பட மூலாதாரம், AFP via Getty Images இஸ்ரேலின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசன்கோட்டும், அரபு கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். தேர்தலில் அவரது கூட்டணி பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தலையீடு நடைபெற்றதாக நெதன்யாகு குற்றம் சாட்டியிருந்தார். நெதன்யாகுவின் லிகுட் கட்சி, இஸ்ரேலின் அரபு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தேர்தலைத் "திருடிவிட்டதாக" குற்றஞ்சாட்டியது. இந்தக் கட்சிகள் கத்தார் மற்றும் துருக்கி நாடுகளிடமிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றனவா என்பது குறித்து அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெத் விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை "அபத்தமானவை மற்றும் ஆபத்தானவை" என்று குறிப்பிட்ட கத்தார் வெளியுறவு அமைச்சகம், தோஹாவுக்கு எதிராக இஸ்ரேலியத் தலைவர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, அவற்றை நிராகரித்தது. இறுதி தேர்தல் முடிவுகளின்படி, நெதன்யாகுவின் கூட்டணிக்கும் யூத எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அரபு வாக்காளர்களின் வாக்குப்பதிவு அதிகரித்ததைத் தொடர்ந்து, எதிர்பார்ப்புகளை மீறி இரண்டு அரபு கட்சிகளான ஜாயின்ட் லிஸ்ட் (Joint List) மற்றும் ராம் (Ra'am) ஆகியவை 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் (நெசெட்) இதுவரை இல்லாத வகையில் 19 இடங்களைக் கைப்பற்றின. இதனால், ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் இந்தக் கட்சிகள் உள்ளன. End of அதிகம் படிக்கப்பட்டது நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், அவரது போட்டியாளரான காடி ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களைப் பெற்றது. வியாழக்கிழமையன்று, அரபு கட்சிகளுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்குப் "பணம் கொடுக்கப்பட்டதாக" லிகுட் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கு முன்னதாக, வெளிநாட்டுத் தலையீடு தொடர்பாக "தீவிரமான சந்தேகங்கள்" எழுந்துள்ளதால், அவை குறித்து விசாரணை நடத்துமாறு மத்திய தேர்தல் குழுவின் தலைவர் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெத்திடம் கேட்டுக்கொண்டிருந்தார். இரண்டு அரபு கட்சிகளும் இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக நிராகரித்தன. இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று ஜாயின்ட் லிஸ்ட் தெரிவித்தது. இந்தச் சர்ச்சை, அரபு கட்சிகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் முயற்சி என்று நெதன்யாகுவின் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால், ஐசன்கோட் இந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது அரசியல் ரீதியாகச் சாத்தியமற்றதாக மாறக்கூடும். தற்போது, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அவரது கூட்டணிக்கு இருக்கும் ஒரே வழி இதுதான். பட மூலாதாரம், EPA பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அரபு சமூகங்களில் வாக்குப்பதிவை அதிகரிப்பதற்காக கத்தார் நிதியுதவி அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மத்திய தேர்தல் குழுவிடம் முன்வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை கத்தார் வெளியுறவு அமைச்சகம் "முற்றிலும்" நிராகரித்தது. நெதன்யாகுவும் அவரது லிகுட் கட்சியும் இந்தக் குற்றச்சாட்டுகளை "அரசியல் பூகம்பம்" என்றும் "ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்" என்றும் குறிப்பிட்டனர். தனது வலதுசாரி அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றுவதே இதன் நோக்கம் என்று அவர் கூறினார். இருப்பினும், சட்டப்பூர்வமாக வாக்களித்த அனைவரையும் தங்களின் விசாரணை உள்ளடக்கவில்லை என்று ஷின் பெத் பின்னர் தெளிவுபடுத்தியது. இதற்கிடையில், மத்திய தேர்தல் குழுவின் பொறுப்பு தலைமை இயக்குநரான டீன் லிவ்னே, தேர்தலின் நேர்மையை முறையாக மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு 'எந்த அடிப்படையும் இல்லை' என்று தெரிவித்தார். "என்ன நடந்தது அல்லது உண்மையில் ஏதேனும் நடந்ததா என்பதை இப்போது தீர்மானிப்பது மிகவும் முன்கூட்டியதாக இருக்கும்" என்று விசாரணை குறித்த விளக்கத்தைப் பெற்ற பிறகு ஐசன்கோட் கூறினார். தேர்தல் முடிவுகளின் நம்பகத்தன்மையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையில் நெதன்யாகு "திட்டமிட்டும் ஒழுங்கமைக்கப்பட்டும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்" என்று அவர் குற்றம் சாட்டினார். ஜாயின்ட் லிஸ்ட் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் பலாத் (Balad) கட்சியின் தலைவர் சாமி அபு ஷெஹாதே இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தார். "தோல்வியடைந்த தரப்பு, இனவாத அடிப்படையிலான தாக்குதலை குறித்த தவறான கதையைப் புனைந்து, தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கப் பாதுகாப்பு அமைப்புகள் பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கோருகிறது" என்று அவர் கூறினார். பட மூலாதாரம், AFP via Getty Images அரபு வாக்காளர்கள் மற்றும் கட்சிகள் மீதான நெதன்யாகுவின் தாக்குதல்கள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேர்தல் நாளன்று, சமூக ஊடகங்களில் அவர் பல பதிவுகளை வெளியிட்டார். அரபு வாக்காளர்களின் அதிகப்படியான வருகை இஸ்ரேலின் வலதுசாரிகளுக்கு ஒரு "அவசரநிலை" என்றும், "வாழ்வா, சாவா என்ற போராட்டம்" என்றும் அவர் குறிப்பிட்டார். வலதுசாரி வாக்காளர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக, வாக்குச்சாவடிகளில் அரபு வாக்காளர்கள் இருப்பதைப் போன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்களையும் அவர் பகிர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது தனக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பது தெளிவானதும், அரபு கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். நெதன்யாகு எக்ஸ் தளத்தில் லிக்குட் கட்சியின் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்து, பின்வருமாறு கூறினார், "இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகையில் அரபு மக்கள் சுமார் ஐந்தில் ஒரு பங்காக உள்ளனர். அவர்களில் பலர் தங்களை இஸ்ரேலின் பாலத்தீனக் குடிமக்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாம் தரக் குடிமக்களாகத் தங்களை நடத்துவதாக அவர்கள் நம்பிய ஓர் அமைப்புக்கு வாக்களிப்பது, அதற்கு அங்கீகாரம் அளிப்பதாகிவிடும் என்று கூறி, அவர்களில் பலர் பல ஆண்டுகளாக இஸ்ரேல் தேர்தல்களைப் புறக்கணித்து வந்தனர். ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் அவர்கள் அதிக அளவில் பங்கேற்றதற்கு, நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலின் வரலாற்றிலேயே மிகவும் வலதுசாரித் தன்மை கொண்ட கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற விருப்பமும் ஒரு காரணமாக இருந்தது." என குறிப்பிட்டிருந்தார். இறுதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதற்கு மூன்று சாத்தியமான வழிகள் மட்டுமே தென்படுகின்றன. இருப்பினும், கடந்த சில நாட்களாக இரு தரப்புக்கும் இடையே ஓர் உடன்பாடு எட்டப்படலாம் என்ற ஊகங்கள் நிலவி வருகின்றன. ஹீப்ரு பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கணிப்பில், எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியின் வாக்காளர்களிடையேயும் மிகவும் பிரபலமான தேர்வாக ஒரு வாய்ப்பு இருந்தது. அதாவது, ராம் கட்சியின் ஆதரவுடன் ஐசன்கோட் சிறுபான்மை அரசை அமைப்பதும், ஜாயின்ட் லிஸ்ட் கட்சி வெளியிலிருந்து அந்த அரசுக்கு ஆதரவளிப்பதும்தான் அந்தத் தேர்வாகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
இஸ்ரேல் தேர்தல்: கத்தார் - துருக்கி நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டு; நெதன்யாகுவின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சிகள் பதில்