படம்: ர. செல்வமுத்துகுமார் திருச்சி: “முதல்வருக்கு காவல்துறையை மட்டுமல்ல தன் கட்சிக்காரர்களையும் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை” என திமுக மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் குற்றம்சாட்டியுள்ளார். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு, விலைவாசி உயர்வினை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய, வடக்கு மாவட்டம் மற்றும் கிழக்கு தொகுதி மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்து பேசியதாவது: தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தூத்துக்குடியில் மட்டும் ஒரு வாரத்தில் 9 படுகொலைகள் நடந்துள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இதுவரை இதுபோல் தமிழகத்தில் நடந்ததில்லை. போதைப் பொருள் பட்டப்பகலில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இதுவரை அந்தச் சிறுமியை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. முதல்வருக்கு காவல் துறையை கண்காணிக்க திராணியில்லை. தவெகவினர் தன் சொந்தக் கட்சிப் பெண்களையே பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள். முதல்வரால் தவெகவினரை கூட தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை. ஒரு அரசு நேர்மறையாக இருக்க வேண்டும், தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இரண்டையும் தவெக அரசு செய்வதில்லை” என்று அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் கவிதா, துறையூர் கிருபா, ரம்யா பேகம், கவிதா, விஜயா ஜெயராஜ், துணை மேயர் திவ்யா தனக்கோடி, திவ்யா கலைச்செல்வி, வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தவெக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
“காவல்துறையை மட்டுமல்ல, கட்சிக்காரர்களையும் கட்டுப்படுத்த முடியாதவர் முதல்வர்” - திமுக விமர்சனம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗