பொன்முடிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்ற பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன். பொன்முடி - கோப்புப் படம் சைவ, வைண சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகாரை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் திரும்பப் பெற்றார். சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ,வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார். இந்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தார். அவரது மனுவில், மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடியை தண்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ” சர்ச்சைக்குரிய வகையில் நான் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை நிகழ்ச்சி நடைபெற்றவுடனேயே நான் பேசியது தவறாக இருந்தால் அனைவரும் என்னை மன்னித்துவிடுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த வழக்கைத் தொடுத்த சகோதரியிடமும் என் வருத்தத்தை கூறியிருந்தேன். மீண்டும் அவர்களுடைய மனது புண்பட்டிருக்குமானால், யாருடைய மனதும் புண்பட்டிருக்குமேயானால் மீண்டும் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேச்சுக்கு பொன்முடி பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டுள்ளார். அவரது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக உமா ஆனந்தன் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு: பொன்முடிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்ற பாஜக கவுன்சிலர்!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗