நகராட்சி துறை பணி நியமன முறைகேடு வழக்கில் கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது பற்றி... முன்னாள் அமைச்சர் கே.என். நேரு. - கோப்புப்படம் நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தடை விதிக்கக் கோரிய முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் நேரு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கே.என். நேரு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், முறைகேடு நடந்ததாக கூறப்படும் துறைக்கு அப்போது அமைச்சராக இருந்த கே.என். நேருவின் பெயரை வழக்கில் சேர்ப்பது அவசியம் என்றும், விசாரணையை அவர் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். தொடர்ந்து, கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗