சின்னதிரை நடிகை ஜனனி அசோக் குமார் தன் மீதான குற்றச்சாட்டுக்கு அளித்துள்ள விளக்கம் பற்றி... சின்னதிரை நடிகை ஜனனி அசோக் குமார் - படம்: இன்ஸ்டா / ஜனனி அசோக் குமார் சின்னதிரை நடிகை ஜனனி அசோக் குமார் தன் மீதான குற்றச்சாட்டுக்கு, “ரூ.634 கோடி ஊழலில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இதனை தள்ளுபடி செய்ய கே.என். நேரு தரப்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த ஊழலில் சின்னதிரை நடிகைகளின் பெயர்களும் இருப்பதாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து நடிகை ஜனனி அசோக் குமார் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாள்களாக என் பெயரைத் தொடர்பு படுத்தி எக்ஸ், இன்ஸ்டாகிராமில் பரவும் ரூ. 634 கோடி ஊழல் கதைகள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன். நான் இதில் ஈடுபடவில்லை. நான் எப்போதும் அரசியல் சாயம் இல்லாமலே இருக்கிறேன். யாருக்கும் ஆதரவும் இல்லை, யாருடனும் பழக்கமும் இல்லை. நான் வாழும் வாழ்க்கைக்கும் என்னைப் பற்றி பரவும் வதந்திகளும் உண்மையில்லை. உண்மைத் தன்மை தெரியாமலும் போதுமான ஆதாரங்கள் இல்லாமலும் எப்படி குற்றம் சுமத்துகிறார்கள்? இதில் நியாயம் எங்கே இருக்கிறது? என்பதைக் கேட்க விரும்புகிறேன். பத்திரிகை துறை என்பது துல்லியமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எனக்கு காயத்தை ஏற்படுத்துகிறது. விசாரணைக்கு அழைப்பது தவறு செய்ததற்கான குற்றம் ஆகாது. நான் இவ்வளவு ஆண்டுகளாக திரைத்துறையில் எனக்கென ஒரு நன்மதிப்பை யாருடைய ஆதரவும் இல்லாமல் உருவாக்கியுள்ளேன். பொய்யான செய்திகள் மக்களை நம்ப வைக்கும். இதற்கெல்லாம் விளக்கம் சொல்வதே எனக்கு கவலை அளிக்கிறது. உண்மைத்தன்மை தெரியாமல் பெண் என்றதும் உடனடியாக நான் தவறிழைத்து இருப்பேன் என மக்கள் நம்புவதுதான் எனக்கு வருத்தமளிக்கிறது. சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் உண்மைத் தன்மை தெரிந்து செய்திகளையோ பதிவுகளையோ வெளியிடுங்கள். தவறானவற்றை நீக்குங்கள். குற்றச்சாட்டுகளை உண்மை என்பதுபோல் மாற்றாதீர்கள். இந்த இக்கட்டான நேரத்தில் என்னுடன் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு, கருணை எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது எனக் கூறியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ. 634 கோடி ஊழலில் தொடர்பா? நடிகை ஜனனி அசோக் குமார் விளக்கம்!