பட மூலாதாரம், @APSDMA வங்கக்கடலில் உருவாகி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள 'முரசு' புயல் தற்போது ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலுக்கு 'முரசு' என்ற பெயர் எப்படி சூட்டப்பட்டது? இந்தப் பெயரை இந்தியா ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தது. தற்போது அந்தப் பெயர் பயன்படுத்தப்படும் வரிசை வந்ததால், வங்கக்கடலில் உருவான புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரைப் பரிந்துரைத்தவர் யார்? முரசு என்ற பெயர் ஏன் தேர்வு செய்யப்பட்டது? புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எப்போது தொடங்கியது? இதற்கான விதிமுறைகளை வகுப்பது யார்? கர்நாடக வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் புவியரசன், தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றியபோது 'முரசு' என்ற பெயரைப் பரிந்துரைத்ததாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளியில், புயல்களுக்குப் பெயர் வைப்பதற்கு உலக வானிலை அமைப்பு சில வழிமுறைகளை வகுத்துள்ளதாகக் கூறுகிறார். அதன்படி, புயலுக்குச் சூட்டப்படும் பெயர் ஒரு மதத்தையோ அரசியலையோ சார்ந்ததாக இருக்கக்கூடாது. தனிப்பட்ட மனிதரின் பெயராக இருக்கக்கூடாது. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் வகையிலும் இருக்கக்கூடாது. எளிதில் உச்சரிக்கக்கூடியதாகவும், எட்டு எழுத்துகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் மக்களுடன் தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் அடிப்படையில்தான் 'முரசு' என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்கிறார் புவியரசன். End of அதிகம் படிக்கப்பட்டது பழங்காலத்தில் மன்னர் ஆட்சிக் காலத்தில் ஒரு செய்தியைப் பொதுவெளியில் மக்களுக்குத் தெரிவிப்பதற்கு முரசு பயன்படுத்தப்பட்டது. முக்கியமான அறிவிப்புகளையும், பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளையும் அறிவிப்பதற்கான கருவியாக அது இருந்தது. இதனால், மக்களுடன் தொடர்புடையதும் எளிதில் அடையாளம் காணக்கூடியதுமான 'முரசு' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டதாக அவர் விளக்குகிறார். 'முரசு' மட்டுமின்றி, வேறு சில பெயர்களையும் தாங்கள் பரிந்துரைத்ததாகப் புவியரசன் தெரிவித்துள்ளார். விவசாயத்துக்குப் பயன்படும் 'ஏர்', 'கலப்பை' ஆகிய பெயர்களையும், கடல் மற்றும் மீன்பிடித் தொழிலுடன் தொடர்புடைய 'நாவாய்', 'படகு' ஆகிய பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'திருக்கை' என்ற மீன் பெயரையும் பரிந்துரைத்ததாகக் கூறியுள்ளார். இந்தப் பெயர்களில் இருந்து 'முரசு' என்ற பெயரை இந்திய வானிலை ஆய்வு மையம் இறுதியாகத் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், AFP via Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு வங்கக்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் செயல்படுகிறது. உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் வெப்பமண்டலப் புயல்கள் குழு இந்தப் பெயரிடும் நடைமுறையை ஒருங்கிணைக்கிறது. இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் ஒவ்வொன்றும் தலா 13 பெயர்களைப் பரிந்துரைத்துள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து மொத்தம் 169 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 13 நாடுகள் பரிந்துரைத்த பெயர்களை ஆய்வு செய்து இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது வெப்பமண்டலப் புயல்கள் குழுவின் பணி. அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைப்படி, இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் ஒவ்வொரு புயலுக்கும் சூட்டுவது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொறுப்பு. இதற்கான பணியை டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் மேற்கொள்கிறது. பட மூலாதாரம், RSMC 13 நாடுகளும் பரிந்துரைத்த பெயர்கள் நாட்டின் ஆங்கிலப் பெயரின் அகரவரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டின் பெயர்களும் ஒரு நெடுவரிசையில் இடம்பெறும். முதல் நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த முதல் பெயரிலிருந்து தொடங்கி, அடுத்தடுத்த நாடுகளின் பெயர்கள் வரிசையாகப் பயன்படுத்தப்படும். அந்த நெடுவரிசை முடிந்ததும் அடுத்த நெடுவரிசைக்குச் செல்லும். இவ்வாறு பட்டியலில் உள்ள பெயர்கள் வரிசையாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, முதல் நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'நிசர்கா' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'கதி' என்ற பெயர் வருகிறது. அதற்குப் பிறகு இரான் பரிந்துரைத்த 'நிவார்', மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'புரேவி' எனத் தொடர்கிறது. அடுத்தடுத்த புயல்களுக்குப் பெயரிடும் வரிசையிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போதைய பட்டியலின் மூன்றாவது நெடுவரிசையில் வங்கதேசம் பரிந்துரைத்த 'அர்னாப்' என்ற பெயரைத் தொடர்ந்து இந்தியா பரிந்துரைத்த 'முரசு' இடம்பெற்றிருந்தது. எனவே, இந்தப் புயலுக்கு 'முரசு' என்ற பெயர் வந்ததற்குக் காரணம், பட்டியலில் அந்தப் பெயரின் முறை வந்திருப்பதுதான். புயல் எந்த நாட்டை நோக்கிச் செல்கிறது அல்லது எந்த நாட்டில் கரையைக் கடக்கிறது என்பதைப் பொறுத்து அதன் பெயர் தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக, இந்தியக் கடலோரப் பகுதிகளை நோக்கி வரும் புயலுக்கு இந்தியா பெயரிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பட்டியலில் அடுத்ததாக எந்த நாட்டின் பெயர் இடம்பெற்றுள்ளதோ, அந்த நாட்டின் பரிந்துரைக்கப்பட்ட பெயரே பயன்படுத்தப்படும். அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் புயல் பெயர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படும். ஆனால், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒவ்வொரு பெயரும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர் மீண்டும் அந்தப் பட்டியலில் இடம் பெறாது. பட மூலாதாரம், Getty Images வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறைக்கு 2000-ஆம் ஆண்டு ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற வெப்பமண்டலப் புயல்கள் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் நடைமுறை தொடங்கியது. ஆரம்பத்தில் வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் பெயர்களைப் பரிந்துரைத்திருந்தன. பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் மேலும் ஐந்து நாடுகளை இந்தப் பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகளும் இணைக்கப்பட்டன. இந்த 13 நாடுகளும் வழங்கிய பெயர்களைக் கொண்ட புதிய பட்டியல் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்பட்டது. அதில் மொத்தம் 169 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பட மூலாதாரம், IMD புயல்களுக்கு எண்கள் அல்லது வானிலை சார்ந்த தொழில்நுட்பக் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகப் பெயர்கள் சூட்டப்படுவதற்கு முக்கியக் காரணம், தகவல்களை எளிதாகப் பரிமாறிக்கொள்வதுதான். ஒரே கடல் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும்போது அவற்றைத் தனித்தனியாக அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படலாம். பெயர்கள் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க உதவுகின்றன. மேலும், புயல் நகரும் திசை, அதன் வேகம், அது கரையைக் கடக்கக்கூடிய இடம், பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் போன்ற தகவல்களை வானிலை ஆய்வு மையங்கள், பேரிடர் மேலாண்மை அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் விரைவாகக் கொண்டுசெல்லவும் பெயர்கள் உதவுகின்றன. புயல் தொடர்பான எச்சரிக்கைகளை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் இந்த நடைமுறை பயனுள்ளதாக இருக்கிறது. புயல்கள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்கும் பெயர்கள் உதவுகின்றன. பட மூலாதாரம், Getty Images கடலில் உருவாகும் அனைத்துக் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளுக்கும் பெயரிடப்படுவதில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வரையறையின்படி, கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அதிகபட்சமாக மணிக்கு 62 கிலோ மீட்டர் வேகத்திற்கும் (34 நாட்ஸ்) அதிகமான காற்றுடன் கூடிய 'புயலாக' மாறும் போது மட்டுமே அதற்கு முறையான பெயர் சூட்டப்படுகிறது. அதற்கு முந்தைய நிலைகளில் அவற்றுக்குக் குறியீட்டு எண்களே வழங்கப்படுகின்றன. ஒரு புயலுக்குச் சூட்டப்படும் பெயருக்கும் அதன் வேகம், தீவிரம், பாதிப்பு அல்லது அது கரையைக் கடக்கும் இடத்துக்கும் தொடர்பில்லை. புயலின் தீவிரத்தை அதன் காற்றின் வேகம், காற்றழுத்தம், நகரும் திசை, மழைப்பொழிவு உள்ளிட்ட வானிலை அளவீடுகளின் அடிப்படையில்தான் கணிக்க முடியும். பெயர் என்பது அந்தப் புயலைத் தனியாக அடையாளம் காணவும், அது குறித்த தகவல்களையும் எச்சரிக்கைகளையும் மக்களிடம் தெளிவாகக் கொண்டுசெல்லவும் உதவும் ஓர் அடையாளம் மட்டுமே. தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' புயலின் பெயர் இந்தியா முன்கூட்டியே பரிந்துரைத்த பட்டியலில் இடம்பெற்றிருந்தது. புவியரசன் உள்ளிட்டோர் பரிந்துரைத்த பெயர்களில் இருந்து இந்திய வானிலை ஆய்வு மையம் தேர்வு செய்த இந்தப் பெயர், தற்போது பட்டியலின் வரிசைப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு உருவாகும் புயல்களுக்குப் பட்டியலின் வரிசைப்படி இரான் பரிந்துரைத்த 'அக்வன்', மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'கானி' உள்ளிட்ட பெயர்கள் பயன்படுத்தப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
'முரசு' புயலுக்கு இந்த பெயர் வந்தது எப்படி? புயல்களுக்கு பெயர் வைப்பது யார்?