எக்ஸ் பக்கத்தில் தவெக ஐடி விங் பகிர்ந்த ஆவணங்கள் சென்னை: கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக அகல் விளக்கு பதிப்பகத்துக்கும், ஃபீனிக்ஸ் பதிப்பகத்துக்கும் திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது தொடர்பான ஆவணத்தை தவெக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தவெகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘இதோ அகல் விளக்குப் பதிப்பகத்துக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 14/02/2026 அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கெள்முதல் ஆணைக்கான கடிதம் அத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்றொரு பதிவில், ‘ஃபீனிக்ஸ் பதிப்பகம் என்பதே தங்களுக்கு தெரியாது என்பதுபோல திமுக முனகத் தொடங்கி உள்ளது. ஊழலில் ஊறித் திளைத்த உலக மகா யோக்கியர்கள் கொண்ட இயக்கம் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான். இருந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டாமல் விடக் கூடாது என்பதால் ஆதாரங்களை வெளியிட்டே ஆக வேண்டி உள்ளது. ஃபீனிக்ஸ் பதிப்பகத்துக்கு புத்தகக் கொள்முதல் ஆணையை திமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட ஆணை இதோ. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 13/02/2026.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபீனிக்ஸ் பதிப்பகத்துக்கு வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டுள்ளது. தவெக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘பெரியார் அறிவுலகத்தில் திமுக ரூ.50 கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பதிவில், ‘புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருக்கிறது. இதற்கு திமுக என்ன பதில் வைத்திருக்கிறது? தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல் விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களில் இருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிப்பகங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று திமுக அறியுமா? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்! அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால், "இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன" என்று இருக்கிறது. அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா? ஆமாம், நீங்கள் (மு.க.ஸ்டாலின்) 1989-இல் முதலமைச்சராக இருந்தீர்களா? பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த லட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது. அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை? பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட ‘சித்தரஞ்சன் சாலை மூர்த்தி’-க்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா?’ என அந்தப் பதிவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, ‘பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?’ என்று திமுக கேள்வி எழுப்பியிருந்தது கவனிக்கத்தக்கது.
இரு பதிப்பகங்களுக்கும் திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை: ஆவணம் பகிர்ந்து தவெக பதிலடி
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗