ஜெருசலேம்: இஸ்ரேலிய நலன்களுக்கு எதிராக செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் வழங்கிய நிதியுதவி மூலம் அரபு கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், யூத ஆதரவு சியோனிச கட்சிகள் அரபு கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேலிய நலன்களுக்கு எதிராக செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் வழங்கிய நிதியுதவி மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் முறையற்ற செல்வாக்கு செலுத்தப்பட்டதாகக் கடுமையான சந்தேகங்கள் தனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட்டுக்கு, இஸ்ரேலிய மத்திய தேர்தல் குழுவின் தலைவர் நீதிபதி நோம் சோல்பர்க் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் ஒரு பூகம்பம் என இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு வர்ணித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘ராம்கேட் (அரபு கட்சியின் முறைகேடு) விவகாரம் ஒரு பூகம்பம். அவர்கள் இஸ்ரேலில் தேர்தல்களை திருடிவிட்டார்கள். நீதிபதி சோல்பர்க்கின் அறிக்கை, முன்னெப்போதும் இல்லாத அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இதன் நோக்கம், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தை வெளிநாடுகள் கைப்பற்றுவதற்கும், இஸ்ரேலை இஸ்லாமிய மயமாக்குவதற்கும், வலதுசாரி ஆட்சியை கவிழ்ப்பதற்கும் வழிவகுத்து, அதன் மூலம் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையை அனைத்துத் தளங்களிலும் பின்வாங்கச் செய்து தோற்கடிப்பதாகும். வெளிநாட்டு அமைப்புகள் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயன்றது அம்பலமான பிறகு எந்தவொரு சியோனிசக் கட்சியும் (யூத ஆதரவு கட்சியும்) அரபு கட்சிகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது என்பதும், பணத்துக்கு வாங்கப்பட்ட வாக்குகள் மூலம் நாடாளுமன்ற சபாநாயகரை மாற்றக் கூடாது என்பதும், இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒரு அரசாங்கத்தை அமைக்கக் கூடாது என்பதும் தெளிவாகிறது. இந்த குற்றங்களை விசாரிக்க, ஷின் பெட் மற்றும் காவல் துறை வசம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தேர்தல்: அரபு கட்சிகளை புறக்கணிக்க சியோனிச கட்சிகளுக்கு நெதன்யாகு அழைப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗