பின்னாளில் பாகிஸ்தான் பிரதமரான இவர் ஒரு கட்டத்தில் தன்னை 'இந்திய குடிமகனாக' நிரூபிக்க போராடியது ஏன்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
பின்னாளில் பாகிஸ்தான் பிரதமரான இவர் ஒரு கட்டத்தில் தன்னை 'இந்திய குடிமகனாக' நிரூபிக்க போராடியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் பெற அப்போது இன்னும் ஏழு அல்லது எட்டு மாதங்கள் இருந்தன. சிந்து மாகாணத்தின் முக்கிய நில உரிமையாளரும் அரசியல்வாதியுமான சர் ஷா நவாஸ் பூட்டோ, ஜூனாகத் சமஸ்தானத்தில் அரசுப் பொறுப்புகளை ஏற்கத் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்றபோது, தனது இளம் மகன் சுல்பிகர் அலி பூட்டோவை கல்வியைத் தொடரவும், குடும்பத்துக்குச் சொந்தமான பரந்த சொத்துகளைக் கவனித்துக் கொள்ளவும் பம்பாயில் விட்டுச் சென்றார். பின்னர் பாகிஸ்தானின் அமைச்சராகவும், அதிபராகவும், பிரதமராகவும் ஆன சுல்பிகர் அலி பூட்டோ, உயர்கல்விக்காக வெளிநாட்டில் இருந்தபோது, அவரது சொத்தை 'கைவிடப்பட்ட சொத்து' என்று அறிவித்து இந்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதாவது, உரிமையாளர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தபோது கைவிடப்பட்ட சொத்து என்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சொத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக, அடுத்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் சட்டப் போராட்டம் நடத்திய பூட்டோ, தன்னை ஓர் 'இந்தியக் குடிமகன்' என்று அறிவித்துக்கொண்டது எப்படி, இதற்குப் பதிலாக பாகிஸ்தானில் அவருக்குக் கிடைத்தது என்ன, அடுத்தடுத்த ஆண்டு காலங்களில் அவரது எதிரிகள் இந்தியக் குடியுரிமை குறித்த அவரது கோரிக்கையை அரசியல் ரீதியாகத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியது எப்படி என்பதைப் பற்றிய கதை தான் இது. ஸ்டான்லி வோல்பர்ட், பூட்டோவின் வாழ்க்கை வரலாற்று நூலான 'பாகிஸ்தானின் ஜுல்ஃபி புட்டோ: 'அவரது வாழ்வும் காலமும்' (Zulfi Bhutto of Pakistan: His Life and Times) என்ற நூலில், அவரது பெற்றோர் ஜூனாகத்துக்குச் சென்ற பிறகு, சுல்பிகர் பம்பாயின் கார்மைக்கேல் சாலையில் இருந்த அவர்களது 'தி நெஸ்ட்' என்ற வீட்டில் வசிக்கத் தொடங்கியதாக எழுதியுள்ளார். வழக்கறிஞர் சஞ்சோய் கோஷ், 'பார் அண்ட் பெஞ்ச்' இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், பம்பாயின் வோர்லி எஸ்டேட்டில் 4ஏ என்ற முகவரியில் அமைந்திருந்த இந்த வீட்டை, பம்பாய் மாநகராட்சியிடமிருந்து நிரந்தரக் குத்தகைக்கு சர் ஷா நவாஸ் பூட்டோ பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ரூ.25,344 செலுத்தப்பட்டது. ஆண்டு வாடகை வெறும் ஒரு ரூபாய் மட்டுமே. End of அதிகம் படிக்கப்பட்டது "பம்பாயின் பரபரப்பான ஃபோர்ட் பகுதியில் இருந்த குடும்பத்துக்குச் சொந்தமான மற்றொரு சொத்தான பல மாடிகளைக் கொண்ட ஹோட்டல் அஸ்டோரியாவில் இருந்து, அவர் மாதந்தோறும் ரூ.1,10,000-க்கும் அதிகமான வாடகை வருவாயைப் பெற்று வந்தார். 1946-47 காலகட்டத்தில் அது கணிசமான தொகையாகும். பல நிதி உத்தரவாதங்கள், மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தையும் அவர் விட்டுச் சென்றிருந்தார்." சஞ்சோயின் கூற்றுப்படி, சர் ஷா நவாஸ் இந்தச் சொத்துகளைத் தனது 18 வயது மகனுக்கு மாற்றியிருந்தார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில், கல்வி கற்பதற்காக சுல்பிகர் அலி பூட்டோ அமெரிக்கா சென்றார். 1947 ஆம் ஆண்டு நவம்பரில், சர் ஷா நவாஸ் பூட்டோ கராச்சியில் நிரந்தரமாகக் குடியேறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு, கதீட்ரல் அண்ட் ஜான் கானன் பள்ளியில் படித்துவந்த 15 வயது மாணவரான சுல்பிகர் அலி பூட்டோ, பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தில், 'பாகிஸ்தானுக்காக எனது உயிரைக்கூடத் தியாகம் செய்யும் காலம் வரும்' என்று எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்ததுபோல இவ்வாறு எழுதியிருந்தார் என சஞ்சய் குறிப்பிட்டுள்ளார். சுல்பிகர் , அமெரிக்காவில் இருந்த தனது நண்பர்களிடம் பாகிஸ்தானின் நிறுவனரான முகமது அலி ஜின்னாவைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார் என்றும், "அவர்தான் என் தலைவர்! அவர்தான் என் முன்மாதிரி, நான் மதிக்கும் நபர்" என்று கூறுவார் என்றும் ஸ்டான்லி எழுதுகிறார். '1948 செப்டம்பர் தொடக்கத்தில் ஜின்னா மறைந்தபோது, அமெரிக்காவில் இருந்த பாகிஸ்தானின் முதல் தூதரான எம்.ஏ.எச். இஸ்ஃபஹானிக்கு எழுதிய கடிதத்தில் 'இந்த இக்கட்டான தருணத்தில் நாம் யாரும் அற்றவர்களாகிவிட்டோம் . நமது அன்புத் தலைவரின் எல்லையற்ற தாராள மனப்பான்மை முன்னெப்போதையும் விட அதிகமாக நமக்குத் தேவைப்பட்ட நேரம் இது'என சுல்பிகர் எழுதியுள்ளார். கோடை விடுமுறையின்போது, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சிறிது காலம் தன்னார்வலராகவும் அவர் பணியாற்றினார். மறுபுறம், 1949 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி, சுல்பிகர் அலி பூட்டோ இந்தியாவில் 'வெளியேறியவர்' என்று அறிவிக்கப்பட்டார். அவரது சொத்துகளும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஏ.ஜி. நூரானி, 'ஃபிரண்ட்லைன்' இதழில் எழுதிய கட்டுரையில், இந்த முடிவை எதிர்த்து பூட்டோ ஒன்பது ஆண்டுகளாகப் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சொத்துக் காப்பாளர், தலைமைச் சொத்துக் காப்பாளர், பம்பாய் மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றங்கள், இறுதியாக இந்திய உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அவர் இந்த முடிவை எதிர்த்துப் போராடினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 'ஒருபுறம், தான் சொத்தை விட்டுச் சென்றவர் என்ற முடிவை அவர் எதிர்த்தார். பாகிஸ்தானுடனான எந்தவொரு தொடர்பையும், அந்நாட்டின் குடியுரிமையையும் அல்லது அங்கு நிரந்தரமாக வசிப்பதையும் மறுத்தார். மறுபுறம், சொத்தை விட்டுச் சென்றவர் என்ற முறையில் பாகிஸ்தானில் உரிமை கோருபவராக இருந்ததால், பம்பாய் உயர் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டிருந்த நீதிமன்றப் பணத்தைத் தனக்குச் செலுத்துமாறு பாகிஸ்தானில் ஒரு விண்ணப்பத்தையும் தாக்கல் செய்திருந்தார்.' 1965ஆம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், அகதிகள் மறுவாழ்வுத் துறை அமைச்சர் மகாவீர் தியாகி பின்வருமாறு கூறியதாக ஏ.ஜி. நூரானி எழுதியுள்ளார். 'பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் சுல்பிகர் அலி பூட்டோ, பிரிவினையின் போது தனது பெற்றோருடன் பம்பாயில் வசித்து வந்தார். அங்கு அவருக்குச் சொத்துகளும் இருந்தன.' அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் மகாவீர் தியாகி அவையில் சமர்ப்பித்த நீதிமன்ற ஆவணங்களின்படி, பூட்டோ 1949 ஜூலை 27-ம் தேதி சொத்துகளுக்கான துணைக் காப்பாளரிடமும், 1951 நவம்பர் 17-ம் தேதி சொத்துக் காப்பாளரிடமும் அளித்த வாக்குமூலங்களில், சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, 1947 செப்டம்பர் 8-ம் தேதியளவில் பம்பாயிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றதாகவும், அங்கு நிரந்தரமாக வசித்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார். 1947 செப்டம்பர் 8-ம் தேதி வெளிநாட்டுக்குச் சென்றபோது தன்னிடம் இந்தியக் கடவுச்சீட்டு இருந்ததாகவும் அவர் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு, 1949 ஜூலை 27-ம் தேதி அளித்த வாக்குமூலத்திலும், '1945-ம் ஆண்டு முதலே பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு விண்ணப்பிக்கத் தொடங்கினேன். அவற்றிலிருந்து வந்த பதில்களை எனது தந்தை பெற்றுக்கொள்வார். நான் பம்பாயில் படித்தேன். நான் கராச்சியில் வசிக்கவில்லை' என்று அவர் தெரிவித்திருந்தார். 1956 ஆம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி இந்தியாவின் தலைமைச் சொத்துக் காப்பாளரிடம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், தான் கராச்சியில் தற்காலிகமாக வசிப்பவர் என்று அவர் அறிவித்தார். 'மனுதாரர் வயது வந்தவர்; தனது சொந்த விவகாரங்களுக்குச் சட்டப்படி பொறுப்பேற்கக்கூடியவர். அவரது பெற்றோர் கராச்சியில் வசித்தார்கள் என்பதற்காகவும், அவருக்குத் திருமணம் அங்கு நடைபெற்றது என்பதற்காகவும், கராச்சியே அவரது நிரந்தர வசிப்பிடம் என்று முடிவு செய்ய முடியாது'என்று கூறினார். நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி எழுதிய ஏ.ஜே. நூரானி, அந்த மேல்முறையீட்டில், "மனுதாரர் இந்தியக் குடிமகனாக, இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் சென்றார் என்பதையும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இந்தியக் குடிமகனாகவே இருந்தார் என்பதையும் மதிப்பிற்குரிய சொத்துக் காப்பாளர் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். மனுதாரர் வயது வந்த பிறகு ஏதோ ஒரு கட்டத்தில் கராச்சியைத் தனது நிரந்தர வசிப்பிடமாக ஏற்றுக்கொண்டார் என்று, பதிவில் எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு செய்ததில் சொத்துக் காப்பாளர் தவறு செய்துள்ளார்"என்று குறிப்பிட்டதாக எழுதியுள்ளார். '1957 செப்டம்பர் 11-ம் தேதி, தன்னைச் சொத்தை விட்டுச் சென்றவர் என்று கருதி மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாதவை என்று அறிவிக்கக் கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.' ஏ.ஜே. நூரானியின் கூற்றுப்படி, அதே 1957-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் குழுவில் பூட்டோ உறுப்பினரானார். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் பொது சபைக் கூட்டத்தொடர் தொடங்கும். 1958 ஏப்ரலில், ஜெனீவாவில் நடைபெற்ற கடல் சட்டம் தொடர்பான மாநாட்டில் பாகிஸ்தான் குழுவுடன் அவர் பங்கேற்றார். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி, தனது மேல்முறையீட்டைத் திரும்பப் பெற அனுமதி கோரி பூட்டோ இந்திய உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். அதில், 'மனுதாரர் தற்போது கராச்சியில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கியுள்ளார். இந்த மதிப்பிற்குரிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 1957-ம் ஆண்டின் மேல்முறையீட்டு எண் 489-ஐ இனி தொடர அவர் விரும்பவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார். 1958ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி, மேல்முறையீட்டைத் திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த அனுமதி கிடைப்பதற்குச் சில நாட்களுக்கு முன்புதான், ராணுவ ஆட்சியாளர் அயூப் கானின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஏ.ஜே. நூரானியின் கூற்றுப்படி, பாகிஸ்தானில், 1955-ம் ஆண்டின் கோரிக்கைகள் பதிவு சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி பூட்டோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1956-ம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார். "பாகிஸ்தானில் தாக்கல் செய்த கோரிக்கையில், பம்பாயில் இருந்த அஸ்டோரியா ஹோட்டலின் மதிப்பை ரூ.12 லட்சமாகவும், வீட்டின் மதிப்பை ரூ.14 லட்சமாகவும் பூட்டோ குறிப்பிட்டிருந்தார். எனினும், ஹோட்டலுக்கான அவரது கோரிக்கையை ரூ.39.3 லட்சம் எனக் கோரிக்கைகள் அதிகாரி உறுதிப்படுத்தினார். மற்ற சொத்துகளைப் பொறுத்தவரை, ரூ.14 லட்சம் மதிப்பிலான பத்திரங்களுக்குப் பூட்டோ உரிமையுடையவர் என்று அவர் அறிவித்தார். இதை எதிர்த்து பூட்டோ துணைக் கோரிக்கைகள் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். 1956 அக்டோபர் 6-ம் தேதியிட்ட தனது உத்தரவில், இழப்பீட்டை நிர்ணயிப்பதற்கான ஹோட்டலின் மதிப்பை ஆணையர் ரூ.99.7 லட்சமாக உயர்த்தினார்." பட மூலாதாரம், Getty Images ஆனால், பூட்டோ கோரிக்கைகள் ஆணையரிடம் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அரசாங்கம் அங்கீகரித்த திருத்தப்பட்ட கணக்கீட்டு முறையின்படி, சொத்தின் மூலதன மதிப்பை ஆணையர் ரூ.44,30,400 என நிர்ணயித்தார். இந்த முறையில், 1946-ம் ஆண்டின் மொத்த ஆண்டு வாடகை 40-ஆல் பெருக்கப்பட்டு சொத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டது. இந்த இறுதி உத்தரவு 1957 செப்டம்பர் 18-ம் தேதி பிறப்பிக்கப்பட்டதாக ஏ.ஜே. நூரானி எழுதுகிறார். இந்திய உச்ச நீதிமன்றத்தில் பூட்டோ மேல்முறையீடு செய்த சரியாக ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியக் குடிமகனாக அதே சொத்தின் மீதான தனது உரிமைகளை அவர் அங்கு வலியுறுத்திக்கொண்டிருந்தார். அதே நேரத்தில், பாகிஸ்தானில் அந்நாட்டுக் குடிமகனாக அந்தச் சொத்துக்கான இழப்பீட்டையும் கோரிக் கொண்டிருந்தார். 1967 ஆம் ஆண்டு, அயூப் கானின் அமைச்சரவையிலிருந்து பூட்டோ விலகிய ஓராண்டுக்குப் பிறகு, அவரது குடியுரிமை விவகாரம் தேசியப் பேரவையில் விவாதப் பொருளானது. ஆனால், அதற்கு முன்பே, 1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி தனது நாட்குறிப்பில் அயூப் கான் பின்வருமாறு எழுதியிருந்தார். 'இந்தியாவிலிருந்து சில ஆவணங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. 1958-ம் ஆண்டு வரை பூட்டோ தன்னை இந்தியக் குடிமகனாக அறிவித்துக்கொண்டதையும், கராச்சியில் தற்காலிகமாக மட்டுமே வசிப்பதாகக் கூறியதையும் அவை காட்டுகின்றன. இதை மேலும் உறுதிப்படுத்துமாறு நான் கேட்டுள்ளேன். இந்த மனிதர் எவ்வளவு கொள்கையற்றவர், நேர்மையற்றவர் என்பதை இது காட்டுகிறது.' 1967 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியிட்ட அயூப் கானின் நாட்குறிப்பில், 'நாடாளுமன்ற கீழவையில் ஒரு சிக்கலான கேள்வி எழுப்பப்பட்டது. 1958-ம் ஆண்டு அமைச்சராகும் வரை, பூட்டோ கராச்சியில் வசிக்கும் இந்தியக் குடிமகன் என்று நீதிமன்றங்களில் அறிவித்துவந்தார். இந்தியாவில் அவரது பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துக்கான இழப்பீட்டைப் பெறுவதே இதன் நோக்கமாக இருந்தது. உண்மையில், சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்காக அவர் தனது மனசாட்சியை விற்றுக்கொண்டிருந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, இந்தியச் செய்தித்தாள்களில் வெளியானபோது தான் இதைப் பற்றி அண்மையில் அறிந்துகொண்டோம்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில நாளிதழான 'டான்' வெளியிட்ட செய்தியின்படி, '1958-ம் ஆண்டு அமைச்சராகும் வரை இசட்.ஏ. பூட்டோவின் குடியுரிமை நிலை குறித்த விவகாரம், இன்று ஜூன் 30-ம் தேதி கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற கீழவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசுத் தரப்பு உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப்-உர்-ரஹ்மான் பண்டாரி, இந்த விவகாரத்தை எழுப்பினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து துணைக் கேள்விகளை எழுப்பியதற்குப் பதிலளித்த தகவல் துறை அமைச்சர் கவாஜா ஷஹாபுதீன், தொடர்புடைய ஆவணங்களின்படி, முதற்கட்டமாகப் பார்க்கும்போது, 1958-ம் ஆண்டு வரை பூட்டோ பாகிஸ்தானில் தன்னைப் பாகிஸ்தான் குடிமகனாகவும், இந்தியாவில் இந்தியக் குடிமகனாகவும் அறிவித்து வந்ததாகத் தெரிகிறது என்றார். இந்தக் கட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் மீண்டும் உரக்கக் கூறினர்'என்றார். 'பாகிஸ்தான் அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான சுல்பிகர் அலி பூட்டோவின் இந்தியக் குடியுரிமை குறித்து இந்திய அமைச்சர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையைப் பற்றி அவருக்குத் தெரியுமா?' என்று பண்டாரி கேட்டிருந்தார். இதற்கு நாடாளுமன்றச் செயலர் அப்துல் அவல் போயா, 'ஆம்' என்று பதிலளித்தார். அவர் அவையில் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், '1965 நவம்பர் 19-ம் தேதி மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதிலளித்தபோது, அப்போதைய அகதிகள் துறை அமைச்சர் தியாகி, கைவிடப்பட்ட சொத்தைக் கைப்பற்றியிருந்த சொத்துக் காப்பாளர் அதைத் திருப்பித் தரக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் தொடர்பாக, இசட்.ஏ. பூட்டோ தான் ஓர் இந்தியக் குடிமகனாக இருந்ததாகவும், எப்போதும் இந்தியக் குடிமகனாகவே இருந்ததாகவும் கூறியிருந்தார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 'பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சராக ஆன பிறகு, 1958 ஆம் ஆண்டில் தான் பாகிஸ்தானில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான இறுதி முடிவை பூட்டோ எடுத்தார் என்றும், சொத்துக் காப்பாளரின் முடிவுக்கு எதிராகத் தான் தாக்கல் செய்த மேல்முறையீட்டைத் திரும்பப் பெறக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார் என்றும் தியாகி கூறினார்.' சல்மான் தசீர் தனது 'பூட்டோ, ஒரு அரசியல் வாழ்க்கை வரலாறு' (Bhutto, A Political Biography) என்ற நூலில், 1965 ஆம் ஆண்டு இந்தியாவின் அகதிகள் மறுவாழ்வுத் துறை அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அப்போதைய பாகிஸ்தான் அரசு அவற்றை வலுவாக மறுத்ததாக எழுதியுள்ளார். "பம்பாயில் ஷா நவாஸ் பூட்டோவுக்குச் சொந்தமான ஒரு வீட்டை விற்றது தொடர்பாகவே இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வீடு அவரது மகன் சுல்பிகர் அலி பூட்டோவின் பெயரில் இருந்தது. அப்போது பூட்டோ வயது குறைந்தவராக இருந்ததால், அந்த வீட்டை விற்றதன் மூலம் கிடைத்த தொகையை அவர் நீதிமன்றத்தில் செலுத்தினார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பூட்டோ அமெரிக்காவுக்குச் சென்றார். 1949 ஜூலை 6-ம் தேதி, கைவிடப்பட்ட சொத்துகள் சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவின்படி, அவர் கைவிடப்பட்ட சொத்தின் உரிமையாளர் என்று அறிவிக்கப்பட்டார். இதன் பொருள், தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக அவர் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தான் விண்ணப்பிக்க முடியும் என்பதாகும். "அந்தக் காலத்தில் பெரும்பாலானோர் சென்றதைப் போலவே, பூட்டோவும் 'பிரிட்டிஷ் இந்திய' கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். எனவே, அவரைக் கைவிடப்பட்ட சொத்தின் உரிமையாளராக அறிவிக்க இந்திய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று அவர் வாதிட்டார். தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக அவர் மேற்கொண்ட சில தவறான முயற்சிகள், பிற்காலத்தில் அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான பல அறிக்கைகளை வெளியிடுவதற்கு வழிவகுத்தன. 'அந்த அறிக்கைகளில் ஒன்று இதுதான்: மனுதாரரின் பெற்றோர் கராச்சியில் வசித்தார்கள் என்பதையும், மனுதாரருக்கும் அங்கு திருமணம் நடைபெற்றது என்பதையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் எந்த நேரத்திலும் மனுதாரரின் வசிப்பிடம் கராச்சியாக இருந்தது என்று முடிவு செய்ய முடியாது.' பட மூலாதாரம், Getty Images சல்மான் தசீரின் கூற்றுப்படி, அதே நேரத்தில், பாகிஸ்தானில் தன்னைப் பாகிஸ்தான் குடிமகனாக முன்னிறுத்திக்கொண்டு, சட்ட நடவடிக்கைகள் மூலம் தான் வைப்புச் செய்திருந்த பணத்தைத் திரும்பப் பெறவும் அவர் முயற்சி செய்துகொண்டிருந்தார். "பூட்டோவின் நடவடிக்கைகளில் மர்மமானதோ, தீய உள்நோக்கமோ எதுவும் இல்லை. அவர் வெறும் 20 வயதாக இருந்தபோது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருந்தார். எல்லை பிரிக்கப்பட்ட பிறகு, மறுபுறம் விட்டுச் செல்லப்பட்ட சொத்துகள் தொடர்பாகப் பாகிஸ்தான் குடிமக்களுக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் இடையே இதுபோன்ற சிக்கலான சட்டப் போராட்டங்கள் பொதுவானவையாக இருந்தன. இருப்பினும், இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அவர் விளக்க வேண்டியிருந்தது. தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் சிந்துவில் நீண்டகாலமாக வசித்து வந்த வரலாறு இருப்பதாக அவர் தனது தரப்பு விளக்கத்தில் கூறினார். இந்தியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தாலும், 1949 ஜூலையில் அவர் பாகிஸ்தான் கடவுச்சீட்டைப் பெற்றிருந்தார்." 1967 நவம்பர் 30-ம் தேதி, பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை நிறுவினார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவன உறுப்பினரான ரஃபி ரஸா, தனது 'சுல்பிகர் அலி பூட்டோ மற்றும் பாகிஸ்தான், 1967-1977' (Zulfiqar Ali Bhutto and Pakistan, 1967-1977) என்ற நூலில், '1965 போருக்குப் பிறகு இந்திய நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை, அயூப் கானின் தகவல் துறை அமைச்சர் பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையில் மீண்டும் கூறினார். அமைச்சரான பிறகு, 1958 நவம்பரில் இந்தியக் குடியுரிமையின் அடிப்படையில் பம்பாய் சொத்து மீதான தனது கோரிக்கையை பூட்டோ திரும்பப் பெற்றார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு' என்று எழுதியுள்ளார். "1967 ஜூலை 2-ம் தேதி, 'வருத்தமளிக்கும் வெளிப்பாடுகள்' என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தில் 'டான்' நாளிதழும் இந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறியது. நாடாளுமன்றச் சிறப்புரிமையின் கீழ் சட்டப் பாதுகாப்பு இருந்ததால், குற்றச்சாட்டுகளை மறுத்து விரிவான பதில் ஒன்றை வெளியிடவும், அவதூறு பரப்பியதற்காக 'டான்' நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட பல வழக்கறிஞர்கள் மறுத்துவிட்டனர். நான் அந்த நாளிதழுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பி, குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறவும் இழப்பீடு வழங்கவும் கோரினேன்." "பாகிஸ்தான்-இந்தியா உறவுகள் தொடர்பாக இசட்.ஏ. பூட்டோ கொண்டிருந்த நிலைப்பாடு, பாகிஸ்தான் கடவுச்சீட்டைப் பெற்றது, இந்தியாவில் அவர் நடத்திய வழக்கு, பாகிஸ்தானில் சொத்துக்கான இழப்பீட்டைக் கோரியது ஆகிய அனைத்தும் ஆவணங்களில் பதிவாகியுள்ள விவரங்கள் என்றும், அவை இன்னமும் அந்தப் பதிவுகளின் ஒரு பகுதியாக உள்ளன என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது." "நீண்டகால அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தோம்." பின்னர், பூட்டோவுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கில் அவரது குடும்பத்தினரின் ஆயுதக் கையிருப்புக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை, பூட்டோவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட முதல் அரசியல் வழக்குக்கு வழிவகுத்தது. பட மூலாதாரம், Getty Images 1967 ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான 'தி இந்து' நாளிதழின் செய்தியின்படி, இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது, முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சுல்பிகர் அலி பூட்டோவின் விவகாரம் 'இரட்டை விசுவாசம்' தொடர்பானது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எம்.சி. சாக்லா தெரிவித்தார். "ஹேம் பருவா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர், பூட்டோ இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவார் என்று தாம் நினைக்கவில்லை என்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்களான நாத் பாய், சமர் குஹா மற்றும் எம்.எல். சோந்தி ஆகிய மேலும் மூவர், 'தவறான பாதைக்குச் சென்ற மகன்' திரும்பி வந்தால் அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்குமா என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர், பூட்டோ திரும்பி வருவது என்பது கற்பனையான சூழல் என்றார். இருப்பினும், அவர் திரும்பி வந்தால், நாட்டின் குடியுரிமைச் சட்டமே அவரது விவகாரத்தைத் தீர்மானிக்கும்"என்றார். 'கடந்த காலத்தில் பேசியதைப் போலவே, இந்தியாவைப் பற்றி 'முரண்பாடான மற்றும் விஷம் தோய்ந்த' மொழியில் பூட்டோ அண்மையில் பேசியிருப்பதை அவரது உரைகள் காட்டுவதாகவும் சாக்லா தெரிவித்தார். பூட்டோ தனது குடியுரிமையை மாற்றிக்கொள்ள முடிவு செய்தால், பம்பாயில் உள்ள அவரது சொத்துகளைத் திரும்ப வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்குமா என்று நாத் பாய் கேட்டார். அதற்கு, 'இல்லை,'என்று வெளியுறவு அமைச்சர் தயக்கமின்றிப் பதிலளித்தார். பிரதமரிடம் பதில் கோரியபோது, இந்திரா காந்தியும் எதிர்மறையாகத் தலையசைத்தார். 1977ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பூட்டோவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பிறகு, சுல்பிகர் பூட்டோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தொடர்ச்சியான வெள்ளை அறிக்கைகள் மூலம், ஜியா-உல்-ஹக்கின் அரசாங்கம் சுல்பிகர் பூட்டோவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றதாக ஸ்டான்லி வோல்பர்ட் எழுதுகிறார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தங்கியிருந்த காலம் முழுவதும், பூட்டோ தன்னை ஓர் இந்தியக் குடிமகனாகவே தொடர்ந்து கருதிவந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் தெளிவாகத் தவறானவை. "தாயகம் திரும்பிய பிறகு, தனது தந்தையின் பம்பாய் சொத்துக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முயன்றார். ஆனால், அமெரிக்காவில் இருந்தபோது, பாகிஸ்தானைப் பற்றியும் நவீன உலகில் இந்த நாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தனது நண்பர்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் எடுத்துரைப்பதில் அவர் அதிக நேரத்தைச் செலவிட்டார்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை