சென்னை, திருவள்ளூரில் கடல் சீற்றமாக காணப்படும் என்று எச்சரிக்கை... கோப்புப்படம் - EPS முரசு தீவிரப் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என்று தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல், தீவிரப் புயலாக இன்று காலை வலுப்பெற்று, நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 160 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் இன்று மாலை சென்னை கடற்கரையை நெருங்கி, பின்னர் ஆந்திரத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடல் சீற்றம், கடல் அலை தொடர்பான எச்சரிக்கையைப் பொதுமக்களுக்கு தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் விடுத்துள்ளது. சென்னை: சென்னை கடற்கரைப் பகுதியில், பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் வரையிலான பகுதிகளில் 'உயரமான அலைகள்' (High Wave) குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கடற்கரைப் பகுதியில், அலம்பரைக்குப்பம் முதல் சின்ன நீலாங்கரை வரை, கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்: திருவள்ளூர் கடற்கரைப் பகுதியில், ராயபுரம் முதல் பழவேற்காடு வரையிலான பகுதிகளில் 'உயரமான அலைகள்' (High Wave) குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில், இன்று (நவ. 2) காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, 1.4 முதல் 2.1 மீட்டர் உயரத்திலான அலைகள் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் கடற்கரைப் பகுதியில், ராயபுரம் முதல் பழவேற்காடு வரை கடல் நீரோட்டம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (நவ. 2) அதிகாலை 1:00 மணி முதல் நவ. 3 மாலை 7:00 மணி வரை, கடல் மேற்பரப்பில் நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 0.5 முதல் 0.6 மீட்டர் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆந்திரப் பிரதேச கடல் பகுதியில் கடும் சீற்றம் ஏற்படும் என்றும், அலைகள் 4.9 மீட்டர் உயரும் எழக் கூடும் என்றும் தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!