கடந்த 2023-ஆம் ஆண்டு ராமாயணத்தை தழுவி வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தின் மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு சில நாட்களிலேயே மீண்டும் ராமாயணத்தை திரைப்படமாக உருவாக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அந்த அளவுக்கு இந்தியாவின் மிகப் பெரிய இதிகாசமான ராமாயணத்தை மோசமான கிராபிக்ஸ், ஆன்மா இல்லாத திரைக்கதை என ‘ஆதிபுருஷ்’ வழியே தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குதறி வைத்தது பாலிவுட். இப்படியான சூழலில் மிகப் பெரிய பொருட்செலவில், ஹாலிவுட் கிராபிக்ஸ் வல்லுநர்களின் பங்களிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கிறது ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம். கதை ஏற்கெனவே இந்திய மக்களுக்கு பரிச்சயமானதுதான் என்றாலும், கதைகள், சீரியல், திரைப்படம், கார்ட்டூன் என பல வகைகளில் பார்த்திருந்தாலும், அதை மீண்டும் ஒருமுறை பிரம்மாண்டமாக டிஸ்னி, மார்வெல் படங்களில் மட்டுமே பார்த்து வியந்த தத்ரூப கிராபிக்ஸ் வழியே தந்து வெற்றி பெற்றிருக்கிறார் நிதேஷ் திவாரி. உலகைக் காக்க விஷ்ணுவின் அவதாரமாக ராமன், பூமியில் பிறப்பது முதல், ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க ராமன் போருக்குத் தயாராகும் தருணம் வரை இந்த முதல் பாகம் விவரிக்கிறது. இந்தப் பயணத்தில் பறக்கும் யானைகள், பாயும் காண்டாமிருகங்கள், சிறுத்தைகள் பூட்டிய தேர்கள் மற்றும் உருமாறும் அரக்கர்கள் என தொழில்நுட்பத்தின் அனைத்து மாயாஜாலங்களும் திரையில் அட்டகாசமாக கொண்டுவரப்பட்டுள்ளன. கதையின் ராவணன் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே கதையை தொடங்கியுள்ளார் இயக்குநர். குபேரனின் படையை ராவணன் வீழ்த்தும் தொடக்கக் காட்சியிலேயே அவரது ஆற்றல் நிறுவப்பட்டு, மிகப் பெரிய ஹைப் உருவாகி விடுகிறது. அதன்பிறகு படம் முழுக்க ராவணனாக வரும் யஷ்ஷின் ‘ராவண’ தாண்டவம்தான். ‘டாக்ஸிக்’ படத்தில் விட்டதை மனிதர் ஒட்டுமொத்தமாக இதில் பிடித்துவிட்டார். அவர் வரும் காட்சிகள் அனைத்திலும் விசில் பறக்கிறது. ராமனாக வரும் ரன்பீர் கபூர், தனது சொந்த பிம்பம் கதாபாத்திரத்தை மறைத்துவிடாத வண்ணம் மிகவும் கட்டுப்பாடான, அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ட்ரெய்லரின்போது சமூக வலைதளங்களில் வெளியான கேலிகளுக்கு பதிலளிக்கும் அவரது நடிப்பு மின்னுகிறது. கதாபாத்திரத்துக்குத் தேவையான சாந்தத்தையும், வீரியத்தையும் நேர்த்தியாகக் கொண்டுவந்துள்ளார். அதேபோல சமூக ஊடகங்களில் தென்னிந்திய நடிகை என்பதற்காகவும், உருவத்தை கொண்டும் கேலி, கிண்டலை எதிர்கொண்ட சாய் பல்லவியும் தனது நடிப்பால் அவற்றை உடைத்துள்ளார். ஆஹோ, ஓஹோ என்ற அளவுக்கான நடிப்பு என்று சொல்லமுடியாவிட்டாலும் தனது கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து அதற்கு சிறப்பாகவே நியாயம் செய்துள்ளார். அனுமன் கதாபாத்திரத்துக்கு சன்னி தியோல் பெயரளவில் போஸ்ட் கிரெடிட் காட்சியில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்த பாகத்தில் அவர் திரையில் தோன்றவில்லை என்பது ஏமாற்றமே. பங்கஜ் குமார் மற்றும் மகேஷ் லிமயேவின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு ஃப்ரேமையும் ஒரு கலைப் படைப்பாக மாற்றியுள்ளது. சர்வதேச பார்வையாளர்களுக்கு எளிதில் புரிய வேண்டும் என்பதற்காகவே, கதையின் ஒவ்வொரு சிறிய விவரமும் நேரடியாகவும், எந்தவொரு சிக்கல்களுமின்றியும் விவரிக்கப்பட்டுள்ளது சிறப்பு. குறிப்பாக படத்தில் முதல் காட்சியிலிருந்தே வாய்ஸ் ஓவரில் தேவர்கள் vs அசுரர்கள் கதை சொல்லப்பட்ட விதமும் அதை தொடர்ந்து கதைக்குள் படம் நேரடியாக நுழைந்த விதமும் புத்திசாலித்தனமான ஐடியா. ‘ஆதிபுருஷ்’ தவறவிட்ட இடம் இங்கேதான். அடுத்து குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம். இதுவரை எந்த இந்திய திரைப்படத்திலும் இப்படியொரு நேர்த்தியான, நுணுக்கமான கிராபிக்ஸை பார்த்திருக்க முடியாது. ‘நார்னியா’, ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ போன்ற படங்களில் இடம்பெறும் காட்சிகளுக்கு நிகரான தத்ரூபத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராவணனுக்கும் ஜடாயுக்கும் இடையிலான சண்டைக் காட்சி பெரிய திரையில் மட்டுமே கண்டு ரசிக்க வேண்டிய அற்புதம். அந்தக் காட்சியை ஆறரை ஆண்டுகள் உருவாக்கியதாக இயக்குநர் கூறியிருந்தார். அதன் காரணம் அந்தக் காட்சியை பார்க்கும்போது புரிபடுகிறது. ஹான்ஸ் ஸிம்மர் - ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை, படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. ‘ஜெய் ஜெய் ராம்’, ‘மங்கள வண்ணமே’ பாடல்கள் காதுகளுக்கு இனிமை. இது ராமாயணத்தை உலக அரங்குக்குக் கொண்டு செல்லும் இந்தியாவில் முயற்சி என்றாலும், இந்தியர்களின் மனதுக்கு நெருக்கமான, மிகவும் பழக்கப்பட்ட இந்த கதையில் இருக்கும் உணர்வுபூர்வமும் ஆழமும் விஎஃப்எக்ஸ் என்ற ஆடம்பரத்துக்குள் தொலைந்துபோய்விட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது. ஓவர்-தி-டாப் பிரம்மாண்டம், வியக்கவைக்கும் காட்சி அமைப்புகளும் தொடக்கத்தில் பிரமிக்க வைத்தாலும், போகப்போக ஒரு கட்டத்துக்கு மேல் திரைக்கதையின் தொய்வால் ஒருவித சலிப்பையே ஏற்படுத்துகின்றன. இப்படம் ஒரு புராணக் காவியத்தை உலகத் தரத்திலான காட்சி அமைப்புகளோடு காட்சிப்படுத்தியிருக்கும் ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்ப சாதனை என்பதில் மாற்றமில்லை. ஆனால், நுட்பமான உணர்வுகளையும், கதையின் அடிப்படையான தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான மோதலை ஆழமாகப் பேசத் தவறி, பல இடங்களில் வெறும் மேலோட்டமான காட்சி ஜோடனையாக மட்டுமே நின்றுவிடுகிறது. இடைவேளைக்கு முன்பாக ராமர் வனவாசம் செல்லும் காட்சிகள் எல்லாம் ஒரு பெரிய பட்ஜெட் மெகா சீரியலைப் போல நீள்கின்றன. யஷ்ஷின் திரை ஆளுமையும், கண்களைப் பறிக்கும் காட்சி அமைப்புகளும் பெரிய திரையில் பார்த்து ரசிக்கக்கூடிய அனுபவத்தைத் தந்தாலும், ராமாயணம் என்ற இதிகாசத்தை கிராபிக்ஸை தாண்டி, பார்வையாளர்களின் மனதில் ஆழமாக பதியவைக்கும்படி இன்னும் உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கலாம். எனினும் ஒரு திரைப்படத்துக்கு எது தேவையோ அந்த பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதை முடிந்த அளவுக்கு சுவாரசியமாக சொல்லி இறுதியில் ஒரு நிறைவான உணர்வை தந்துவிடுகிறது 'ராமாயணா'
Ramayana: விமர்சனம் - யஷ் ஆளுமையில் பிரம்மாண்ட காட்சி அனுபவம் எப்படி?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗