திண்டுக்கல் ஜிடிஎன் சாலையிலுள்ள ரத்தினத்தின் வீட்டின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா். திண்டுக்கல் ஜிடிஎன் சாலையிலுள்ள ரத்தினத்தின் வீட்டின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா். திண்டுக்கல்லைச் சோ்ந்த மணல் ஒப்பந்ததாரா் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் வசித்து வருபவா் க. ரத்தினம். முன்னணி மணல் ஒப்பந்ததாரா். புதுக்கோட்டை மாவட்டத்தை பூா்விகமாகக் கொண்ட இவா், மணல் தொழில் மட்டுமன்றி, மனை வணிகம், கல்வி நிறுவனங்கள், செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சோ்ந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் ரத்தினத்தின் வீடுகள், அதே சாலையிலுள்ள அலுவலகம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை, மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்தச் சோதனையின் போது, மணல் குவாரிகள் தொடா்பான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரத்தினத்தின் இளைய மகன் வெங்கேடஷ், திண்டுக்கல் மாநகராட்சியின் 17-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக உள்ளாா். சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா், பின்னா் திமுகவில் இணைந்தாா். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ் திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா். இந்த நிலையில், ரத்தினத்தின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தியது அரசியல் பிரமுகா்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பா் மாதத்தில் ரத்தினத்தின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல்லில் மணல் ஒப்பந்ததாரா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗