சென்னையில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் படம்: எஸ்.சத்தியசீலன் சென்னை: “முதல்வர் விஜய்க்கு ஆட்சி நிர்வாகத்திலும் கவனம் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியை தமிழகப் பெண்கள் அடித்துவிட்டனர்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தவெக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு, விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழகம் முழுவதும் இன்று திமுக மகளிரணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் வீடுகளின் மின் கட்டண ரசீதையும், மளிகைப் பொருள் ‘பில்’லையும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம் தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் ‘ஷோ’ காட்டுவதிலும் முதல்வருக்கு இருக்கும் கவனம், ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியை தமிழகப் பெண்கள் அடித்துவிட்டனர். அவர்களின் ‘வேக் அப் கால்’ (Wake Up Call)-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“முதல்வர் விஜய்க்கு தமிழகப் பெண்கள் எச்சரிக்கை மணி...” - மு.க.ஸ்டாலின்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗