பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்திற்கு நிதியளித்ததாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்ட வங்கியாளர்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்திற்கு நிதியளித்ததாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்ட வங்கியாளர்

பட மூலாதாரம், Getty Images லக்னௌ பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில், ஆகா ஹசன் அபிதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் இபாதத்யார் கான். இலக்கிய உலகில் 'இபாத் பரேல்வி' என்ற பெயரில் அறியப்பட்ட அவர், தான் எழுதிய 'கஸலான்-ஏ-ரானா' என்ற நூலில், ஆகா ஹசன் அபிதியின் ஆளுமையைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். லக்னோ பல்கலைக் கழகத்தில் ஆகா ஹசன் அபிதி ஒரே நேரத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், சட்டமும் படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் தனது நண்பர் இபாத் பரேல்வியிடம் பேசிக் கொண்டிருந்த ஆகா ஹசன் அபிதி, "என்னால் விரிவுரையாளராகவோ வழக்கறிஞராகவோ பணியாற்ற முடியாது. இந்த இரண்டு தொழில்களுமே என் இயல்புக்குப் பொருந்தாது. என் தந்தை பணிபுரியும் மஹ்மூதாபாத் எஸ்டேட்டிலேயே ஏதாவது ஒரு வேலையில் சேரலாம் என்று நினைக்கிறேன்" என்று கூறினார். அதற்கு பதிலளித்த இபாத் பரேல்வி, "உன் கல்வித் தகுதிக்கு மஹ்மூதாபாத் சமஸ்தானத்தில் கிடைக்கும் வேலை பொருத்தமானதாக இருக்காது. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'ஹபீப் வங்கி' இஸ்லாமியர்களுக்கான வங்கி. மஹ்மூதாபாத் ராஜா, ஹபீப் சேத்துக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதிக் கொடுத்தால், அங்கு உனக்கு அதிகாரி வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதற்காக லக்னௌவை விட்டு மும்பைக்கு செல்ல வேண்டியிருக்கும், எனவே இதைப் பற்றி நன்றாக யோசித்துக் கொள்" என்றார். இதைக் கேட்ட ஆகா ஹசன் அபிதி, "என்ன சொல்கிறாய் நண்பா? நான் வங்கியில் வேலை செய்வதா? என் இயல்பு உனக்கு நன்றாகத் தெரியுமே! அத்தகைய வேலை எனக்குச் சிறிதும் பொருந்தாது" என்று மறுத்துவிட்டார். ஆனால், இபாத் பரேல்வி அவரிடம் விரிவாக விளக்கிக் கூறி ஆகா ஹசன் அபிதியை வங்கி வேலை பார்க்க சம்மதிக்க வைக்க முயன்றார். "அன்பு நண்பரே, இப்போது சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கான வேலைவாய்ப்புகள் கிட்டத்தட்ட முடங்கிவிட்டன. இப்போது நமக்கு எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான் எனத் தோன்றுகிறது. நம் மதிப்பிற்குரிய ராஜாவிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கிக்கொண்டு, மும்பைக்கு புறப்படு. இந்த வேலை உன் எதிர்காலத்திற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும், உன் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கலாம்" என்று வலியுறுத்தினார். பட மூலாதாரம், Abedi Family Archive இபாத் பரேல்வியின் யோசனை ஆகா ஹசன் அபிதிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றாலும், அதைப் பற்றி அவர் தொடர்ந்து யோசித்தார். இதுகுறித்து இபாத் பரேல்வி தனது நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "இறுதியில், ஆகா ஹசன் அபிதி என் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். அரசரைச் சந்தித்து, ஹபீப் சேத்துக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். மிகவும் மேன்மையான மனிதரான அவர், ஆகா ஹசன் அபிதிக்காக கடிதம் எழுதிக் கொடுத்தார். 'இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு மும்பைக்குச் செல்லுங்கள். இறைவனின் விருப்பம் இருந்தால், உங்கள் முயற்சி வெற்றி பெறும்' என்று கூறினார்." End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு மறுநாள், அந்தக் கடிதத்துடன் இபாத் பரேல்வியின் வீட்டுக்கு வந்த ஆகா ஹசன் அபிதி, "நண்பரே, பரிந்துரைக் கடிதம் கொடுத்துவிட்டார். ஆனால், நான் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன், எனக்கு யோசனை கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு இபாத் பரேல்வி, "இந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக மும்பைக்குப் புறப்படுங்கள். அங்கு ஹபீப் சேத்தை சந்தித்து, அவரிடம் கடிதத்தைக் கொடுத்து, ஹபீப் வங்கியில் அதிகாரியாகப் பணியில் சேருங்கள்" என்று ஆலோசனை கூறினார். ஆகா ஹசன் அபிதிக்கு இபாத் பரேல்வியின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. எனவே, அவரது யோசனையை ஏற்று மும்பைக்குச் செல்ல சம்மதித்தார். வானிலை மோசமானதாக இருந்தபோதிலும், ஒரு வாரத்துக்குப் பிறகு மும்பைக்குப் புறப்பட்டார். மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு, மும்பையிலிருந்து ஆகா ஹசன் அபிதி எழுதிய கடிதம் இபாத் பரேல்விக்குக் கிடைத்தது. அதில், "அரசர் கொடுத்த பரிந்துரைக் கடிதம் மிகவும் உதவியாக இருந்தது. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. இங்கு சூழல் இனிமையாக இருக்கிறது. மும்பை நகரமும் மிகவும் அழகாக உள்ளது. நான் இங்குள்ள சூழலுக்கு நன்றாகப் பொருந்திக்கொண்டேன். தற்போது பயிற்சி நடைபெற்று வருகிறது. அது மூன்று முதல் நான்கு மாதங்களில் முடிவடையும். அதன் பிறகு, ஹபீப் வங்கியின் பல்வேறு கிளைகளைத் தொடங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தைப் படித்தபோது தாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக இபாத் பரேல்வி நினைவுகூர்கிறார். வங்கிப் பணிகள் தொடர்பாக ஆகா ஹசன் அபிதி அடிக்கடி டெல்லிக்கு சென்று வந்தார். இதற்கிடையில், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது, புதிய நாடாக பாகிஸ்தான் உருவானது. இபாத் பரேல்வி லாகூரில் உள்ள ஓரியன்டல் கல்லூரியில் சேர்ந்தார். ஆகா ஹசன் அபிதியும் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு ஹபீப் வங்கியில் படிப்படியாகப் பல்வேறு பொறுப்புகளை ஏற்று முன்னேறினார். பட மூலாதாரம், BBC/Wikimedia Commons ஹபீப் வங்கியில் பணியாற்றிய காலத்தில், ஆகா ஹசன் அபிதி பாகிஸ்தானின் முக்கியத் தொழிலதிபர்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சைகல் குடும்பத்தினர். 1959ஆம் ஆண்டு, ஒரு குறிப்பிட்ட வணிக ஒப்பந்தத்திற்காக சைகல் குடும்பத்தினருக்கு வங்கி உத்தரவாதம் வழங்க ஹபீப் குடும்பத்தினர் தயக்கம் காட்டினர். ஆனால், அந்த ஒப்பந்தத்தில் அபிதிக்கு அதிக ஆர்வம் இருந்தது. எனவே, தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஹபீப் குடும்பத்தினரிடம் அவர் வலியுறுத்தினார். இது எதிர்பாராத விளைவுக்கு வழிவகுத்தது. அவர் ஹபீப் வங்கியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அபிதியின் வங்கித் துறை அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்தி ஒரு புதிய வங்கியைத் தொடங்க சைகல் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதன் விளைவாக, 1959ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி 'யுனைடெட் பேங்க்' நிறுவப்பட்டது. இந்த வங்கிக்கான முதலீட்டை சைகல் குடும்பத்தினர் வழங்கிய போதிலும், வங்கியின் உருவாக்கத்திற்கான அடிப்படைத் திட்டத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் கொண்டிருந்தவர் ஆகா ஹசன் அபிதி. அடுத்த 10 முதல் 12 ஆண்டுகள், பாகிஸ்தானின் வங்கித் துறையில் யுனைடெட் வங்கியின் பொற்காலமாக அமைந்தன. கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், குவெட்டா போன்ற முக்கிய நகரங்களிலும் சிறிய நகரங்களிலும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் ஆகிய இரு பகுதிகளிலும் யுனைடெட் வங்கி தனது நற்பெயரைப் பெற்றது. சைகல் குழுமத்தின் ஆதரவும் வணிகத் தொடர்புகளும் பாகிஸ்தானின் பிற தொழில் நிறுவனங்கள் மத்தியிலும் இந்த வங்கியின் மீதான நம்பிக்கையை அதிகரித்தன. 1970ஆம் ஆண்டுக்குள், யுனைடெட் வங்கி பாகிஸ்தான் முழுவதும் 912 கிளைகளைத் திறந்திருந்தது. அவற்றில் 224 கிளைகள் கிழக்கு பாகிஸ்தானில் அமைந்திருந்தன. இது தவிர, வெளிநாடுகளிலும் 24 கிளைகள் தொடங்கப்பட்டிருந்தன. கிழக்கு பாகிஸ்தானில், ஆகா ஹசன் அபிதியுடன் சலே நக்வியும் இணைந்து பணியாற்றினார். மேற்கு பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், தனது திறமையாலும் உழைப்பாலும் அங்குள்ள வணிகச் சூழலில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். பட மூலாதாரம், Amazon கடந்த 1971ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, யுனைடெட் வங்கி தனது கிழக்கு பாகிஸ்தான் கிளைகளின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு முன்பே, சலே நக்வி மேற்கு பாகிஸ்தானுக்கு திரும்பியிருந்தார். அந்தக் காலகட்டத்தில், ஆகா ஹசன் அபிதி ஒரு சர்வதேச வங்கியை உருவாக்கும் கனவுடன் செயல்பட்டு வந்தார். 1974 ஜனவரி 1ஆம் தேதி, பாகிஸ்தான் அரசு நாட்டின் அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்கியது. அதற்குள், புதிய வங்கியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அபிதி முடித்திருந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆட்சியாளரான ஷேக் சயத் பின் சுல்தான் அல் நஹ்யானின் நம்பிக்கையைப் பெற்ற அபிதி, அவரது நிதியுதவியுடன் 'பேங்க் ஆஃப் கிரெடிட் அண்ட் காமர்ஸ் இன்டர்நேஷனல்' (BCCI) என்ற சர்வதேச வங்கியை நிறுவினார். இந்த வங்கி லக்சம்பர்க்கில் பதிவு செய்யப்பட்டது. முஸ்லிம் முதலீட்டாளர்களின் ஆதரவுடன், உலக வங்கியைப் போன்றதொரு சர்வதேச இஸ்லாமிய வங்கியை உருவாக்க வேண்டும் என்பதே அபிதியின் தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய நாடுகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி, அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவதை அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். இதன் மூலம், வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க விரும்பினார். ஷேக் சயத்தின் ஆதரவுடன், அபிதி பிசிசிஐ வங்கியைத் தொடர்ந்து விரிவுபடுத்தினார். குறுகிய காலத்திலேயே, 72 நாடுகளில் 400க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட சர்வதேச வங்கியாக அது வளர்ந்தது. சுமார் 16,000 பேர் அங்கு பணியாற்றினர். ஒரு கட்டத்தில், உலகின் ஏழாவது மிகப்பெரிய வங்கியாகவும் பிசிசிஐ வங்கி உருவெடுத்தது. பிசிசிஐ-இன் நோக்கம் வங்கி சேவைகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் பல்வேறு திட்டங்களையும் அது முன்னெடுத்தது. கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த அபிதி, கராச்சி முதல் சுவாபி வரை பல கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் பங்காற்றினார். அவற்றில் கோரங்கி அகாடமி, ஃபாஸ்ட் பல்கலைக் கழகம், குலாம் இஷாக் கான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வீடற்ற மற்றும் வறுமையில் வாடும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான 'ஓரங்கி பைலட் திட்டம்', பொருளாதார உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு ஆதரவளித்த 'இன்ஃபாக் அறக்கட்டளை' போன்ற முன்னெடுப்புகளும் கவனம் பெற்றன. பொது சுகாதாரத் துறையிலும் பிசிசிஐ நிதியுதவி வழங்கியது. கராச்சியில் உள்ள சிந்து சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று நிறுவனம், லேடி டஃபெரின் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களுக்கு கணிசமான அளவில் நன்கொடைகளை வழங்கியது. பட மூலாதாரம், Getty Images ஆகா ஹசன் அபிதியின் சாதனைகளும் அவரது வியத்தகு செயல்பாடுகளும் உலகெங்கும் பேசப்பட்டன. ஆனால், மேற்கத்திய நாடுகள் அவரது வெற்றியைப் பாராட்டுவதற்குப் பதிலாக, போட்டி மனப்பான்மையுடனும் அச்சத்துடனும் பார்த்தன. குத்ரத்துல்லா ஷஹாப் தனது 'ஷஹாப்நாமா' நூலில் இதுகுறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்: "1981ஆம் ஆண்டு அக்டோபரில், லண்டனில் இருந்து வெளியாகும் 'நியூ ஸ்டேட்ஸ்மேன்' இதழின் ஒரு பிரதியைப் பார்த்தேன். அதன் அட்டைப் படத்தில் ஆகா ஹசன் அபிதியின் பெரிய வண்ணப் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதன் கீழே, 'அரசுகளையே விலைக்கு வாங்கும் வங்கியாளர்' என்ற தலைப்பு இடம்பெற்றிருந்தது." அந்த இதழில் ஆகா ஹசன் அபிதி மற்றும் பிசிசிஐ குறித்து நான்கு பக்கக் கட்டுரையும் வெளியிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் பொறாமை, போட்டி, அச்சம், வெறுப்பு ஆகிய உணர்வுகள் வெளிப்பட்டதாக ஷஹாப் கருதினார். இதற்குக் காரணம், பிசிசிஐ உலகம் முழுவதும் மிக வேகமாகக் கிளைகளை விரிவுபடுத்தி வந்ததுதான். இதுகுறித்து மேலும் கூறும் ஷஹாப், "பிசிசிஐ-யின் அசுர வளர்ச்சியும் விரிவாக்கமும் பிரிட்டனின் வங்கிகளுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்தன. ஏனெனில், அந்த வங்கிகள் மந்தமான செயல்பாடு, தேக்கநிலை, புதிய மாற்றங்களுக்கு விரைவாக ஈடுகொடுக்க இயலாமை, சிக்கலான நிர்வாக நடைமுறைகள் போன்ற பிரச்னைகளில் சிக்கியிருந்தன." அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, ஆகா ஹசன் அபிதியை நேரில் சந்தித்து, அவரது வங்கியின் அபார வளர்ச்சிக்குப் பின்னால் இருந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தமக்குத் தோன்றியதாகவும் ஷஹாப் குறிப்பிட்டுள்ளார். 'ஷஹாப்நாமா' நூலில், ஆகா ஹசன் அபிதியுடனான தனது சந்திப்பைப் பற்றி அவர் விரிவாக விவரிக்கிறார். அவரது பதிவின்படி, பிசிசிஐ-யின் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு நிலவியது. ஒவ்வொரு பணியாளரும் தங்களை அந்த நிறுவனத்தின் ஓர் அங்கமாக மட்டுமின்றி, அதன் வளர்ச்சியில் நேரடிப் பங்காற்றுபவராகவும் கருதினர். பிசிசிஐ நிர்வாகத்தின் கீழ் பல நலத்திட்ட அமைப்புகள் செயல்பட்டு வந்தன. மேலும், ஒவ்வொரு பணியாளருக்கும் ஆண்டுதோறும் அவர்களின் வருடாந்திர ஊதியத்தில் 2.5% முதல் 3.5% வரை கூடுதல் தொகை வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது: அந்தத் தொகையைத் தங்களுக்காகச் செலவிடாமல், பிறரின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நிபந்தனையைப் பணியாளர்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்று யாரும் கண்காணிக்கவில்லை. அந்தப் பொறுப்பு முழுவதும் அவரவர் மனசாட்சிக்கும், அவர்கள் மீதான நிர்வாகத்தின் நம்பிக்கைக்கும் விடப்பட்டிருந்தது. பிசிசிஐ-யின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது. அதன் செயல்பாடுகள் குறுகிய காலத்திலேயே நான்கு மடங்காக விரிவடைந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், அதன் வளர்ச்சியும் நலத்திட்டப் பணிகளும் காலப்போக்கில் சர்வதேச அமைப்புகளின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கின. பட மூலாதாரம், Getty Images கடந்த 1988ஆம் ஆண்டு, உடல்நலக் குறைவு காரணமாக ஆகா ஹசன் அபிதி தாமாக முன்வந்து பிசிசிஐ-யின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பிறகு, அவர் உருவாக்கிய வங்கி மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டத்திற்கு நிதியுதவி அளித்தது, பாலத்தீன விடுதலைக் குழுவினருக்கு ஆதரவளித்தது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் அரசுத் தலைவர்கள் மற்றும் குற்றவாளிகளின் கறுப்புப் பணத்தை சட்டபூர்வமான பணமாக மாற்ற உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும். இதன் விளைவாக, ஆகா ஹசன் அபிதி சர்வதேச அளவில் தேடப்படும் நபர்களில் ஒருவரானார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, லக்சம்பர்க், கேமன் தீவுகள், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்த பிசிசிஐ-யின் சொத்துகளும், லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. விசாரணைக்காக ஆகா ஹசன் அபிதியை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப பாகிஸ்தான் மறுத்துவிட்டது. அபிதி ஓய்வுபெற்ற பிறகு, பிசிசிஐ-யின் தலைமைப் பொறுப்பை சலே நக்வி ஏற்றுக்கொண்டார். அவர் அபுதாபியில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 1994ஆம் ஆண்டு அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு பாகிஸ்தான் திரும்பிய அவர், அங்கு பிசிசிஐ-யின் அறப்பணிகளைக் கவனித்து வந்தார். மேலும், பிசிசிஐ-யின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் புத்தகம் ஒன்றையும் எழுதினார். ஆனால், அந்தப் புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை. சலே நக்வி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி காலமானார். அவருடன் பிசிசிஐ-யின் கதையும் ஒரு முடிவுக்கு வந்தது. ஆகா ஹசன் அபிதி பாகிஸ்தானின் வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளில் பங்களித்துள்ளார். நவீன பாகிஸ்தானை உருவாக்குவதில் பங்காற்றிய முக்கிய நபர்களில் ஒருவராக அவரைக் கருதலாம். வாழ்நாளின் இறுதிக் காலத்தை அவர் கராச்சியில் கழித்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பேசவே சிரமப்பட்டார். 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி கராச்சியில் அவர் காலமானார். அவரது உடல் அலிபாக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை