பட மூலாதாரம், Valdez Family இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 26 வயதான ஐசக் வால்டெஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்தில் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் குலுங்கியதுடன், தலை தரையில் மோதியது. இதையடுத்து அவர் சுயநினைவை இழந்தார். பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது தலை பலமாகத் தரையில் மோதியதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், ஐசக்கிற்குச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அவர் 'யெகோவாவின் சாட்சிகள்' (Jehovah's Witness) என்ற கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். மத நம்பிக்கை காரணமாக ரத்தம் செலுத்தும் எந்தவிதமான சிகிச்சையையும் ஏற்கமாட்டேன் என்பதைக் குறிக்கும் 'ரத்தம் வேண்டாம்' என்ற அட்டையை அவர் வைத்திருந்தார். இதன் காரணமாக, ஐசக்கின் மூளையில் தேங்கியிருந்த திரவத்தை வெளியேற்றுவதற்கான மருத்துவச் செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வாக்சஹாச்சி பகுதியைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கு, ஐசக் மீண்டும் சுயநினைவுக்குத் திரும்பியதும் பேசத் தொடங்கியதும் நம்பிக்கையை ஏற்படுத்தின. ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்கக் கூடாது என்ற தனது மத நம்பிக்கையில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக ஐசக்கும் தெரிவித்தார். ஆனால், அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஐசக் மீண்டும் கோமா நிலைக்குச் சென்றார். அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. ஐசக் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசர அறுவை சிகிச்சை மட்டுமே வழி என்றும், அந்த அறுவை சிகிச்சைக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனால், வாழ்நாள் முழுவதும் 'யெகோவாவின் சாட்சிகள்' மத நம்பிக்கையைப் பின்பற்றி வந்த ஐசக்கின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, ரத்தம் செலுத்த வேண்டிய அறுவை சிகிச்சையை ஏற்க வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர். ஐசக்கின் இரட்டைச் சகோதரரான ஜேக்கப் வால்டெஸ், அவரைப் புத்திசாலித்தனமான மனிதர் என்றும், தன்னார்வப் பணிகளிலும் முதியவர்களுக்கு உதவுவதிலும் ஆர்வம் கொண்டவர் என்றும் விவரிக்கிறார். 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி, மருத்துவர்கள் ஐசக்கிற்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் மருத்துவ உதவியை நிறுத்தியபோது அவர் உயிரிழந்தார். ஐசக் உயிரிழந்து 23 நாட்களே ஆகியிருந்த நிலையில், 'யெகோவாவின் சாட்சிகள்' மதப் பிரிவின் நிர்வாகக் குழு, ரத்தம் செலுத்தும் சிகிச்சை தொடர்பான தனது போதனைகளில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்தது. இந்த மாற்றம், ஐசக் மறுத்த உயிர் காக்கும் சிகிச்சையை ஏற்றுக்கொள்வதற்கு மதரீதியாக அவருக்கு அனுமதி அளித்திருக்கக் கூடியதாக இருந்தது. புதிய விதிமுறையின்படி, தானமாகப் பெறப்பட்ட ரத்தத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பெரும்பாலான மருத்துவச் சிகிச்சைகள் இனி அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குத் தடை செய்யப்பட்டவை அல்ல. பட மூலாதாரம், Valdez Family இத்தகைய சிகிச்சைகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதைத் தனிநபர்களே முடிவு செய்து கொள்ளலாம். தனது இரட்டைச் சகோதரரின் மரணத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஜேக்கப்பிற்கு இந்த அறிவிப்பு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த முடிவை 'யெகோவாவின் சாட்சிகள்' தலைமை முன்பே எடுத்திருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். அவ்வாறு செய்திருந்தால் ஐசக் இன்றும் உயிருடன் இருந்திருக்கக் கூடும் என்று ஜேக்கப் பிபிசியிடம் தெரிவித்தார். யெகோவாவின் சாட்சிகள் மதப் பிரிவில் ரத்தம் செலுத்தும் சிகிச்சைக்கான தடை 1945ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் இந்தத் தடை கொண்டுவரப்பட்டது. அந்தப் போரின் போது ரத்தம் செலுத்தும் சிகிச்சையின் பயன்பாடு அதிகரித்திருந்தது. யெகோவாவின் சாட்சிகள் மதத் தலைவர்கள், தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அப்போது அறிவித்தனர். பைபிளின் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த வசனங்களுக்கு அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக, புதிய ஏற்பாட்டில் உள்ள திருத்தூதர் பணிகள் நூலில், ரத்தத்திலிருந்தும், சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவுகளிலிருந்தும், கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் என்று விசுவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், நியூயார்க் மாகாண யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் நிர்வாகக் குழு 81 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விதிமுறையை மாற்ற முடிவெடுத்தது ஏன்? மத அமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் பல ஆண்டுகளாக இந்தத் தடையை மாற்ற வேண்டும் என்ற அழுத்தம் இருந்து வந்தது. எனினும், இந்த விதிமுறை மாற்றத்தை மதத் தலைவர்கள் அவ்வாறு விளக்கவில்லை. "இந்த மாற்றம் என்பது நவீன மருத்துவத்திற்கும் அதன் சிகிச்சை முறைகளுக்கும் பைபிளின் கொள்கைகளைப் பயன்படுத்துவதுதான்" என்று யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் பால் கில்லீஸ் கூறுகிறார். பைபிளின் வசனங்களையும் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் புதிதாக ஆராய்ந்ததன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விவரிக்கிறார். எஸ்செக்ஸ் பகுதியில், 85 ஏக்கரில் அமைந்துள்ள யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் பிரிட்டன் தலைமையகத்தில் பிபிசி செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர். நவீன வசதிகளைக் கொண்ட மிகப்பெரிய வளாகமான இங்கு, மத அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ஊதியம் பெறாமல் தங்கிப் பணியாற்றுகின்றனர். ரத்தம் தொடர்பான அடிப்படை மத போதனையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று பால் கில்லீஸ் வலியுறுத்திக் கூறினார். முழு ரத்தத்தையும் ஒருவருக்குச் செலுத்துவது இன்னும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாக பெரும்பாலான ரத்தம் செலுத்தும் சிகிச்சைகளில் முழு ரத்தம் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, நோயாளிக்குத் தேவையான ரத்தத்தின் குறிப்பிட்ட கூறுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. புதிய மாற்றத்தின்படி, ரத்த பிளாஸ்மா, சிவப்பணுக்கள், ரத்தத் தட்டணுக்கள் போன்ற கூறுகளை மருத்துவச் சிகிச்சைகளில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு தடை செய்யப்பட்டிருந்த பெரும்பாலான மருத்துவச் செயல்முறைகளில் இத்தகைய ரத்தக் கூறுகளை இனி பயன்படுத்த முடியும். ரத்தத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று பைபிள் கூறுவதாகவும், ஆனால் ரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பல்வேறு கூறுகள் குறித்து அது குறிப்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் பால் கில்லீஸ் விளக்குகிறார். பைபிளில் நேரடியாகக் குறிப்பிடப்படாத விஷயங்களுக்கும் அதன் வசனங்களை விரிவுபடுத்திப் பொருள்கொள்வதைத் தவிர்க்க வேண்டியது தங்களது கடமை என்று நிர்வாகக் குழு கருதியதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால், இந்த விளக்கம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பைபிளில் ரத்தம் செலுத்தும் சிகிச்சை குறித்து நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், 81 ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சிகிச்சைக்கு முழுமையாகத் தடை விதித்ததே பைபிள் வசனங்களுக்கு அளிக்கப்பட்ட அளவுக்கு மீறிய விளக்கம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. முழு ரத்தத்திற்குப் பதிலாக அதன் குறிப்பிட்ட கூறுகளைப் பயன்படுத்தும் மருத்துவச் சிகிச்சைகள் பல பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ள நிலையில், இந்த முக்கியமான முடிவை எடுக்க ஏன் இவ்வளவு காலம் ஆனது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. ஐசக்கின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்ற சில நாட்களிலேயே ரத்தம் தொடர்பான தடை மாற்றப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் ஜேக்கப்பும் இதே கேள்விகளை எழுப்பினார். தான் வளர்ந்த யெகோவாவின் சாட்சிகள் மதப் பிரிவிலிருந்து ஜேக்கப் ஏற்கெனவே வெளியேறியிருந்தார். ஐசக்கின் மரணத்திற்குப் பிறகு, டெக்சாஸில் அவர் சார்ந்திருந்த மதச் சபையின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஜேக்கப் குறுஞ்செய்திகளை அனுப்பினார். அந்தச் செய்திகள் அவரது மனவேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்துகின்றன. "கடவுளின் விருப்பமாக ஒருபோதும் இருந்திராத ஒரு விஷயத்திற்காக, இத்தனை பேர் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டும் என்று ஊக்குவித்ததில் உங்களுக்கிருந்த பங்கைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்" என்று அவர் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். பெரும்பாலானோர் அவரது செய்திகளுக்குப் பதிலளிக்கவில்லை. ஆனால், மதச் சபையின் மூத்த நிர்வாகி ஒருவர், இந்த விதிமுறை மாற்றம் குறித்து ஜேக்கப் ஏன் இவ்வளவு கோபமாகவும், அதிலேயே கவனம் செலுத்துபவராகவும் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று பதிலளித்தார். இது ஜேக்கப்பின் கோபத்தை மேலும் அதிகரித்தது. குறிப்பாக, உயிரிழந்தவர்களுக்கு மத அமைப்பின் முடிவுகளை எடுத்த தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். "அவர்களிடம் நான் நேரடியாக மன்னிப்பு கேட்குமாறு கோர விரும்புகிறேன். கேள்வியைத் திசைதிருப்பும் பதில் எனக்கு வேண்டாம். நேரடியான மன்னிப்புதான் வேண்டும்" என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Cummings family உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் சுமார் 90 லட்சம் பேர் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அவர்களில் ரத்தம் செலுத்தும் சிகிச்சையை மறுத்ததால் ஆண்டுதோறும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது மிகவும் கடினம். ஆனால், 2016ஆம் ஆண்டு மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆய்வு என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் 1,100 ஆக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது. இதுகுறித்து பால் கில்லீஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "அவர்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் இதுபோன்ற கேள்விகளைக் கொண்டிருந்தால், அவர்களது கருத்துகளைக் கருணையுடன் கேட்டறிய வேண்டும்" என்று அவர் கூறினார். ஆனால், இந்த மாற்றம் முன்பே ஏன் செய்யப்படவில்லை என்பதற்கு அவர் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. "ஏன் இவ்வளவு காலம் ஆனது? சில விஷயங்களுக்கு காலம் தேவைப்படும் என்பதுதான் எனது பதில். ஏதோ மாயாஜால மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று இதற்குப் பொருள் அல்ல" என்று அவர் தெரிவித்தார். மதத் தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்துக் கேட்டபோதும் பால் கில்லீஸ் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக, கடந்த காலங்களில் ரத்தம் மாசுபட்டதால் ஏற்பட்ட மருத்துவ முறைகேடுகளில் யெகோவாவின் சாட்சிகள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் சிக்காமல் இருந்ததால், பல உயிர்கள் உண்மையில் காப்பாற்றப்பட்டதாக அவர் வாதிட்டார். புதிய விதிமுறை வந்த பிறகும்கூட, யெகோவாவின் சாட்சிகள் மதத்தைச் சேர்ந்த சிலர் ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்க விரும்பாமல் இருக்கலாம் என்றும் அவர் கூறினார். இந்த விதிமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றப்பட்டிருந்தாலும் சிலர் அதே முடிவையே எடுத்திருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மேற்கு சஸ்செக்ஸ் பகுதியைச் சேர்ந்த 58 வயதான அலெக்ஸ் பால் என்பவரிடமும் பிபிசி பேசியது. யெகோவாவின் சாட்சிகள் மதத்தைப் பின்பற்றும் அவருக்கு 2012ஆம் ஆண்டு ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது அவருக்குத் தேவையான கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்வதற்கு ரத்தம் செலுத்துவதும் அவசியம் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்திருந்தார். ரத்தம் செலுத்தப்படாவிட்டால் அவர் உயிர் பிழைக்க முடியாது என்றும் அந்த மருத்துவர் கூறியிருந்தார். "நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது பைபிளின் போதனைகளை முடிந்தவரை நெருக்கமாகப் பின்பற்ற விரும்பினேன். அதைச் சிறப்பாகச் செய்ததாகவே நினைக்கிறேன்" என்று அலெக்ஸ் கூறுகிறார். யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் மருத்துவமனை தொடர்புக் குழுவின் உதவியுடன், அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவரை அவர் கண்டறிந்தார். மற்றவர்களிடமிருந்து பெறப்பட்ட ரத்தம் அல்லது ரத்தக் கூறுகளைப் பயன்படுத்தாமல், அலெக்ஸின் உடலிலேயே ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிகிச்சையை அந்த நிபுணரால் மேற்கொள்ள முடிந்தது. பிரிட்டனில் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரும் அந்த முறையைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டார். அந்தச் சிகிச்சை பலனளித்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், ரத்தம் தொடர்பான மத விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டிருந்தாலும், அன்றைய சூழலில் எடுத்த அதே முடிவையே மீண்டும் எடுப்பேன் என்று அலெக்ஸ் கூறுகிறார். தற்போதைய புதிய விதிமுறைகளின்படி, முன்பு தனக்குத் தேவை என்று கூறப்பட்ட ரத்தம் செலுத்தும் சிகிச்சைகளை அவர் ஏற்றுக்கொண்டிருக்க முடியும். யெகோவாவின் சாட்சிகள் மதப் பிரிவில் ரத்தத்தைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், ரத்த தானம் செய்வதும் பிரச்னையாக இருந்துள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த 50 வயதான எலிஷா கம்மிங்ஸ், யெகோவாவின் சாட்சிகள் மதத்தைப் பின்பற்றுபவர். மத விதிமுறைகள் காரணமாக, தனது அத்தைக்கு அவரால் ரத்த தானம் செய்ய முடியவில்லை. அவரது அத்தை பின்னர் உயிரிழந்தார். இந்த விதிமுறைகள் அவரது திருமண வாழ்க்கையையும் பாதித்ததாக எலிஷா கூறுகிறார். அவருடன் 10 ஆண்டுகள் வாழ்ந்த கணவர், சிறுவயதில் ரத்தம் செலுத்தும் சிகிச்சையைப் பெற்றிருந்தது பின்னர் தெரியவந்தது. எலிஷா சார்ந்திருந்த மதச் சமூகத்தில் இத்தகைய சிகிச்சையைப் பெற்றவர்கள் எதிர்மறையாகப் பார்க்கப்பட்டனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அவரது கணவர் மதத்தைவிட்டு வெளியேறியதுடன், எலிஷாவை விவாகரத்தும் செய்தார். "ரத்தம் தொடர்பான விதிமுறை மாற்றப்பட்ட பிறகு நான் பழையபடி இல்லை. ஒருவித மனச்சோர்வான நிலைக்குச் சென்றுவிட்டேன்" என்று எலிஷா கூறுகிறார். "ரத்தம் தொடர்பான இந்த மதக் கொள்கையைப் பற்றி மக்களிடம் எடுத்துக்கூற நான் எத்தனை வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன்? ஆனால், இப்போது நீங்கள் வந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றைக் கூறுகிறீர்கள்" என்று அவர் கேள்வி எழுப்புகிறார். இந்த மாற்றத்தால் தனது ஒட்டுமொத்த மத நம்பிக்கையே ஆட்டம் கண்டுள்ளதாக எலிஷா தெரிவிக்கிறார். இருப்பினும், மதத்தைவிட்டு வெளியேற அவர் தயங்குகிறார். தனக்கான சமூக உறவுகளை இந்த மதம்தான் வழங்குவதாகவும், அதைவிட்டு வெளியேறினால் தனிமைப்படுத்தப்படக் கூடும் என்ற அச்சம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். கடந்த காலங்களில் ரத்தம் தொடர்பான மதக் கொள்கையுடன் உடன்படாதவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டனர் அல்லது மதத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தற்போது விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் மத அமைப்பில் சேர முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. "மீண்டும் மதத்தில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்" என்று பால் கில்லீஸ் கூறுகிறார். தங்களுக்கோ தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்றுக்கொண்டதால் மதத்தைவிட்டு வெளியேறியவர்கள் குறித்துப் பேசிய அவர், அவர்கள் மீண்டும் யெகோவாவின் சாட்சிகள் மதத்தைப் பின்பற்ற விரும்பினால் வரவேற்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். "அவர்கள் மீண்டும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக விரும்பினால், மதச் சபையின் மூத்த நிர்வாகிகளுடன் பேசலாம். அவ்வாறு வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மத நம்பிக்கையால் ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்க மறுத்த இளைஞர் என்ன ஆனார்?