நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் தொடர்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியது குறித்து... தனியார் கூட்டுறவு நிதி நிறுவனத்தில் மோசடி நடத்தியதாக கைது செய்யப்பட்ட பிரேம் குமாருக்கும் முதல்வர் விஜய்க்கும் என்ன தொடர்பு என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலினின் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "ரூ. 5 ஆயிரம் கோடி மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த பிஎல்எம் பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதல்வருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் முதல்வரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், தவெகவின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதல்வருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும்போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த விவகாரமான தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதல்வரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவது, ஷோஃபா அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று தவெகவின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும். கைதான பிரேம்குமாருக்கும், தவெக தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர், பிரேம்குமார். இவர் முதியோர், ஓய்வூதியர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, 2006-ல் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் (பிஎல்எம்) ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி என்ற நிறுவனத்தை சென்னையில் நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாயும் திரட்டினர். இருப்பினும், முதிர்வுக் காலம் முடிவடைந்த பின்னரும் மக்களுக்கு உரிய பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக பிஎல்எம் நிறுவனத்தின் மீது புகார்கள் வந்தன. இதனிடையே, மக்களின் கோடிக்கணக்கான பணத்தை கூட்டுறவு சங்க விதிகளுக்குப் புறம்பாக, தன்னுடைய சொந்த வங்கிக் கணக்குகளிலும் குடும்பத்தினர் பெயர்களிலும் மற்றும் பிற தனியார் தொழில் நிறுவனங்களிலும் முறைகேடாக பயன்படுத்தியதாக பிரேம்குமார் மீது புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டின. இந்த நிதி மோசடி வழக்கு தொடர்பாக, சென்னையில் பிரேம்குமாரை கேரள மாநில குற்றப்பிரிவு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதனிடையே, பிரேம் குமாரை கைது செய்த நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗