இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் நெதன்யாகு பின்னடைவு பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் நெதன்யாகு பின்னடைவு பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images இஸ்ரேல் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி மாலை நிலவரப்படி, உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, நெதன்யாகுவுக்கு எதிரான கட்சிகள் மொத்தம் 67 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. 'சேனல் 12' வெளியிட்ட தகவலின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இஸ்ரேலிய நாடாளுமன்றமான 'நெசெட்'டில் பெரும்பான்மை பெறுவதற்கு 61 இடங்கள் தேவை. நெதன்யாகுவின் கூட்டணியால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. இடதுசாரி நாளிதழான 'ஹாரெட்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, நெதன்யாகுவின் கூட்டணி பெற்ற 53 இடங்களில், அவரது 'லிக்குட்' கட்சி 27 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலம், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் லிக்குட் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணி 64 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய தேர்தலில் அவரது கூட்டணியின் பலம் கணிசமாகக் குறைந்துவிட்டது. நெதன்யாகுவின் முக்கியப் போட்டியாளரான காடி ஐசென்கோட்டின் 'யாஷர்' கட்சி 21 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து, அவர் 48 இடங்களை கொண்ட அணியை உருவாக்க வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகள், அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் இணைந்து செயல்பட முன்வந்தால், ஆட்சி அமைப்பதற்கான அவர்களின் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும். அரபு சமூகத்தைச் சேர்ந்த கட்சிகள் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நெதன்யாகுவின் தரப்பினர் தேர்தலுக்குப் பிறகு குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்ரேலின் தேர்தல் நடைமுறையில் கத்தார் தலையிட்டதாகவும் அவரது லிக்குட் கட்சி குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை "அபத்தமானவை மற்றும் ஆபத்தானவை" என்று கூறிய கத்தார், அவற்றைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் அரபு நாடுகள் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. அரபு நாடுகளுடனான நெதன்யாகுவின் உறவு ஏற்கெனவே வலுவற்ற நிலையில் உள்ளது. காஸா போர் மற்றும் இரானுடனான பதற்றம் உள்ளிட்ட காரணங்களால், அவர் சர்வதேச அளவில் மேலும் தனிமைப்படுத்தப்பட்டவராகத் தோன்றுகிறார். End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு கத்தார் ஊடகக் குழுமமான 'அல் ஜசீரா'வின் ஆங்கில இணையதளத்தில், கத்தார் மீது பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிக்குட்' கட்சி சுமத்தியுள்ள தேர்தல் தலையீட்டுக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியில், கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி வெளியிட்ட அறிக்கை இடம்பெற்றுள்ளது. அவர் கூறுகையில், "சில இஸ்ரேலியத் தலைவர்களும், அவர்களுடன் தொடர்புடைய ஊடகத் தரப்பினரும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த வாரம் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, கத்தாரை இஸ்ரேலின் உள்நாட்டுப் அரசியல் மோதலுக்குள் இழுக்கும் நோக்கில், அவர்கள் மீண்டும் ஒரு தவறான தகவல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்" என்றார். மேலும், "சில இஸ்ரேலியத் தலைவர்கள், பெஞ்சமின் நெதன்யாகுவை கத்தார் 'விலைக்கு வாங்கியதாக' குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல், அரசியல் இடதுசாரிகளையும் நாங்கள் 'விலைக்கு வாங்கியதாக'க் கூறுகின்றனர். இப்போது, இந்தப் புதிய பரப்புரையில், அரபு வாக்காளர்களையும் நாங்கள் 'விலைக்கு வாங்குவதாக'க் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களின் கூற்றுகளை நம்பினால், ஒட்டுமொத்த இஸ்ரேலும் கத்தாரின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும்" என்று அல்-அன்சாரி குறிப்பிட்டார். இஸ்ரேல் - பாலத்தீன மோதலில் கத்தார் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைவதைத் தடுக்கும் நோக்கில், இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகளிலும் கத்தார் ஈடுபட்டு வருகிறது. இந்தப் புதிய குற்றச்சாட்டுகள், "மத்தியஸ்தராகத் தான் ஆற்றிவரும் முக்கியப் பணி, ராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகள், பாலத்தீன மக்களுக்கு வழங்கிவரும் ஆதரவு, அத்துடன் நீதிக்கான, விரிவான அமைதி மற்றும் பிராந்திய நிலைத்தன்மைக்கான தனது அர்ப்பணிப்பு" ஆகியவற்றிலிருந்து கத்தாரைப் பின்வாங்கச் செய்ய முடியாது என்றும் அல்-அன்சாரி வலியுறுத்தினார். அல் ஜசீரா இணையதளத்தில் வெளியான மற்றொரு கட்டுரையில், தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இஸ்ரேலியத் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு நெதன்யாகு மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டார். ஆனால், வாக்குப்பதிவு நாளன்று, தனது ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அரபுக் கட்சிகள் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டினார். பட மூலாதாரம், Getty Images இஸ்ரேலில் புதிய அரசாங்கம் அமைக்கும் நடவடிக்கைகளைப் பாலத்தீன அதிகார அமைப்பும், மேற்குக் கரையில் வசிக்கும் பாலத்தீனர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக, சர்வதேச அரபு நாளிதழான 'அஷர்க் அல்-அவ்ஸத்' செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில், "பாலத்தீனர்கள் இஸ்ரேல் தேர்தலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இறுதி முடிவுகளுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இஸ்ரேலின் அடுத்த பிரதமரும், அவருடன் இணைந்து செயல்படவுள்ள அமைச்சர்களும், எதிர்வரும் ஆண்டுகளில் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை எவ்வாறு அமையப்போகிறது என்பதைப் பெருமளவில் தீர்மானிக்க உள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாலத்தீன அதிகார சபை இஸ்ரேலின் தேர்தல் நடவடிக்கைகளை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது. காடி ஐசென்கோட் வெற்றி பெற வேண்டும் என்றும், பெஞ்சமின் நெதன்யாகு தோல்வியடைய வேண்டும் என்றும் அது விரும்புகிறது. தற்போதைய அரசாங்கத்துக்குப் பதிலாக வேறு எந்தக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், இஸ்ரேலுடனான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பாலத்தீன அதிகார சபை கருதுகிறது. இதுகுறித்து அந்த நாளிதழ், "பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், முடக்கி வைக்கப்பட்டுள்ள பாலத்தீனர்களுக்கான நிதியை விடுவிக்கவும், வழக்கமான நிதிப் பரிமாற்றங்களை மீண்டும் தொடங்கவும் புதிய அரசாங்கம் முன்வந்தால், தற்போதைய அரசாங்கத்தைவிட அது ஓரளவுக்குச் சிறந்ததாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Getty Images செளதி அரேபியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'அல் அரபியா நியூஸ்', பாலத்தீன அதிகார சபையின் தலைவரான மஹ்மூத் அப்பாஸின் கருத்துகளை வெளியிட்டுள்ளது. அந்த ஊடகத்தின் செய்தியின்படி, "இஸ்ரேலும் பாலத்தீனமும் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறோம்" என்று அவர் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், இஸ்ரேலில் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் பல வாரங்களுக்கு நீடிக்கக்கூடும். பல நாடுகள் பாலத்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இருப்பினும், இஸ்ரேல் - பாலத்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகளாக முடங்கியிருக்கின்றன. பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூதக் குடியேற்றங்கள் விரிவடைந்துள்ளன. அதேவேளையில், பாலத்தீனர்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலத்தீன அதிகார சபை, மேற்குக் கரையின் சில பகுதிகளில் மட்டுமே சுயநிர்வாக அதிகாரத்தைக் கொண்டுள்ளது. நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள சில அமைச்சர்கள், மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர். மேற்குக் கரை மற்றும் போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியிலிருந்து பாலத்தீனர்கள் வெளியேறுவதை ஊக்குவிக்கும் கொள்கைகளுக்கும் அவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் காஸா மீது தீவிர ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியது. இதன் விளைவாக, காஸாவின் பெரும் பகுதிகள் உருக்குலைந்தன. 1967ஆம் ஆண்டு முதல் மேற்கு கரை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அங்கு சுமார் 30 லட்சம் பாலத்தீனர்கள் வசிக்கும் நிலையில், 5 லட்சத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் யூதக் குடியேற்றங்களில் வாழ்கின்றனர். சர்வதேச சட்டத்தின்படி, இந்தக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவையாகக் கருதப்படுகின்றன. பட மூலாதாரம், Getty Images செளதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான அரப் நியூஸ், இஸ்ரேலியத் தேர்தலைத் தனது முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழுக்காக கேப்ரியல் மால்விசி எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலில் வாழும் பாலத்தீனக் குடிமக்களிடையே வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் காடி ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையிலான அரசியல் கணக்குகளைச் சிக்கலாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இரு தரப்பினருமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதில் சவாலை எதிர்கொள்கின்றனர். அந்தக் கட்டுரையில், "தற்போதைய அரசியல் தேக்கநிலை நெதன்யாகுவுக்குச் சாதகமாக அமையக்கூடும். தெளிவான பெரும்பான்மை இல்லாத நிலையிலும், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அல்லது மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை, கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நீடிக்கும் காலத்தில் அவர் இடைக்கால பிரதமராகத் தொடர முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "தேர்தல் முடிவுகளைத் தனக்குச் சாதகமாக மாற்றும் நோக்கில் நெதன்யாகு 'சட்டவிரோதமான செல்வாக்கு செலுத்தும் பிரசாரத்தை' முன்னெடுத்திருப்பதாக ஐசென்கோட் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், இதற்காக அரபுக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முறையான ஒப்பந்தம் செய்துகொள்ள ஐசென்கோட் முன்வந்துவிட்டார் என்று அர்த்தமல்ல. ஆனால், நாடாளுமன்றத்தில் கட்சிகளுக்குக் கிடைத்துள்ள இடங்களின் எண்ணிக்கை, அத்தகைய ஒத்துழைப்பைப் பரிசீலிக்க வேண்டிய சூழலை அவருக்கு ஏற்படுத்தக்கூடும்" என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய பேச்சுவார்த்தைகள், 'ராம்' கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸுடன் தொடங்க வாய்ப்புள்ளது. அவரது கட்சி, முன்பு நஃப்தாலி பென்னட் தலைமையிலான வலதுசாரிக் கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்தக் கட்சி ஐசென்கோட்டின் கூட்டணியுடன் இணைந்துள்ளது என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மற்றொரு சாத்தியமும் உருவானது. 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' வெளியிட்ட செய்தியின்படி, தீவிர மதப்பற்றுள்ள 'யுனைடெட் டோரா ஜூடாயிசம்' கட்சி, கட்டாய ராணுவச் சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டால், ஐசென்கோட் தலைமையிலான அரசாங்கத்துக்கு கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணையாமலேயே வெளியில் இருந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 11 இடங்களைக் கைப்பற்றியுள்ள 'ஜாயிண்ட் லிஸ்ட்' கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஐசென்கோட்டுக்குச் சவாலாக இருக்கலாம். இதுகுறித்து அந்த நாளிதழ், "ஒத்துழைப்புக்கு ஐசென்கோட் நான்கு நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். முதலாவதாக, இஸ்ரேலை யூத மற்றும் ஜனநாயக நாடாக அங்கீகரிக்க வேண்டும். இரண்டாவதாக, இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள விழுமியங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, இஸ்ரேலியப் பாலத்தீனக் குடிமக்களுக்குக் கட்டாய ராணுவச் சேவை விதிக்கப்படுவதை ஆதரிக்க வேண்டும். நான்காவதாக, ஹமாஸ் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகக் கண்டிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலில் வாழும் பாலத்தீனக் குடிமக்களுக்கு முழுமையான குடிமை மற்றும் தேசிய சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று 'ஜாயிண்ட் லிஸ்ட்' வலியுறுத்தி வருகிறது. அவர்களுக்கான கூட்டு உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், காஸாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சி கோருகிறது. யூதக் குடியேற்றங்களின் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், 1967ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலத்தீன நாட்டை உருவாக்குவதற்கான அரசியல் வழிமுறையையும் அது வலியுறுத்துகிறது. இந்தச் சூழலில், நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் அமைய வாய்ப்புள்ளது. அதற்கு 'ஜாயிண்ட் லிஸ்ட்' கட்சி, அரசாங்கத்தில் நேரடியாகப் பங்கேற்காமல், நாடாளுமன்றத்தில் வெளியில் இருந்து ஆதரவளிக்க முன்வரக்கூடும். பட மூலாதாரம், Getty Images ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் ஆங்கில நாளிதழான தி நேஷனல், எந்தவொரு தரப்பாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியாவிட்டால், இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. 'பேச்சுவார்த்தைகள் தொடங்கின' என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், ஐசென்கோட் "அமைதியாகவும் உறுதியுடனும்" செயல்படப் போவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், ஆட்சி அமைப்பதற்கான திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. பல்வேறு கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், ஐசென்கோட் மத்திய-இடதுசாரி 'டெமோக்ரட்ஸ்' கட்சியின் தலைவர் யாயிர் கோலனைச் சந்தித்துப் பேசியதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் யாயிர் லாபிட் மற்றும் அரபுக் கட்சித் தலைவர் மன்சூர் அப்பாஸ் ஆகியோருடனும் கோலன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இதுகுறித்து கோலன் கூறுகையில், "இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டனர். வாக்காளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, மாற்றத்தையும் நிம்மதியையும் அளிக்கக்கூடிய ஓர் அரசாங்கத்தை அமைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்றார். வியாழக்கிழமையுடன் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்ட பிறகு, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ஆட்சி அமைப்பதற்கான கூட்டணியை உருவாக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாம். நெதன்யாகு அல்லது ஐசென்கோட் ஆகிய இருவரில் யாராலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களைத் திரட்ட முடியாவிட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம், Getty Images இறுதி முடிவுகள் வெளியானதும், அரசாங்கத்தை வெற்றிகரமாக அமைப்பதற்கான சிறந்த வாய்ப்பு இருப்பதாகத் தாம் நம்பும் கட்சித் தலைவரிடம், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஐசக் ஹெர்சாக் அரசாங்கத்தை அமைக்கும் பணியை ஒப்படைப்பார். இறுதி முடிவுகள் பின்வருமாறு (கட்சிவாரியாக): - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை