய பிரச்சினையான ‘வீடற்றோர் மறுவாழ்வு’ திட்டத்துக்கு அடித்தளமிட்டது. சென்னை வீதிகளில் தொடங்கிய ஒரு பெண்ணின் தொலைநோக்குப் பார்வை, இன்று அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தின் தலையெழுத்தையே மாற்றியிருக்கிறது. வரலாறு திட்டமிட்டு எழுதப்படுவதில்லை; சாதனைகளால் அது படைக்கப்படுகின்றன என்பர். அதற்கு ஆகச்சிறந்த உதாரணம்தான் நித்யா ராமன். கேரளாவில் தொடங்கி லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் மாளிகை வரையிலான நித்யா ராமனின் பிரமிக்கத்தக்கப் பயணத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம். இளமைக் காலமும் கல்விப் பின்னணியும்: கடந்த 1981-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி கேரளாவின் திரிச்சூரில் நித்யா பிறந்தார். இவரின் தந்தை ஆர்.வெங்கடேசன் கெல்ட்ரான் (KELTRON) நிறுவனத்திலும், தாய் சுதா, இந்திய ஓவர்சீஸ் வங்கியிலும் (IOB) பணியாற்றியவர்கள். தனது 6-வது வயதில் தந்தையின் வேலை காரணமாக குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அமெரிக்காவில் பாஸ்டன் மற்றும் லூசியானா பகுதிகளில் வளர்ந்த நித்யா, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமூக ஆய்வுகள் பிரிவில் இளங்கலையும், புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (MIT) நகர்ப்புறத் திட்டமிடல் (Urban Planning) துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறுவயதிலேயே அமெரிக்கா சென்றபோதிலும், தனது 22-வது வயதில்தான் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைத்தது. அமெரிக்காவில் வசித்தாலும் கேரளாவில் உள்ள உறவினர்களுடனான தொடர்பையும், தனது கலாச்சார மரபையும் அவர் ஒருபோதும் கைவிடவில்லை. டெல்லி மற்றும் சென்னை களப்பணிகள் முதுகலைப் படிப்பை முடித்த பிறகு, இந்தியாவில் உள்ள நகர்ப்புறச் சிக்கல்களை நேரடி ஆய்வின் மூலம் புரிந்துகொள்ள நித்யா தாயகம் திரும்பினார். 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளின்போது டெல்லி குடிசைவாசிகள் அப்புறப்படுத்தப்படுவதை எதிர்த்து வீதியில் இறங்கி போராடினார் நித்யா. அதைத் தொடர்ந்து, ‘சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச்’ (CPR) அமைப்பில் இணைந்து ஏழைகளின் வறுமை ஒழிப்பு குறித்துப் பணியாற்றினார். பாடம் கற்பித்த சென்னை: அதன்பின் சென்னைக்கு வந்த நித்யா ராமன், ‘ட்ரான்ஸ்பரன்ட் சென்னை’ (Transparent Chennai) என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கை, பயன்பாடு, பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதி குறித்து கள ஆய்வு செய்து, அந்த தரவுகளை துல்லியமாக வரைபடமாக்கினார் (Data Mapping). இந்த அறிக்கை சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பல இடங்களில் கழிப்பறைகள் சீரமைக்கப்பட வழிவகுத்தது. மேலும், அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரையோரக் குடிசைப் பகுதி மக்களின் மறுவாழ்வு, தூய்மைப் பணியாளர்களின் பணி நிலைமை ஆகியவை குறித்தும் விரிவான ஆய்வறிக்கைகளை நித்யா வெளியிட்டார். அமெரிக்க அரசியலுக்கான அடித்தளமாகவும் பிற்காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் 'SELAH Neighborhood Homeless Coalition' என்ற அமைப்பைத் தொடங்குவதற்கும், அங்குள்ள வீடற்ற மனிதர்களின் பிரச்சினைகளுக்கு அறிவியல் பூர்வமான தீர்வை முன்வைப்பதற்கும் சென்னையில் நித்யா திரட்டிய புள்ளிவிவரங்களும், வரைபட அடிப்படையிலான களப்பணியும்தான் பெரும் அனுபவமாக அமைந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு நித்யா ராமன் அளித்த பேட்டியில், “சென்னையில் குடிசைப் பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக உழைத்த அனுபவமே என்னைச் சிறந்த நகர்ப்புறத் திட்டமிடுபவராகவும் தலைவராகவும் மாற்றியது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். அரசியல் எழுச்சியும் தேர்தல் வெற்றியும்: 2019-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கவுன்சிலின் 4-வது மாவட்ட வேட்பாளராகக் களம் இறங்கிய நித்யா, ஏறக்குறைய 83 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டினார். வீடற்றோர் மறுவாழ்வு, சீரான சாலைகள், காலநிலை மாற்றம் போன்ற தொலைநோக்குக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 2020 தேர்தலில் 52 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளேடு இவரின் வெற்றியை ‘அரசியல் பூகம்பம்’ எனக் கொண்டாடியது. மக்கள் பிரதிநிதியான பிறகும் தனது போராட்டக் குணத்தை விடாத நித்யா, 2023-ல் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதானார். 2024 தேர்தலில் தொகுதியைத் துண்டு துண்டாக உடைத்து இவரை வீழ்த்தத் தீட்டப்பட்ட சதித்திட்டங்களை மக்கள் ஆதரவோடு முறியடித்து மீண்டும் வெற்றி வாகை சூடினார். தொடர்ந்து, 2026 மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டார். முந்தைய மேயர் கரேன் பாஸின் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை மக்களிடம் எடுத்துக் கூறி, தனக்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார். கருத்துக்கணிப்புகளில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்த நித்யா ராமன், இறுதியில் மேயர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கை: நித்யா அமெரிக்க நாடகத் திரைக்கதை ஆசிரியரான வாலி சந்திரசேகரனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் வாலி சந்திரசேகரன் Modern Family, 30 Rock போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்களின் திரைக்கதை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரபல தமிழ் நடிகை அபிராமி (விருமாண்டி நாயகி) இவரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு முக்கிய மாநகரத்தின் மேயராகப் பொறுப்பேற்கும் இந்து மதத்தைப் பின்பற்றும் முதல் நபர் நித்யா ராமன் தான். அமெரிக்காவில் இருக்கும் ‘சமோசா காக்கஸ்’ (Samosa Caucus - அமெரிக்க அரசியலில் இருக்கும் இந்திய வம்சாவளியினரின் குழு) அமைப்பின் மிக முக்கியமான பெண் முகமாகவும் அவர் உருவெடுத்துள்ளார்.
சென்னை களப் பணி அனுபவம், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்... யார் இந்த நித்யா ராமன்?