பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் உள்ளூர் காவல் நிலையம் தவறு செய்துவிட்டதாகவும், அது உடனடியாகச் சரிசெய்யப்பட்டதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். "கலையரசன் மீது நடவடிக்கை எடுத்தது உள்ளூர் காவல் நிலையம் செய்த தவறு. அவர் சில ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டதாகப் புகார் வந்ததால், காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். இந்த விவரம் காலையில் எனக்குத் தெரிவிக்கப்பட்டதும், காவல்துறையினரிடம் விளக்கிக் கூறினேன். அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கையை நிறுத்திவிட்டனர். 30 நிமிடங்களுக்குள் அவர் விடுவிக்கப்பட்டார். தவறு நடந்தால் உடனடியாக அதைச் சரிசெய்வோம்," என்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஏ. கலையரசன், பல்லாவரம் தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. காமாட்சி குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறி, அக்டோபர் 28-ஆம் தேதி அதிகாலை ஐந்து மணியளவில் காவல்துறையினரால் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு தன்னுடையது அல்ல என்றும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்திப் போலிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கலையரசன் தெரிவித்துள்ளார். கலையரசன் அக்டோபர் 28ஆம் தேதி காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) எழுதிய புகாரில், அதிகாலை ஐந்து மணியளவில் சாதாரண உடையில் வந்த மூன்று காவலர்கள் தன்னை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய செல்பேசியைப் பறித்துக்கொண்டு, விசாரணைக்காகப் பம்மலில் உள்ள சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியதாகவும், புகார் அல்லது முதல் தகவல் அறிக்கையின் நகல் எதையும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர், தன்னுடைய புகைப்படத்தைக் கொண்டிருந்த, ஆனால் தனக்குத் தொடர்பில்லாத இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அவதூறான கருத்து பதிவிடப்பட்டிருந்ததாகக் காவலர்கள் தெரிவித்தனர் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அந்தக் கணக்குடன் தனக்குத் தொடர்பில்லை என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்த பின்னர், காலை 7.45 மணியளவில் தன்னை வீட்டில் இறக்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது தான் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் என்றும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்திப் போலிக் கணக்கு உருவாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலையரசன் டிஜிபியிடம் கோரியுள்ளார். இந்தச் சம்பவத்துக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வியாளரை அதிகாலையில் அழைத்துச் சென்றது அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்று குறிப்பிட்ட அவர், காவல்துறையும் முதலமைச்சரும் கலையரசனிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகமும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார். போலிக் கணக்கை உருவாக்கியவர், அவதூறான பதிவை வெளியிட்டவர், புகார் அளித்தவர் யார் என்பதையும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் கலையரசனை அழைத்துச் சென்றதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் 'காவல்துறை தவறு செய்தது' - அமைச்சர் நிர்மல் குமார் கூறியது என்ன?