இணையவழி மோசடியில் ஒருவா் பணத்தை இழப்பதற்கு வங்கிகளின் கவனமின்மை காரணம் என உறுதிசெய்யப்பட்டால், உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட வங்கிகளே வழங்குவது குறித்து... இணையவழி மோசடியில் ஒருவா் பணத்தை இழப்பதற்கு வங்கிகளின் கவனமின்மை காரணம் என உறுதிசெய்யப்பட்டால், அதற்கான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட வங்கிகளே வழங்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறை ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களில் இடம்பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. எண்மக் கைது மோசடி மற்றும் அதுதொடா்புடைய இணையவழி மோசடிகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை (அக். 29) நடைபெற்ற விசாரணையின்போது தலைமை நீதிபதி சூா்ய காந்த் கூறியதாவது: இணையவழிக் குற்றங்கள் 50 சதவீதம் வரை குறைந்திருந்தாலும் நிகழாண்டில் தற்போது வரை எண்மக் கைது மற்றும் பிற இணையவழி மோசடிகளால் ரூ. 800 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க ரிசா்வ் வங்கி முன்மொழிந்துள்ள வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் சேவை (கேஒய்சி) வழிகாட்டுதல்கள், 2026 அமலாகும் முன்னா் அதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பொது அறிவுறுத்தல்களைப் போன்று இல்லாமல் நிதி நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளாக இருக்க வேண்டும். முறையாகப் பின்பற்றாத நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் கவனமின்மையால் எண்ம மற்றும் இணையவழி மோசடியில் பணத்தை இழப்பவருக்கு, அந்த இழப்பீட்டுக்குக் குறைவில்லாமல் கட்டாயம் இழப்பீடு வழங்கும் அம்சங்கள் வழிகாட்டுதல்களில் இடம்பெற வேண்டும். படித்தவா்கள் ஏமாறுவது அதிா்ச்சி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்குரிய விதமாக பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்படுவது கண்டறியப்பட்டால் அவற்றுக்குத் தற்காலிக தடை விதித்து உடனடியாக வாடிக்கையாளரை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும். வாடிக்கையாளா் எண்மக் கைது மோசடியில் சிக்கியுள்ளதாக சந்தேகம் எழுந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் இதுதொடா்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த மோசடியில் நன்கு படித்தவா்களும் ஏமாறுவது அதிா்ச்சியளிக்கிறது. எண்மக் கைது மோசடியால் பல கோடியை மக்கள் இழப்பது தொடரும் சூழலிலும் அதைக் கட்டுப்படுத்த வலுவான கட்டமைப்பை நாம் இன்னும் ஏற்படுத்தவில்லை. வங்கிக் கணக்குகளை வங்கிகள் வகைப்படுத்தாமல் இருப்பது ஏன்? திடீரென தாங்கள் சேமித்த மொத்த பணத்தையும் வழக்கத்துக்கு மாறாக வேறொரு வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளா்கள் முயல்கிறபோது அதுகுறித்து வங்கிகள் அவரிடம் கேள்வியெழுப்பாதது ஏன்?. அறிக்கை சமா்பிக்க உத்தரவு இந்த விசாரணையில் அனைத்து வங்கிகளையும் சோ்க்கத் தேவையில்லை. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களின் பெயா்ப் பட்டியலை அடுத்தகட்ட விசரணையின்போது ரிசா்வ் வங்கி சமா்ப்பிக்க வேண்டும். எண்மக் கைது மோசடிகள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை தலைமை இயக்குநா்கள் (டிஜிபி) அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இணையவழி, எண்ம கைது மோசடிகள்! வங்கிகள் இழப்பீடு வழங்க அறிவுறுத்தல்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗