குழந்தை வேட்டையாடிய ராட்சத கழுகுகள் மனித இனத்தின் மொழி, கலாசாரம் உருவாக வழிவகுத்தது எப்படி?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
குழந்தை வேட்டையாடிய ராட்சத கழுகுகள் மனித இனத்தின் மொழி, கலாசாரம் உருவாக வழிவகுத்தது எப்படி?

பட மூலாதாரம், BBC/ Emmanuel Lafont சிறுகோள் மோதலால் டைனோசர்கள் அழிந்தப் பிறகு, பல கோடி ஆண்டுகளாக ராட்சதப் பறவைகளே பூமியின் முதன்மை வேட்டையாடிகளாகத் திகழ்ந்தன. மனிதர்களும் அவற்றின் இரைகளாக இருந்தனர். சுமார் 28 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது மூதாதையர் இனத்தைச் சேர்ந்த மூன்று வயதுக் குழந்தை ஒன்று தென்னாப்பிரிக்காவின் சவானா புல்வெளிகளில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது. அந்தக் குழந்தை, 'ஆஸ்ட்ராலோபிதேகஸ் ஆஃப்ரிகானஸ்' என்ற ஆரம்பகால மனித இனத்தைச் சேர்ந்தது. தன்னை மேலிருந்து வேட்டையாடும் ஒரு உயிரினம் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அந்தக் குழந்தை அறிந்திருக்கவில்லை. திடீரென, ஒரு பிரமாண்டமான ராட்சதப் பறவை ஒன்று மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. அது அந்தக் குழந்தையைப் பிடித்துக் கொன்றது. எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெறும் சில விவரங்கள் வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். 'டாங் குழந்தை' என்று அழைக்கப்படும் அந்தத் தொன்மையான மனிதக் குழந்தையைக் கொன்றது எந்தப் பறவை என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அதன் கண் குழிகளுக்குக் கீழே காணப்படும் துளைகள், கழுகுகளின் நகங்களால் ஏற்படும் தடங்களுடன் ஒத்துப்போகின்றன. கழுகுகள் தங்கள் இரையை வேட்டையாடும்போது இத்தகைய தடங்கள் ஏற்படலாம். அவை, தாங்கள் பிடிக்கும் இரையின் சில பகுதிகளை மரங்களில் சேமித்துவைத்துவிட்டு, எஞ்சியவற்றைக் கூட்டுக்குக் கொண்டு செல்லும். கற்காலத்தில் வாழ்வது மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்க வேண்டும். அப்போது, பிரமாண்டமான விலங்குகள் பூமியில் ஆதிக்கம் செலுத்தின. மாமூத் யானைகள், மாஸ்டோடான்கள், ராட்சத ஸ்லாத்துகள், கோரைப் பற்களைக் கொண்ட வேட்டையாடிப் பூனைகள், குழந்தைகளை ட வேட்டையாடக்கூடிய மாபெரும் பறவைகள் எனப் பல ஆபத்தான உயிரினங்களுடன் தான் ஆதி மனிதர்கள் வாழ்ந்தனர். பறவை இனத்தைச் சாராத டைனோசர்களின் அழிவிற்கும் பெரும் பனியுகத்துக்கும் இடைப்பட்ட பல கோடி ஆண்டுகளில், இந்த ராட்சதப் பறவைகள் வானிலும் நிலத்திலும் வேட்டையாடி ஆதிக்கம் செலுத்தின. அவற்றின் இருப்பு, மனிதப் பரிணாம வளர்ச்சியின் போக்கையே நாம் உணராத வகையில் மாற்றியிருக்கக்கூடும். அந்தப் பறவைகள் அழிந்து பல காலத்திற்குப் பிறகும், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாசாரங்களில், குழந்தைகளைக் கடத்திச் செல்லும் பறவைகளைப் பற்றிய கதைகளாக இன்றும் நிலைத்திருக்கின்றன. End of அதிகம் படிக்கப்பட்டது அந்தப் பறவைகள் அழிந்து பல காலம் கடந்துவிட்டபோதிலும், குழந்தைகளைக் கடத்திச் செல்லும் மாபெரும் பறவைகள் பற்றிய தொன்மக் கதைகள் உலகின் பல்வேறு கலாசாரங்களில் இன்றும் இடம்பெற்றுள்ளன. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு டைனோசர்கள் அழிந்தபோது, வானம் முழுவதும் தூசியால் சூழப்பட்டது. பெரும்பாலான தாவரங்களும் அழிந்தன. இதனால், பல விலங்குகளுக்குப் போதிய உணவு கிடைக்காமல் போனது. அந்தச் சூழலில், விதைகளை உண்டு உயிர்வாழக்கூடிய சில பறவைகளுக்குத் தொடர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில், உயிர் பிழைத்த சில சிறிய, தரையில் வாழும் பறவைகள் காலப்போக்கில் மிகப் பெரிய உருவம் கொண்டவையாகப் பரிணமித்தன. ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த ட்ரோமோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்த சில பறவைகள் தாவரங்களை மட்டுமே உணவாகக் கொண்டிருந்தன. இவை 'அழிவின் அரக்க வாத்துகள்' என அழைக்கப்படுகின்றன. தோற்றத்தில் இன்றைய வாத்துகளைப் போல இருந்தாலும், உருவத்திலும் எடையிலும் மிகப் பிரமாண்டமானவையாக இருந்தன. அதேபோல், தென் கரோலினாவில் வாழ்ந்த பெலகோர்னிஸ் சாண்டர்சி போன்ற சில பறவைகள் வானில் பறந்து, கடலில் வேட்டையாடின. இதுவரை வாழ்ந்த பறக்கும் பறவைகளிலேயே மிகப் பெரிதாகக் கருதப்படும் இந்தப் பறவையின் இறக்கைகள் சுமார் 7 மீட்டர் நீளம் கொண்டிருந்தன. டைனோசர்கள் போன்ற மிகப்பெரிய நிலவாழ் வேட்டையாடிகள் அழிந்ததால் ஏற்பட்ட இடத்தைப் பிற உயிரினங்கள் நிரப்பின. பெரிய இரைகள் கிடைக்கும்போது, அவற்றை வேட்டையாடும் திறன் கொண்ட மிகப்பெரிய வேட்டையாடிகளும் காலப்போக்கில் பரிணமிக்கின்றன. இத்தகைய ராட்சதப் பறவைகளை நமது தொன்மையான மூதாதையர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தன. பட மூலாதாரம், BBC/ Emmanuel Lafont "பிரைமேட்டுகள் எனப்படும் குரங்கு இனங்கள் தோன்றிய காலத்திலிருந்தே வேட்டைப் பறவைகளும் இருந்து வருகின்றன. அவை எப்போதும் பிரைமேட்டுகளை வேட்டையாடி வந்துள்ளன. இதில் மனிதர்களும், நமது முன்னோர்களும் அடங்குவர்" என்கிறார் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரைமேட் ஆய்வாளர் ஸ்காட் மெக்ரா. நமது முன்னோர்களை வேட்டைப் பறவைகள் எவ்வாறு வேட்டையாடின என்பதற்கான தடயங்களை இன்றும் காண முடிகிறது. ஐவரி கோஸ்ட்டில் உள்ள டாய் காட்டில், வேட்டைப் பறவைகளால் கொல்லப்பட்ட 600-க்கும் மேற்பட்ட குரங்கு இன விலங்குகளின் எச்சங்களை மெக்ரா ஆய்வு செய்தார். அவற்றில் ஆப்பிரிக்க கிரீடக் கழுகுகளால் கொல்லப்பட்டவையும் அடங்கும். இந்த எச்சங்களில் காணப்பட்ட நகக் கீறல்கள், 'டாவ்ங் குழந்தை'யின் தொல்லுயிர் எச்சத்தில் காணப்பட்ட கீறல்களைப் போலவே இருந்தன என்பதை மெக்ரா கண்டறிந்தார். பல குரங்குகளின் மண்டை ஓடுகளில், கண் குழியின் அடிப்பகுதியில் சேதங்கள் காணப்பட்டன. இதுபற்றி மெக்ரா கூறுகையில், "கழுகுகள் தங்கள் அலகால் கண்களைக் கொத்தியிருக்கலாம் அல்லது நகங்களால் அவற்றைப் பிடுங்கியிருக்கலாம்" என்கிறார். "எங்கள் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஒருவர், தொல்லுயிர் எச்சங்கள் பாதுகாக்கப்படும் இடத்துக்குச் சென்று 'டாவ்ங் குழந்தை'யின் மண்டை ஓட்டை ஆய்வு செய்தார். அதில் காணப்பட்ட சேதங்களும், நாங்கள் ஆய்வு செய்த நவீன காலக் குரங்குகளின் எச்சங்களில் காணப்பட்ட சேதங்களும் ஒரே மாதிரியாக இருந்தன" என்கிறார் அவர். வேட்டைப் பறவைகள் நமது மனித முன்னோர்களையும் தொடர்ந்து வேட்டையாடி வந்திருக்கலாம் என்று மெக்ரா கருதுகிறார். மனிதர்களையும் உள்ளடக்கிய பிரைமேட் இனங்களின் பரிணாம வளர்ச்சியிலும் இந்த வேட்டையாடுதல் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம். அவர் மேலும் கூறுகையில், "பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட மனிதத் தொல்லுயிர் எச்சங்களை நாம் இப்போது மீண்டும் உன்னிப்பாக ஆய்வு செய்தால், வேட்டைப் பறவைகள் தாக்கியதற்கான கூடுதல் தடயங்களைக் கண்டறிய முடியும். டாய் காட்டில் நாம் காண்பது ஒரு சிறிய சான்று மட்டுமே என்றால், இதுபோன்ற தாக்குதல்கள் பொதுவானவையாக இருந்திருக்கலாம்" என்கிறார். ஆரம்பகால மனிதர்கள் வேட்டையாடும் விலங்குகளுக்கு இரையாக இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் பிரிட்டனின் பிரைட்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளரும் பயன்பாட்டு அறிவியல் துறைத் தலைவருமான ஜேம்ஸ் கோல். "கழுகால் வேட்டையாடப்பட்ட 'ஆஸ்ட்ரலோபிதிகஸ் ஆப்பிரிக்கானஸ்' இனத்தைச் சேர்ந்த குழந்தையின் தொல்லுயிர் எச்சம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதுபோன்ற ஆரம்பகால மனித இன முன்னோர்கள் வேட்டையாடப்பட்டதற்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன" என்கிறார் அவர். நமது முன்னோர்கள் பல வகையான வேட்டையாடும் விலங்குகளுக்கு இரையானார்கள் என்றும் கோல் கூறுகிறார். "நிச்சயமாக, மனிதர்களும் வேட்டையாடப்பட்டனர்" என்கிறார் அவர். பறவைகள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள், ராட்சத முதலைகள் எனப் பல்வேறு வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிப் பிழைக்க வேண்டியிருந்தது. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை, நமது முன்னோர்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம். குறிப்பாக, ராட்சதப் பறவைகளுக்கு இரையாகும் அபாயம், நமது உடல் அமைப்பிலும் சிந்திக்கும் திறனிலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம். உதாரணமாக, இரண்டு கால்களால் நிமிர்ந்து நடக்கும் திறன், அருகில் வரும் வேட்டையாடும் விலங்குகளை முன்கூட்டியே கண்டறிய உதவியிருக்கலாம். அதேபோல், ஒன்றிணைந்து செயல்படுவது, பிறருக்கு உதவுவது, ஒருவரையொருவர் சார்ந்திருப்பது, ஆபத்திலிருந்து மற்றவர்களைப் பாதுகாப்பது போன்ற பண்புகளும் உயிர் பிழைக்க உதவியிருக்கலாம். இதில், குழுவாக வாழ்வதும் செயல்படுவதும் மிகவும் முக்கியமானதாக இருந்ததாகக் கூறுகிறார் கோல். "ஒன்றிணைந்து செயல்பட்டால் பாதுகாப்பு கிடைக்கும்" என்கிறார் அவர். பட மூலாதாரம், Natural History Museum of Los Angeles County 1981 வேட்டையாடும் பறவைகளிடமிருந்து தப்பிப்பதைப் பொறுத்தவரை, சமூகக் குழு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அவ்வளவு நல்லது என்று மெக்ரா கூறுகிறார். தங்கள் இரையைத் தீவிரமாகத் துரத்தும் சிங்கங்கள் அல்லது ஓநாய்கள் போன்ற வேட்டையாடும் விலங்குகளைப் போலல்லாமல், கொன்றுண்ணிப் பறவைகள் பெரும்பாலும் பதுங்கியிருந்து தாக்கும் வேட்டையாடிகளாகும். அவை மிகவும் மறைவாகச் செயல்படுபவை, கிரீடக் கழுகுகளைப் பொறுத்தவரை, சரியான தருணம் வரும் வரை மரங்களில் மறைந்திருக்கும். இது, குறிப்பாக வேட்டையாடும் பறவைகளிடமிருந்து தப்பிக்கும் தேவையால் மனிதர்களின் சமூகப் போக்கு தூண்டப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இதன் மூலம், திடீர் தாக்குதலுக்காகப் பலரும் கண்காணிக்க முடியும் – இது "பலர் கவனித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவு" என்று அழைக்கப்படுகிறது. பெரிய அளவிலான குழு, மொழியின் தோற்றத்திற்கும் பங்களித்திருக்கலாம் என்று கோல் மேலும் கூறுகிறார். "ஒரு பெரிய குழுவில், நீங்கள் பணிகளைப் பிரிக்கத் தொடங்குகிறீர்கள். சிலர் ஒரு வேலையைச் செய்யும்போது மற்றவர்கள் வேறு ஏதாவது செய்தால், அதற்கு ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. ஒருமுறை ஒரு குழு அவ்வாறு சிதறத் தொடங்கினால், ஒருங்கிணைப்பு என்பது பார்வையை மட்டும் சார்ந்திருக்க முடியாது." கை அசைவுகள் போன்ற எளிய தகவல்தொடர்பு செயல்பட, மக்கள் ஒருவரையொருவர் பார்க்க முடிய வேண்டும் என்கிறார் கோல். ஆனால், பார்வைப் புலத்திற்கு அப்பால் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும் போது – உதாரணமாக, நெருங்கி வரும் ஒரு வேட்டையாடும் விலங்கைப் பற்றி எச்சரிக்க – "அங்குதான் மொழி உண்மையில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கத் தொடங்குகிறது". மேலிருந்து பாய்ந்து வரும் வேட்டைப் பறவைகளிடம் இருந்து தப்பிக்க வேண்டிய தேவை, மொழியின் பரிணாம வளர்ச்சிக்கும் வழிவகுத்திருக்கலாம் என்கிறார் மெக்ரா. பெரும்பாலான மனித இனங்கள், பல்வேறு வேட்டையாடும் விலங்குகள் வரும்போது ஒரே மாதிரியான எச்சரிக்கை ஒலிகளை எழுப்புகின்றன. உதாரணமாக, சிங்கம் வந்தாலும் சிறுத்தை வந்தாலும் ஒரே வகையான எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றன. ஆனால், கொன்றுண்ணிப் பறவைகள் வரும்போது அவை தனித்துவமான எச்சரிக்கை ஒலிகளை எழுப்புகின்றன. இவ்வாறு, ஆபத்தின் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு ஒலிகள் மூலம் மற்றவர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் இந்தப் பழக்கம், மனித மொழி உருவாவதற்கான தொடக்கமாக இருந்திருக்கலாம் என்று மெக்ரா கூறுகிறார். மாபெரும் வேட்டையாடும் பறவைகளுக்கும் நமது மனித மூதாதையர்களுக்கும் இடையிலான மிகப்பெரிய சந்திப்பு அமெரிக்காவில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆதி அமெரிக்கர்கள், டெரடார்ன் எனப்படும் ராட்சத மாமிச உண்ணிப் பறவைகளைச் சந்தித்திருக்கலாம். காண்டோர் பறவைகளைப் போன்ற தோற்றம் கொண்ட இவை, தரையிலிருந்து வெகுஉயரத்தில் பறக்கக்கூடியவை. சுமார் 6 மீட்டர் இறக்கை விரிவைக் கொண்ட இந்தப் பறவைகள், இறந்த விலங்குகளைத் தின்னுவதுடன், உயிருள்ள விலங்குகளையும் வேட்டையாடின. சில நேரங்களில் தங்கள் இரையை முழுவதுமாக விழுங்கும் அளவுக்கு இவை பெரியவை. "இந்தப் பறவைகள் மிகவும் பிரமாண்டமானவை. இறக்கைகளை விரித்து, மேலெழும் காற்றைப் பயன்படுத்தி இவை எளிதாக வானில் மிதந்து பறக்கக்கூடியவை" என்கிறார் லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பறவை உடற்கூறியல் சேகரிப்புப் பிரிவின் மூத்த காப்பாளர் ஜோன் கூப்பர். டெராடர்ன்கள் சுமார் 2.5 கோடி ஆண்டுகளாக வானில் ஆதிக்கம் செலுத்தின. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் அவை அழிந்துபோயின. அதாவது, அமெரிக்கக் கண்டங்களுக்கு முதல் மனிதர்கள் வந்த பிறகும் அவை வாழ்ந்தன. அமெரிக்கப் பழங்குடியினரின் தொன்மங்களில் இடம்பெறும் 'தண்டர்பேர்ட்' (Thunderbird - இடி பறவை) பற்றிய கதைகள் உருவாக டெராடர்ன்களே காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் கூப்பர். பழங்குடியினரின் தொன்மவியலில், தண்டர்பேர்ட் என்பது மிகப் பெரிய இறக்கைகளைக் கொண்ட பறவை. இடி, மின்னல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. 'அயோலோர்னிஸ் இன்க்ரெடிபிலிஸ்' அதாவது 'நம்பமுடியாத டெராடர்ன்', தெற்கு கலிபோர்னியா மற்றும் நெவாடா பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் இறக்கை விரிந்த நிலையில் 5.5 மீட்டர் வரை இருந்தது. இன்னும் வடக்கே, ஒரேகான் பகுதியில் வாழ்ந்த 'டெராடர்னிஸ் வுட்பர்னென்சிஸ்' இனத்திற்கு 4 மீட்டர் இறக்கை இருந்தது. வானத்தின் இந்த ராட்சத உயிரினம் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது. இதன் எச்சங்கள் மேமூத், மாஸ்டோடான், தரைவாழ் ஸ்லாத் போன்ற விலங்குகளின் எச்சங்களுடன் சேர்த்து, ஆரம்பகால மனிதர்களின் எச்சங்களுக்கு அருகிலும் கண்டெடுக்கப்பட்டன. உலகின் மறுபக்கத்தில், நியூசிலாந்தின் மாவோரி இனத்தவர் மத்தியில் 'தே ஹோக்கியோய்' என்ற ஒரு ராட்சத கழுகு குறித்த தொன்மம் உள்ளது. இது குழந்தைகளைக் கடத்திச் செல்லும் பறவையாகக் கூறப்படுகிறது. நிஜத்தில் வாழ்ந்து அழிந்துபோன, மிகப்பெரிய 'ஹாஸ்ட் கழுகு' இனத்தையே இது குறிப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஹாஸ்ட் கழுகு என்பது "உண்மையில் ஒரு பறக்கும் புலி" போன்றது என்று கூப்பர் விவரிக்கிறார். இது, தற்போதுள்ள மிகப்பெரிய கழுகு இனங்களில் ஒன்றான 'ஹார்பி கழுகை' விட சுமார் இரு மடங்கு எடை கொண்டது. ஹாஸ்ட் கழுகு, 'மோவா' எனப்படும், தரையில் வாழும் மற்றொரு ராட்சதப் பறவையை வேட்டையாடியது. இந்த ராட்சத கழுகு வானிலிருந்து பாய்ந்து வரும்போது, ​​அதன் எடை அதற்கு மிகுந்த வேகத்தை அளித்தது. அது தனது 10 சென்டிமீட்டர் நீளமுள்ள நகங்களால் இரையின் முதுகில் தாக்கி, அதை நிலைகுலையச் செய்து தரையில் வீழ்த்தியது. "சில மோவா பறவைகளின் இடுப்பு எலும்புகளில் இத்தகைய பிரமாண்டமான நகங்களின் தழும்புகளைக் காண முடிகிறது" என்று கூறும் கூப்பர், ஹாஸ்ட் கழுகுகள் மனிதர்களையும் தாக்கும் திறன் கொண்டிருந்தன என்று குறிப்பிடுகிறார். "குழந்தைகளுக்கு நிச்சயமாக ஆபத்து இருந்திருக்கும். இது வியக்கத்தக்க அதே சமயம் மிகுந்த அச்சமூட்டும் ஒரு நிகழ்வாக இருந்திருக்க வேண்டும்." மாவோரி மற்றும் வட அமெரிக்க கலாசாரங்களிலும் , கிரேக்கப் புராணங்களிலும் கூட, குழந்தைகளைக் கடத்திச் செல்லும் பறவைகள் பற்றிய வலுவான தொன்மக்கதைகள் நிலைத்திருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் – அங்கு நாரைகள் குழந்தைகளைக் கொண்டு வந்து சேர்க்கவில்லை , மாறாக அவற்றைத் திருடிச் சென்றன. "இந்த பறவைகள் மேலே பறந்து செல்லும்போது ஒரு நிழலை ஏற்படுத்துகின்றன – அவை உலகம் முழுவதிலும் கலாசார ரீதியாக ஒரு நீண்ட நிழலைப் பதிக்கின்றன" என்று கூப்பர் கூறுகிறார். சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக, ராட்சத வேட்டைப் பறவைகள் வானில் ஆதிக்கம் செலுத்தின. பின்னர், சுமார் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி 'பிளீஸ்டோசீன்' எனப்படும் பெரும் பனிக்காலத்துக்குள் நுழைந்தது. இந்தக் காலகட்டத்தில் கடுமையான காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய மாற்றங்கள் மனிதர்களின் பரிணாம வளர்ச்சிக்கும் உந்துதலாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிளீஸ்டோசீன் காலத்தின் இறுதியில், அதாவது சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பாலான ராட்சதப் பாலூட்டிகள் அழிந்துவிட்டன. மிகப் பெரிய வேட்டைப் பறவைகளும் மறைந்துபோயின. இந்த உயிரினங்களின் அழிவுக்குக் காலநிலை மாற்றம் காரணமா அல்லது மனிதர்கள் அவற்றை வேட்டையாடியதுதான் காரணமா என்பதில் நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இருப்பினும், மனிதர்கள் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியதும், அவர்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய மாற்றங்களும், ராட்சத உயிரினங்களில் 95 சதவீதம் வரை அழிந்துபோனதுடன் தொடர்புடையவை. "நாம் அவற்றை வேட்டையாடி உணவாக உட்கொண்டிருக்கலாம் அல்லது அவற்றுடன் உணவுக்காகப் போட்டியிட்டிருக்கலாம்" என்கிறார் கூப்பர். மனிதர்களுக்கும் வேட்டைப் பறவைகளுக்கும் இடையே இன்றும் ஒருவிதப் பதற்றம் நிலவுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் கருதுகிறார். "நாம் அவற்றைக் கண்டு வியக்கிறோம்; அவற்றைப் போற்றுகிறோம். ஆனால், அவற்றுடன் இணைந்து வாழ்வதை முழுமையாக விரும்புவதில்லை" என்கிறார் அவர். பிளீஸ்டோசீன் காலம் முடிவுக்கு வந்தபோது, காலநிலை மெல்ல சீரடையத் தொடங்கியது. பனிப்பாறைகள் உருகிப் பின்வாங்கின. மனிதர்கள் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர். இவை அனைத்தும் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாக அமைந்தன. அது மனிதர்களின் ஆதிக்கம் தொடங்கிய காலம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை