பஞ்சாப் தேர்தலில் ‘போதைப்பொருள் பிரச்சினை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? - ஓர் அலசல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
பஞ்சாப் தேர்தலில் ‘போதைப்பொருள் பிரச்சினை’ முக்கியத்துவம் பெறுவது ஏன்? - ஓர் அலசல்

போதைப்பொருளுக்கு எதிராக போராடிய பர்விந்தர் சிங் ஜோட்டா கொலையை கண்டித்து நடந்த போராட்டம். | கோப்புப் படம் இந்தியாவின் ‘தானியக் களஞ்சியம்’ எனப் போற்றப்படும் பஞ்சாப் மாநிலம், நாட்டின் எல்லையைக் காக்க வீரர்களையும், தேசத்தின் பசியைத் தீர்க்கும் விவசாயிகளையும் பெற்றெடுத்த பெருமைமிக்க பூமி. ஆனால், துரதிருஷ்டவசமாக இன்று தன் சொந்தப் பிள்ளைகளைப் போதைப்பொருளுக்குப் பலிகொடுத்து கண்ணீரில் மூழ்கியுள்ளது. பஞ்சாபை பொறுத்தவரை போதைப்பொருள் என்பது வெறும் சட்டம் - ஒழுங்கு சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. அது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சியாளர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய அரசியல் காரணியாகவும் உருவெடுத்துள்ளது. தெருக்கள்தோறும் திறக்கப்படும் மறுவாழ்வு மையங்களும், போதைக்கு அடிமையாகி மாண்டுபோகும் இளைஞர்களுமே மாநிலத்தின் ஆறாத துயர் வடுக்களாக மாறியுள்ளனர். 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு 2027 பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், “எங்கள் வீட்டின் இளைஞர்களை எந்தக் கட்சி காப்பாற்றும்?” என்ற பெண்களின் அழுகுரல் பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலும் எதிரொலிக்கிறது. “நாங்கள் ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்போம்” என்ற ஆம் ஆத்மி கட்சியின் கவர்ச்சிகரமான வாக்குறுதியை முழுமையாக நம்பி, 2022-ல் பெருவாரியாக வாக்களித்த மக்கள், இன்றும் போதைப் பிடியிலிருந்து மீள முடியாமல் தவித்து வருவது ஆளும் கட்சியை அரசியல் ரீதியாகக் கடும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. கட்சிகள் மாறி காட்சிகள் மாறாத சாபம்: காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம், பாஜக, தற்போது ஆம் ஆத்மி என ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த கட்சிச் சின்னங்களும் முதல்வர்களும் தொடர்ந்து மாறி வந்தாலும், பஞ்சாபை ஆட்டிப்படைக்கும் ‘போதைப்பொருள் அரக்கனை’ மட்டும் எந்தக் கட்சியாலும் அகற்ற முடியவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் பல தசாப்தங்களாகத் தொடரும் இப்பிரச்சினையைத் தீர்க்க, கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் அமரீந்தர் சிங் புனித நூலின் மீது சத்தியம் செய்து வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து வந்த ஆம் ஆத்மி அரசோ நான்கு மாதக் கெடு விதித்தது. இவ்விரு கட்சிகளின் ஆட்சியில் மட்டுமல்லாமல், சிரோன்மணி அகாலி தளம் ஆட்சிக் காலத்திலும் நிலைமை இதற்கு சளைத்ததாக இல்லை. அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் மட்டுமே மிஞ்சியதே தவிர, போதைப்பொருள் புழக்கம் மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் தலைவிரித்து ஆடுவதைத் தடுக்க முடியவில்லை. போதை தந்த சமூகத் தாக்கம் பஞ்சாபில் போதைப்பொருளுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பர்விந்தர் சிங் ஜோட்டா, மான்சா நகரில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டது ஆளும் கட்சியைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. போதைப்பொருள் பிரச்சினை என்பது சாதி, மதம், வயது என அனைத்தையும் கடந்து சமூகத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடிய ஒன்றாகும். குறிப்பாக, குடும்பப் பெண்கள் மற்றும் பெற்றோர்களின் தவிப்பும் ஆத்திரமும் 2027 வாக்குப்பதிவின்போது எதிரொலித்து தேர்தல் முடிவுகளில் கடுமையான திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும். போதைப்பொருள் எளிதாக கிடைப்பது எப்படி? எல்லைப் பகுதியால் ஆபத்து: பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தானுடன் சுமார் 553 கிலோமீட்டர் நீள சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. எல்லைக்கு அப்பாலிருந்து ட்ரோன்கள் மூலம் ‘ஹெராயின்’, செயற்கை போதை மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் எளிதாக வீசப்படுகின்றன. இவை சமூக விரோதிகள் கைக்குச் சென்று மக்களிடம் பரவுகின்றன. தாதாக்கள் - அரசியல்வாதிகள் பிணைப்பு: போதைப்பொருள் கடத்தல்காரர்கள், உள்ளூர் காவல் துறையினர் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்டவர்களுக்கு இடையே பல தசாப்தங்களாகச் சட்டவிரோதக் கூட்டு இயங்கி வருகிறது. நாட்டிலேயே போதைப்பொருள் பயன்பாட்டில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அரசால் மேற்கொள்ளப்பட்ட விரிவான கணக்கெடுப்புகளின்படி, மாநிலத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஏதேனும் ஒருவகையான போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களைப் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. போதைப்பொருள்கள் ஒழிப்பில் நீண்டகாலம் பணியாற்றிய மாநிலத்தின் முன்னாள் காவல் துறைத் தலைவர் சஷி காந்த் கூறுகையில், “காவல் துறையின் ஒரு பிரிவினர், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது. இதன் காரணமாக, போதைப்பொருள் அச்சுறுத்தலையும் அதன் வணிகத்தையும் பயன்பாட்டையும் தடுப்பது சாத்தியம் இல்லாத்து ஆகிறது. பணம் ஈட்டும் பேராசையே இந்த வணிகம் செழித்து வளர்வதற்கு மற்றொரு காரணம்” என்றார். அமிர்தசரஸில் உள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் ரஞ்சித் சிங் குமன் கூறுகையில், “வட மாநிலங்கள் பலவற்றிலும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தீவிரப் பிரச்சினையாக உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளும், மற்ற மாநிலங்களை விட பஞ்சாபில்தான் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் அதிகம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. காவல் துறை, கடத்தல்காரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இடையே பிணைப்பு இருப்பதை எங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் போதைப்பொருட்களை விநியோகிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றன” எனத் தெரிவித்தார். வேலையின்மை, பொருளாதார முடக்கம்: வேளாண் நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக ஏற்படும் தீவிர விரக்தியால் 80 சதவீத இளைஞர்கள் மிக எளிதாக போதைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். ஈரான் - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் வழியிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பாதையின் நுழைவுவாயிலாகப் பஞ்சாப் அமைந்திருப்பதை மாநில அரசால் மட்டுமே முறியடிக்க இயலாது. 2027 தேர்தல் - தாக்கமும் கணிப்பும் 2022-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி அளித்த வாக்குறுதிக்காக போதைப்பொருள் தடுப்புப் படை அமைப்பு, கடத்தல்காரர்களின் சொத்துகள் பறிமுதல் மற்றும் 60,000-க்கும் மேற்பட்ட எப்ஐஆர் பதிவுகள் எனப் பல கடுமையான நடவடிக்கைகளை ஆம் ஆத்மி அரசு எடுத்தது. இருப்பினும் கிராமப்புறங்களில் இன்றும் போதைப்பொருள் தாராளமாகக் கிடைப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இத்தகைய நிர்வாகத் தோல்வி குறித்த பிரசாரம், காங்கிரஸ் மற்றும் புதிதாக உருவாகும் பாஜக - அகாலி தளம் கூட்டணிக்குக் கிராமப்புற வாக்குகளை அறுவடை செய்யச் சாதகமான சூழலை உருவாக்கும். அதேசமயம், முதல்வர் பகவந்த் மானின் தனிப்பட்ட பிரபலம், இலவச மின்சாரம், ‘ஆம் ஆத்மி கிளினிக்’ மற்றும் மகளிர் நலத்திட்டங்கள் மூலமாக ஆளுங்கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி கைவசம் உள்ளதை மறுக்க முடியாது. இருந்த போதிலும், போதைப்பொருள் ஒழிப்பு வாக்குறுதி நிறைவேறாததும், சட்டம் - ஒழுங்கு சீர்கேடும் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால், 2027 தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புகள் இருந்தாலும், 2022-இல் கிடைத்த 92 இடங்கள் என்ற தனிப்பெரும் பெரும்பான்மை கணிசமாகக் குறைந்து, 69 முதல் 82 இடங்களாக அது சுருங்கக்கூடும் என அரசியல் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை