பட மூலாதாரம், Helen Ward "நீல நிற உடை அணிவிக்கப்பட்ட நிலையில், ஒரு பைக்குள் இருந்து என்னைக் கண்டெடுத்தனர்." வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் அன்பும் அரவணைப்பும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த டேவிட் மெக்பிரைடுக்கு, தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பது எப்போதுமே தெரிந்திருந்தது. ஆனால், 15 வயதில் ராணுவத்தில் சேர்வதற்காகப் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தபோதுதான், தனது பிறப்பு குறித்த தகவல்கள் எந்த அளவுக்குக் குறைவாக இருந்தன என்பதை அவர் உணர்ந்தார். அந்தப் பிறப்புச் சான்றிதழில் பெரும்பாலான விவரங்கள் இடம் பெறவில்லை. அவரது உயிரியல் பெற்றோர் யார் என்பது தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல அவர் பிறந்த இடம், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களும் தெரியவில்லை. அப்போது, தன்னைத் தத்தெடுத்து வளர்த்த தந்தை, தனக்குத் தெரிந்த சில தகவல்களை மெக்பிரைடிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், Helen Ward குழந்தையாக இருந்தபோது மெக்பிரைட் கைவிடப்பட்டதாகவும், பூட்டப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் முன் இருக்கையில் இருந்து அவர் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரது தந்தை கூறினார். இதையடுத்து, தனது பிறப்பு குறித்துக் கிடைக்கக்கூடிய அனைத்து விவரங்களையும் கண்டறிய மெக்பிரைடும் அவரது தந்தையும் முடிவு செய்தனர். அவர்கள் உள்ளூர் பொது நூலகத்திற்குச் சென்று, பழைய செய்தித்தாள்களில் வெளியான செய்திகளை ஒவ்வொன்றாகக் கவனமாக ஆராயத் தொடங்கினர். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு மெக்பிரைட் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்போது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருந்தது. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் வடக்கு அயர்லாந்தில் குழந்தைகள் கைவிடப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாக இருந்தது. திருமணத்திற்குப் புறம்பாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தேவாலயங்கள் பெரும்பாலும் உதவி செய்ததாகவும், குறைந்தபட்சம் அவர்கள் தங்குவதற்கு இடமளித்ததாகவும் மெக்பிரைட் விளக்குகிறார். "திருமணமாகாத ஒரு பெண் கர்ப்பமடைந்தால், அவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்டார். எல்லாவற்றையும் மறைத்து வைக்க முயன்றதுதான் இதில் பிரச்னையாக இருந்தது." பழைய நாளிதழ்களில் வெளியான செய்திகள் மூலம் மெக்பிரைட்டால் தனது பிறப்பு குறித்துப் பெரிய அளவில் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும், குழந்தையாக இருந்தபோது அவர் நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தார் என்பதை அந்தச் செய்திகள் உறுதி செய்தன. "எனக்கு நன்றாக உணவளித்திருந்தனர். என்னை மிகவும் கவனமாகப் பராமரித்திருந்தனர்" என்று அவர் கூறுகிறார். தன்னைப் பெற்றெடுத்த தாய் இளம் வயதுடையவராக இருந்திருக்கலாம் என்றும், அச்சத்தின் காரணமாகத் தன்னைக் கைவிட்டிருக்கலாம் என்றும் மெக்பிரைட் கருதினார். இதையடுத்து, தனது உயிரியல் தாயைக் கண்டுபிடிக்க முயல அவர் முடிவு செய்தார். பட மூலாதாரம், Helen Ward ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் மெக்பிரைட்டின் தேடலுக்குப் பெரிதாகப் பலன் கிடைக்கவில்லை. கைவிடப்பட்ட குழந்தைகள் தொடர்பான பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதிலும், தனது பிறப்பு குறித்த கேள்விகளுக்கு அவரால் பதில்களைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, தன்னுடன் வளர்ந்த சகோதரி அளித்த ஊக்கத்தால் டிஎன்ஏ பரிசோதனை செய்துகொள்ள மெக்பிரைட் முடிவு செய்தார். அந்தப் பரிசோதனையின் முடிவு அவரது வாழ்க்கையையே மாற்றியது. தனக்கு உயிரியல் சகோதரி ஒருவர் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். "அது ஓர் அற்புதமான ஆச்சரியமாக இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையே வந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்" என்று அவர் கூறுகிறார். அவரது சகோதரியின் பெயர் ஹெலன் வார்டு. ஆனால், தனது தாயைப் பற்றிய கேள்விகளுக்கு ஹெலன் பதிலளிப்பார் என்று மெக்பிரைட் எதிர்பார்த்த நிலையில், அவரிடமும் பதில்கள் கிடைக்காத பல கேள்விகள் இருந்தன. ஏனெனில், ஹெலனும் குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்டிருந்தார். "பச்சை நிறப் பை ஒன்றில் வைத்து, தொலைபேசிக் கூண்டு ஒன்றுக்குள் என்னை விட்டுச் சென்றிருந்தனர். அங்கிருந்துதான் என்னைக் கண்டெடுத்தனர்" என்று ஹெலன் வார்டு கூறுகிறார். "நாங்கள் இருவரும் பைகளில் கண்டெடுக்கப்பட்ட இரட்டையர்களாக இருக்கலாம் என்பதுதான் முதலில் எனக்குத் தோன்றியது." பட மூலாதாரம், Helen Ward ஆனால், அவர்கள் இரட்டையர்கள் அல்ல. இருவரும் ஏழு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தவர்கள். அயர்லாந்தின் எல்லைக்கு இருபுறமும் வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டவர்கள். இருப்பினும், அவர்களது வாழ்க்கையில் இருந்த ஒற்றுமைகள் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தன. "லாரி ஓட்டுநர் ஒருவர்தான் என்னைக் கண்டெடுத்தார்" என்று ஹெலன் வார்டு கூறுகிறார். "நான் வைக்கப்பட்டிருந்த பையில், வெதுவெதுப்பான பால் நிரப்பப்பட்ட குழந்தைகளுக்கான பாட்டிலும் மாற்று உடைகளும் இருந்தன. எனக்கு நல்ல உடைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. குளிர் தாக்காத வகையில் கதகதப்பாக வைக்கப்பட்டிருந்தேன்." மெக்பிரைட் போலவே ஹெலன் வார்டும் அன்பும் அரவணைப்பும் நிறைந்த ஒரு வளர்ப்புக் குடும்பத்தில் வளர்ந்தார். ஆனால், தானும் ஒரு தாயானபோது, தன்னைப் பெற்றெடுத்த தாயைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென அவர் முடிவு செய்தார். தான் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பணியாற்றிய சமூகப் பணியாளர் ஒருவரை ஹெலன் தொடர்புகொண்டார். அப்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு மெக்பிரைட் பார்த்ததைப் போன்ற ஒரு பிறப்புச் சான்றிதழை அந்தச் சமூகப் பணியாளர் அவரிடம் காட்டினார். அதில், 'தாய் யார் என்பது தெரியவில்லை', 'தந்தை யார் என்பது தெரியவில்லை', 'தொலைபேசிக் கூண்டில் பாதுகாப்பற்ற நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. "அதைப் பார்த்ததும் நான் மிகவும் மனமுடைந்து போனேன். உள்ளே ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால், அவற்றுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்" என்று ஹெலன் கூறுகிறார். அதன் பிறகு வந்த ஆண்டுகளில், ஹெலனும் தனது பிறப்பு குறித்துத் தனியாகத் தேடத் தொடங்கினார். நேயர்கள் தொலைபேசி மூலம் பங்கேற்கும் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்துகொண்டார். அதன் மூலம், 1969ஆம் ஆண்டு தனது வழக்கைக் கையாண்ட காவல்துறை அதிகாரியையும், முதன்முதலில் தன்னைக் கண்டெடுத்த லாரி ஓட்டுநரையும் அவர் கண்டுபிடித்தார். இருப்பினும், நீண்ட காலமாகப் பிரிந்திருந்த தனது சகோதரரை அவர் கண்டுபிடித்தது, நண்பர் ஒருவர் வீட்டிலேயே டிஎன்ஏ பரிசோதனை செய்து கொள்வதற்கான கருவியை வழங்கிய பிறகுதான். "அது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது. நான் காண்பது கனவல்ல என்பதை உறுதி செய்துகொள்ள என்னையே மீண்டும் மீண்டும் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்" என்று ஹெலன் கூறுகிறார். பட மூலாதாரம், Helen Ward நீண்ட காலத் தேடலுக்குப் பிறகு, டேவிட் மெக்பிரைட்டும் ஹெலன் வார்டும் முதன்முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது, இருவரின் தோற்றத்திலும் இருந்த ஒற்றுமைகளைக் கண்டது அவர்களுக்கு உணர்ச்சிகரமான அனுபவமாக அமைந்தது. "அந்தத் தருணத்தில் நடப்பவை அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ள முயல்வோம். பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றும்" என ஹெலன் வார்டு நினைவுகூர்கிறார். "நாங்கள் சந்தித்த அந்த நொடியிலேயே, எங்களைச் சுற்றியிருந்த அனைத்தும் மறைந்துவிட்டதைப் போல உணர்ந்தோம்" என்று மெக்பிரைட் கூறுகிறார். ஆனால், ஒரு தேடல் முடிவுக்கு வந்த நிலையில், மற்றொரு தேடல் மீண்டும் தொடங்கியது. அது, தங்களைப் பெற்றெடுத்த பெற்றோரைக் கண்டுபிடிப்பதற்கான தேடல். இறுதியில், தங்களது தாய் 90 வயதில் உயிரிழந்துவிட்டதை அவர்கள் அறிந்துகொண்டனர். இருவரும் சந்திப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன்புதான் அவர் உயிரிழந்திருந்தார். அவர்களது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இருப்பினும், தங்களது பெற்றோரின் வாழ்க்கை குறித்த சில தகவல்களை அவர்களால் கண்டறிய முடிந்தது. "எங்கள் தாய் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். தந்தை நகரத்தைச் சேர்ந்தவர்" என்று மெக்பிரைட் கூறுகிறார். "எங்கள் தந்தையைவிடத் தாய் மிகவும் இளையவர். நகர வாழ்க்கையின் மீதான ஈர்ப்பு காரணமாக, அயர்லாந்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து டப்ளின் நகருக்கு அவர் வந்தார். எங்கள் தந்தை டப்ளினில் ஓர் இசைக்குழுவின் நடத்துநராக இருந்தார். நடன அரங்குகளுக்குச் சென்றபோது எங்கள் தாய் அவரைச் சந்தித்திருக்கலாம். அவர்களுக்கிடையிலான காதல் உறவு 40 ஆண்டுகளோ அல்லது அதற்கும் மேலாகவோ நீடித்தது." பட மூலாதாரம், Helen Ward இவ்வளவு நீண்ட காலம் அந்த உறவு நீடித்திருக்க வேண்டுமென்றால், இருவரும் உண்மையாகவே காதலித்திருக்க வேண்டும் என்று மெக்பிரைட் நம்புகிறார். ஆனால், அவர்களது உறவு பல சிக்கல்களைக் கொண்டதாக இருந்தது. அவர்களது தந்தைக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது. மேலும், அவர் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். அவர்களது தாயோ கத்தோலிக்க கிறிஸ்தவர். அந்தக் காலகட்டத்தில் அயர்லாந்தில் மத வேறுபாடுகள் ஆழமாக வேரூன்றியிருந்தன. சமூகமும் பழமைவாதக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. இத்தகைய சூழலில், தங்களது பெற்றோர் பல சமூகக் கட்டுப்பாடுகளை மீறியதாக டேவிட் மெக்பிரைட் கருதுகிறார். "ஒருவர் கத்தோலிக்கர், மற்றொருவர் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். திருமணத்திற்குப் புறம்பாகக் குழந்தைகள் பிறந்திருந்தனர். இப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு என்ன நம்பிக்கை இருந்திருக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார். ஆனால், ஹெலன் வார்டுக்கு மேலும் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. தனது பிறப்பு குறித்த தகவல்களைத் தேடிய ஆண்டுகளில் படித்த செய்தி ஒன்று அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்தச் செய்தி, தனக்கு இன்னொரு சகோதரர் இருக்கக்கூடுமா என்ற கேள்வியை எழுப்பியது. "1965ஆம் ஆண்டில் தொலைபேசிக் கூண்டு ஒன்றில் குழந்தை கண்டெடுக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குழந்தை ஒரு பைக்குள் வைக்கப்பட்டிருந்தது. அதனுடன் வெதுவெதுப்பான பால் நிரப்பப்பட்ட பாட்டிலும் இருந்தது. அந்தக் குழந்தை கண்டெடுக்கப்பட்ட விதம் தொடர்பான அனைத்து விவரங்களும், எனக்கும் டேவிட்டுக்கும் நடந்தவற்றுடன் ஒத்துப்போயின," என்று ஹெலன் கூறுகிறார். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மெக்பிரைடும் ஹெலனும் தங்களது தேடல் குறித்து இணைந்து உருவாக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தார். அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும், அயர்லாந்தைச் சேர்ந்த தனது தந்தை ஜான் குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார். பட மூலாதாரம், Helen Ward பின்னர், ஜான் உண்மையிலேயே ஹெலன் மற்றும் டேவிட்டின் உயிரியல் சகோதரர் என்பது தெரிய வந்தது. "எங்கள் மூவரில் ஜான் இரண்டாவதாகப் பிறந்தவர்" என்று ஹெலன் விளக்குகிறார். "நாங்கள் மூவரும் முதன்முறையாக ஒன்றாக அமர்ந்து சந்தித்தபோது, அது நம்ப முடியாத அனுபவமாக இருந்தது. நமது சொந்தக் குடும்பத்தினரை நேரில் பார்க்கிறோம். மனதில் ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுகின்றன. ஆனால், அந்தத் தருணம் அற்புதமானதாக இருந்தது." இருப்பினும், இன்னும் பதில் கிடைக்காத பல கேள்விகள் அவர்களிடம் உள்ளன. அந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், தங்களது தாய் எடுத்த முடிவுகளுக்காக அவரைக் குறை கூற முடியாது என்று ஹெலனும் டேவிட்டும் தெரிவிக்கின்றனர். "மூன்று குழந்தைகளையும் கருவில் சுமந்து, பெற்றெடுத்த சிறிது காலத்திலேயே அவர்களைக் கைவிட வேண்டிய நிலை எங்கள் தாய்க்கு எவ்வளவு கொடுமையான அனுபவமாக இருந்திருக்கும்" என்று ஹெலன் கூறுகிறார். தனது தாய் முதுமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றைப் பார்த்ததை டேவிட் நினைவுகூர்கிறார். அந்தக் காணொளியில், அவரது தாய் ஒரு பொம்மையை இறுக்கமாக அணைத்துக்கொண்டு, அதை விட மறுத்துக்கொண்டிருந்தார். "வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், 'இவள் என் மகள். நான் ஏற்கெனவே மூன்று குழந்தைகளை இழந்துவிட்டேன். இவளையும் என்னிடமிருந்து பிரித்துச் செல்ல உங்களை அனுமதிக்க மாட்டேன்' என்று என் தாயின் மனம் நினைத்திருக்குமோ என நான் யோசிக்கிறேன்" என்று டேவிட் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு
பைகளில் குழந்தைகளாக கைவிடப்பட்ட உடன்பிறந்தோர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்தது எப்படி?