பாலியல் தாக்குதலுக்கு ஆளான நிறைமாத கர்ப்பிணி நீதிக்காக போராடிய கதை - 15ஆம் நூற்றாண்டில் என்ன நடந்தது?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
பாலியல் தாக்குதலுக்கு ஆளான நிறைமாத கர்ப்பிணி நீதிக்காக போராடிய கதை - 15ஆம் நூற்றாண்டில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images 1472-ஆம் ஆண்டு குளிர்காலத்தில், பிரான்சின் டிஜோன் நகரில் ஜெஹான்னே என்பவர் அதிகம் அறியப்படாத ஒரு பெண்ணாக இருந்தார். அப்போது அவர் கொடூரமான வன்முறைச் சம்பவம் ஒன்றுக்கு ஆளானார். அந்த நேரத்தில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அதன்பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து வரலாற்றாசிரியர் சாரா மெக்டோகல் தனது புதிய நூலான 'ஜஸ்டிஸ் ஃபார் ஜெஹான்னே'-இல் விரிவாக ஆராய்ந்துள்ளார். இடைக்காலத்தில் நீதி எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்த நமது முன்முடிவுகளைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான மனதைப் பாதிக்கக்கூடிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெஹான்னே மீதான தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த நூல் இடைக்காலக் காலகட்டத்தைச் சேர்ந்த துப்பறியும் கதைபோல அமைந்துள்ளது. அந்த இரவில் உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தின் மையத்தில் இருந்த பெண் யார்? போன்ற கேள்விகளை இந்த நூல் எழுப்புகிறது. பிரான்சின் வடகிழக்குப் பகுதியில் உள்ள லோரெய்ன் மாகாணத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஜெஹான்னே, தெற்கே இருந்த டிஜோன் நகருக்குச் சென்றிருந்தார். அந்தக் காலத்தில் ஒருவரின் அடையாளம் என்பது தெளிவாக வரையறுக்கப்படாத ஒன்றாக இருந்தது. 1472-ஆம் ஆண்டு விசாரணையாளரிடம் வாக்குமூலம் அளித்தபோது, தனக்கு சுமார் 32 வயது என்று ஜெஹான்னே தெரிவித்தார். End of அதிகம் படிக்கப்பட்டது அப்போது பிறப்புகள் முறையாகப் பதிவு செய்யப்படாததால், ஒருவரது வயதைத் துல்லியமாக அறிந்துகொள்வது கடினமாக இருந்தது. தனக்குத் திருமணமாகிவிட்டதாகவும், தான் ஜெஹான் டி ரெலாஞ்சஸ் என்பவரின் மனைவி என்றும் அவர் கூறினார். அந்தக் காலத்தில் ஒருவர் அணிந்திருந்த ஆடைகள், அவருக்கு எத்தகைய சமூக மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. ஜெஹான்னே அணிந்திருந்த ஆடைகள் அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மரியாதையைப் பெற்றுத் தருவதாகத் தெரிகிறது. சாட்சிகளின் கூற்றுப்படி, அவர் நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தார். பொது இடங்களுக்குச் செல்லும்போது தனது பொன்னிற முடியை முழுமையாக மறைக்கும் வகையில் அவர் அணிந்திருந்த நீண்ட தலைக்கவசம், திருமணமான மற்றும் சமூகத்தில் மதிப்புடன் வாழும் பெண் என்பதைக் குறிப்பதாக இருந்தது. டிஜோன் நகரில் அப்போது போர் காரணமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக இருந்தன. பர்கண்டி பிரபுவான சார்லஸ் தி போல்டுக்கும் பிரான்ஸ் மன்னர் 11-ஆம் லூயிக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மன்னரின் படைகள் பர்கண்டி பிரதேசத்தின் வழியாக முன்னேறியதால், டிஜோன் நகரம் மீதான படையெடுப்பு அச்சுறுத்தல் அதிகரித்திருந்தது. நகரைப் பாதுகாப்பதற்காக, பர்கண்டி பிரபு அதன் மதிற்சுவர்களைச் சுற்றி கூலிப்படையினரை நிறுத்தியிருந்தார். ஆனால், சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்ட இந்தப் படையினர், நகர மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர். "தொடர்ந்து பல பிரச்னைகள் ஏற்பட்டன. இரவு நேரங்களில் ஆண்கள் பணம் பறிப்பதற்காகவோ, துன்புறுத்துவதற்காகவோ, கடத்துவதற்காகவோ அல்லது பிணைத்தொகை கேட்பதற்காகவோ ஆட்களைத் தேடினர்," என்று மெக்டோகல் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்தச் சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் சிறிதும் மகிழ்ச்சியாக இல்லை. நகர நிர்வாகத்துக்கும் பிரபுவுக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது." பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு 1472-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி பிற்பகல், ஜெஹான்னேவுக்கும் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான பெண்ணுக்கும் முன்கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. வெளியே இரண்டு உள்ளூர் ஆண்கள் நின்றுகொண்டிருந்தனர். தங்களுடன் வருமாறு அவர்களை வற்புறுத்தினர். இரு பெண்களும் மறுத்தபோது, அந்த ஆண்களில் ஒருவர் அருகிலிருந்த மதுக்கூடத்துக்குச் சென்று பர்கண்டி பிரபுவின் கூலிப்படையினரில் சிலரை அழைத்து வந்தார். ஜெஹான்னே அளித்த வாக்குமூலத்தின்படி, அந்த ஆண்கள் அவரை அருகிலிருந்த வயலுக்கு இழுத்துச் சென்று தாக்கினர். அவர் கர்ப்பமாக இருப்பது தங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று அவர்கள் கூச்சலிட்டனர். அவர் வயிற்றில் சுமந்திருந்த குழந்தை ஒரு பாதிரியாருடையது என்றும், அது முறையற்ற உறவில் பிறந்த குழந்தை என்றும் தாங்கள் கேள்விப்பட்டதாக அவர்கள் கூறினர். பனியில் போராடிக் கொண்டிருந்த போது, சில ஆண்கள் தன்னுடன் பாலியல் உறவு கொள்ள முயன்றதாக ஜெஹான்னே விவரித்தார். அவர் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்ததும், கடுமையாக எதிர்த்துப் போராடியதும் அந்த முயற்சியைத் தடுக்க உதவின. தன்னை அவர்கள் அடித்ததாகவும், குப்புறத் தள்ளியதாகவும் ஜெஹான்னே தெரிவித்தார். தான் பெற்றெடுக்கவிருந்த குழந்தையின் உடல்நிலை என்னவாகுமோ என்ற அச்சத்தில் உறைந்துபோனதாகவும் அவர் கூறினார். ஆனால், இடைக்காலம் குறித்த நமது இன்றைய புரிதலுடன் ஒப்பிடும் போது, அதற்குப் பிறகு நடந்தவை வியப்பளிப்பவையாக இருக்கின்றன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் சமூகத்தில் பெரும் அவப்பெயரைச் சந்தித்தனர் என்றும், பொதுவாக அவர்களது சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டு, இறுதியில் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. 1988-ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்டு, 2010-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஜாக் ரோசியோவின் 'இடைக்காலத்தில் விபச்சாரம்' என்ற நூல் இந்தக் கருத்துக்கு முக்கிய ஆதாரமாகக் குறிப்பிடப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images நியூயார்க்கில் உள்ள ஜான் ஜே குற்றவியல் நீதிக் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் மெக்டோகல், ரோசியோவின் விளக்கத்தைச் சரிபார்க்க முடிவு செய்தார். அதற்காக, டிஜோனில் கூலிப்படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கர்ப்பிணிப் பெண் ஒருவரைப் பற்றிய ரோசியோவின் சுருக்கமான குறிப்பை அவர் தொடக்கப் புள்ளியாக எடுத்துக்கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் அக்குறிப்பில் இல்லை. ரோசியோவின் கூற்றுப்படி, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கக்கூட அந்தப் பெண் முதலில் தயங்கினார். நடந்த சம்பவத்தால் ஏற்பட்ட அவமான உணர்வே இதற்குக் காரணம். அவரைப் போலவே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பல பெண்களும் இறுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட நேர்ந்ததாகவும் ரோசியோ வாதிட்டார். ரோசியோ குறிப்பிட்ட சம்பவமும் ஜெஹான்னேவின் கதையும் பெருமளவில் ஒத்துப்போவதாகத் தோன்றியது. ஆனால், மெக்டோகல் விசாரணையைத் தொடங்கினார். டிஜோன் நகராட்சி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த, 70 பக்கப் பழங்காலப் பத்திர ஆவணங்களை மிகக் கவனமாக ஆராய்ந்தார். அப்போது, இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை வெளிப்பட்டது. ஜெஹான்னே அளித்த வாக்குமூலத்தின் விவரங்களை, நகராட்சி நிர்வாகத்துக்காகப் பணியாற்றிய விசாரணையாளர் ஜாக் போரெஸ்டெல் பதிவு செய்திருந்தார். கூலிப்படையினர் கர்ப்பிணி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியதாகக் கேள்விப்பட்டதும், போரெஸ்டெல் அந்தப் பெண் யார், குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் யார் என்பதைக் கண்டறிய உடனடியாக விசாரணையைத் தொடங்கினார். தாக்குதல் நடந்த மறுநாளே ஜெஹான்னேவிடம் அவர் முதன்முதலில் விசாரணை நடத்தினார். அப்போது, நடந்த சம்பவத்தால் நிலைகுலைந்துபோயிருந்த ஜெஹான்னே படுக்கையில் இருந்தார். தனது குழந்தையின் நிலை குறித்தும் அவர் அச்சமடைந்திருந்தார். தனக்கு நேர்ந்த தாக்குதல் பற்றிய விவரங்களையும், தாக்கியவர்களைப் பற்றி நினைவில் இருந்த தகவல்களையும் ஜெஹான்னே தயக்கமின்றிப் போரெஸ்டெலிடம் தெரிவித்தார். அடுத்த நாளே ஜெஹான்னே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனக்கு நேர்ந்த சம்பவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள அவர் எடுத்த முடிவு அந்தக் காலத்தில் வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. காரணம், அப்போது குற்றவியல் நீதி வழங்குவதில் டிஜோன் நகரத்தின் செயல்பாடுகள் சிறப்பானதாக இருக்கவில்லை. சட்டரீதியாக, ஒருவரைக் கடத்துவதற்கும் தாக்குவதற்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம். ஆனால், பெரும்பாலான குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால், புகார் அளிப்பதால் ஜெஹான்னேவுக்கு அதிக பலன் கிடைத்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இருப்பினும், ஜெஹான்னே வழங்கிய தகவல்களின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோரைக் குறுகிய காலத்திலேயே போரெஸ்டெல் கைது செய்தார். விசாரணையின்போது அந்த ஆண்கள் ஜெஹான்னேவைத் தாக்கியதாக ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, ஜெஹான்னேவைத் தாக்கியவர்களுடன் அவரை நேருக்கு நேர் சந்திக்கச் செய்வதற்கான ஏற்பாட்டை போரெஸ்டெல் செய்தார். அப்போது, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்த தனது வாக்குமூலத்தை ஜெஹான்னே மீண்டும் தெரிவித்தார். குற்றத்தை ஒப்புக்கொள்ள யாரும் முன்வராத நிலையில், நகராட்சி அதிகாரிகள் வழக்கத்திற்கு மாறான கடுமையான விசாரணை முறைகளைப் பயன்படுத்தலாம் எனக் கருதினர். ஆண்களில் ஒருவருக்கு, நீரில் மூழ்கடிப்பது போன்ற சித்திரவதை முறை பயன்படுத்தப்பட்டது. இறுதியில், அவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பட மூலாதாரம், Getty Images ஒப்புதல் வாக்குமூலங்கள் கிடைத்ததும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று நகர நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், ஒரு சிக்கல் எழுந்தது. அவர்கள் கூலிப்படையினர் என்பதால், தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் பர்கண்டி பிரபுவின் அதிகார வரம்புக்குள் வந்தனர். இதற்குச் சற்று முன்புதான், கூலிப்படையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், டிஜோன் நகர மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று விரும்புவதாகவும் பர்கண்டி பிரபு அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்போது, அந்தத் தவறான செயல்களைக் கண்டித்து வெளிப்படையாக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருந்தது. அவர் அப்படிச் செய்தாரா? சிறிது காலத்துக்குப் பிறகு, அந்த ஆண்களை விடுவிக்குமாறு பர்கண்டி பிரபுவின் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக நகராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்தது. இதற்கு நகராட்சி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தது. கால அவகாசத்தைப் பெறவும் முயன்றது. இதற்கிடையில், மற்றொரு விசாரணையை நடத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இம்முறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் ஜெஹான்னே. அவரை விசாரணைக்கு உட்படுத்தி தண்டிப்பது இதன் நோக்கமல்ல. மாறாக, புகார் அளித்தவராக அவர் எத்தகைய நம்பகத்தன்மை கொண்டவர் என்பதை மதிப்பிடுவதே நோக்கமாக இருந்தது. போரெஸ்டெல் தனது பதிவில் நேரடியாகக் குறிப்பிட்டபடி, ஜெஹான்னே ஒரு "நேர்மையான பெண்ணா" — அதாவது திருமணமான, சமூக மரியாதையுடன் வாழும் பெண்ணா — அல்லது "அவப்பெயர் பெற்ற பெண்ணா" என்பதைக் கண்டறிவதே அவரது நோக்கமாக இருந்தது. ஜெஹான்னேவைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட அண்டை வீட்டினர் உள்ளிட்ட பலரிடம் போரெஸ்டெல் விசாரித்தார். அவர்களில் பலர், ஜெஹான்னே மரியாதைக்குரிய பெண்ணாகத் தோன்றியதாகக் கூறினர். அவர்களில் யாரும் ஜெஹான்னேவைச் சுட்டிக்காட்டி, அவர்தான் தாக்குதலுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டவில்லை. இருப்பினும், விரைவிலேயே ஜெஹான்னே, போரெஸ்டெலிடம் கூறியிருந்த தகவல்களுடன் முரண்படும் சில விவரங்கள் தெரியவந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அருகிலிருந்த ஒரு மடாலயத்தில் ஜெஹான்னே மற்றொரு குழந்தையைப் பெற்றெடுத்ததாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்தார். அப்போது அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த ஒரு பாதிரியார்தான் அந்தக் குழந்தையின் தந்தை என்று நம்பப்பட்டது. ஜெஹான்னே தனது கணவரைச் சந்தித்து பல ஆண்டுகள் ஆகியிருந்ததாகவும் தோன்றியது. பட மூலாதாரம், Blaise Dubrocq/ Princeton University Press இந்தப் புதிய தகவல்கள் குறித்து விசாரிப்பதற்காக, போரெஸ்டெல் மீண்டும் ஜெஹான்னேவைச் சந்தித்தார். அவர்களது முந்தைய உரையாடலுக்குப் பிறகு, கூலிப்படையினருக்கு ஆதரவானவர்களிடமிருந்து ஜெஹான்னேவுக்கு மிரட்டல்கள் வந்திருந்தன. பழிவாங்கும் தாக்குதல்கள் நடைபெறக்கூடிய உடனடி ஆபத்து இருந்தபோதிலும், சில அண்டை வீட்டினரும் புதிதாக அறிமுகமானவர்களும் அவருக்கு உதவினர். அவர் தலைமறைவாக வசிக்கக்கூடிய இடங்களைக் கண்டறியவும் அவர்கள் உதவினர். இறுதியில், அவர் ஒரு மருத்துவமனையில் தஞ்சமடைந்தார். அங்கு அவர் வேலை செய்து வந்தார். தான் ஏற்கெனவே சில பொய்களைச் சொல்லியிருப்பதாக ஜெஹான்னே போரெஸ்டெலிடம் ஒப்புக்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் போருக்குச் செல்வதற்காகத் தன்னைக் கைவிட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். அதன்பிறகு, ஒரு பாதிரியாருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் காதல் உறவில் இருந்ததாகவும், அந்த உறவில் இரண்டு குழந்தைகளைப் பெற்றதாகவும் ஒப்புக்கொண்டார். அப்படியானால், ஜெஹான்னே ஒரு "ஒழுக்கமற்ற பெண்ணா"? இது குறித்து போரெஸ்டெல் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்: "மற்றவர்களிடம் திருடுவதைவிட, தனது உடலைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தைப் பெறுவது மேல்." அந்தக் காலத்தின் சிக்கலான பாலியல் ஒழுக்கக் கருத்துகளுடன் இது பொருந்துகிறது. திருமணத்துக்கு முன்பான பாலியல் உறவுகள் கோட்பாட்டளவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அவை பரவலாகப் பொறுத்துக்கொள்ளப்பட்டன. பாதிரியார்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர்களில் சிலர் காதல் உறவுகளில் ஈடுபட்டனர்; திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு குழந்தைகளையும் பெற்றனர். பாலியல் தொழில் கோட்பாட்டளவில் கடுமையான தார்மிகப் பாவமாகக் கருதப்பட்டாலும், நடைமுறையில் அது பரவலாகப் பொறுத்துக் கொள்ளப்பட்டது. பட மூலாதாரம், Getty Images ஜெஹான்னே தன்னை யாரென்று காட்டிக்கொண்டாரோ அந்தப் பெண்ணாக அவர் இருக்கவில்லை; ஆரம்பத்தில் காட்டிக்கொண்டது போல ஒரு அடக்கமான மனைவியாக அவர் இருக்கவில்லை. திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தகவல்கள் வழக்கின் போக்கை மாற்றவில்லை. போரெஸ்டெல் சேகரித்த புதிய தகவல்களை அறிந்த பின்னரும், வழக்கைத் தொடர்ந்து நடத்த அரசுத் தரப்பு முடிவு செய்தது. ஒரு பாதிரியாருடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டு குழந்தை பெற்றிருந்தார் என்ற உண்மை, இந்த வழக்கில் பொருட்படுத்தப்படவில்லை. அந்தக் கூலிப்படையினருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். ஆனால், மற்றொரு சிக்கல் எழுந்தது. அந்தக் கூலிப்படையினர் அப்போது சிறையில் இல்லை. அந்த ஆண்கள் மதகுருமார்கள் என்றும், அதனால் அவர்கள் திருச்சபைச் சட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் என்றும் பர்கண்டி பிரபுவின் அதிகாரிகள் வாதிட்டனர். மதகுருமார்கள் ஆயுதங்களை ஏந்துவதற்கே தடை இருந்த நிலையில், இந்த வாதம் முரண்பாடானதாக இருந்தது. இருப்பினும், நகராட்சி அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த ஆண்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு ஜெஹான்னேவுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவது சாத்தியமில்லை. அவர் பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபட்டாரா? அது சாத்தியம்தான். ஏனெனில், அக்காலத்தில் டிஜோன் நகரில் ஜெஹான்னே என்ற பெயரைக் கொண்ட வேறு சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகப் பதிவுகள் உள்ளன. இருப்பினும், இதை உறுதியாகக் கூறுவதற்குப் போதுமான தகவல்கள் ஆவணங்களில் இல்லை. ஜெஹான்னேவின் கதை எப்படி முடிந்திருந்தாலும், 600 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற ஆவணங்களில் பாதுகாக்கப்பட்டிருந்த அவரது வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியை அறிந்துகொள்ள முடிந்தது குறித்து மெக்டோகல் மகிழ்ச்சி அடைகிறார். "நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவர் தனக்காகத் தொடர்ந்து போராடிய விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது." அவர் வாழ்ந்த காலம் அவருக்கு அச்சுறுத்தலாக இருந்தபோதிலும், "தன்னால் செயல்பட முடியும் என்றும், தனக்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அவர் கருதினார்." பட மூலாதாரம், Getty Images மிக முக்கியமாக, இடைக்காலம் குறித்த பொதுவான முன்முடிவுகளை ஜெஹான்னேவின் கதை கேள்விக்குள்ளாக்குகிறது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை