புதுடெல்லி: நவ. 1ம் தேதி நடைபெற உள்ள டெல்லி ராம் லீலா பேரணி, ஜனநாயகத்தைக் காக்கும் பேரணி என தெரிவித்துள்ள ராகுல் காந்தி இதில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “டெல்லி ராம்லீலா பேரணி ஜனநாயகத்தைக் காக்கவும், வாக்குத் திருட்டை தடுக்கவும், அரசியலமைப்பைக் காக்கவுமான பேரணி. இது எந்த ஒரு அரசியல் கட்சிக்குமான பேரணி அல்ல. இது இந்தியாவின் ஆன்மாவுக்கான பேரணி. நரேந்திர மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் மீது அதிருப்தியடைந்த அனைவரும் வாருங்கள்; ஜனநாயகத்தைக் காப்பாற்றி, அரசியலமைப்பை பாதுகாக்க விரும்புபவர்கள் அனைவரும் வாருங்கள். அதற்கான ஒரே போராட்டம்; தேசத்தின் போராட்டம் இது. காவல்துறையைப் பற்றியோ, தடியடியைப் பற்றியோ கவலைப்படாதீர்கள். தங்கள் தந்திரங்களைச் செயல்படுத்தும் துணிச்சல் பாஜகவுக்கு இருக்காது. எங்களோடு இணைந்து நடைபயணம் மேற்கொள்ளுங்கள். இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், இந்திய தேசத்தைக் காக்கவும் நாம் ஒன்றிணைந்து நடப்போம். எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அனைத்து மாணவர் அமைப்புகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் சரி, இந்தியா தாக்குதலுக்கு உள்ளாகிறது, நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறீர்கள், உங்கள் கருத்துக்களும் சிந்தனை முறைகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என்று நீங்கள் உணர்ந்தால் எங்களுடன் வந்து இணையுங்கள். இது ஒரு மிகச்சிறப்பான நடைபயணமாக அமையும். இது இந்த நாட்டின் ஆன்மாவைக் காப்பதற்கான நடைபயணம். உங்கள் அனைவரையும் அங்கே சந்திக்கும் ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
“ஜனநாயகத்தை காக்க ஒன்றிணைந்து நடப்போம்” - நவ.1 பேரணியில் இணைய ராகுல் காந்தி அழைப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗