சீரடைந்து வந்ததாகத் தெரிந்த இந்தியா - சீனா உறவு குறித்து மீண்டும் கவலை எழுவது ஏன்? அதிகாரி கூறியது என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
சீரடைந்து வந்ததாகத் தெரிந்த இந்தியா - சீனா உறவு குறித்து மீண்டும் கவலை எழுவது ஏன்? அதிகாரி கூறியது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இந்தியா–சீனா இடையிலான உறவுகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாகத் தெரிந்தது. எனினும், இமயமலைப் பகுதியில் நீண்டகாலமாக நீடிக்கும் எல்லைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல தசாப்தங்களாகச் சீரற்ற நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள், 2020-ஆம் ஆண்டு மோதல்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் சுமூகமான சூழல், வெளிப்படையாகத் தெரிவதைவிட மேலும் பலவீனமானதாக இருக்கலாம் என்பதை உணர்த்துகின்றன. இந்தியா–சீனா எல்லைப் பகுதியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனப் படைகள் பெருமளவில் மீண்டும் ஊடுருவியதாகவும், இந்தியாவுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் பகுதிக்குள் பல கிலோமீட்டர் தொலைவு வரை கூடாரங்களை அமைத்ததாகவும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து புதிய கவலைகள் எழுந்துள்ளன. இந்தோ–திபெத்திய எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் சிங் கபூர் வெளியிட்ட இந்தக் கருத்துகள், இந்தியாவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பொதுவாக, பதவியில் இருக்கும் அதிகாரிகள் இத்தகைய கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிப்பது அரிதிலும் அரிது. எல்லை தொடர்பான உணர்வுபூர்வமான விவகாரங்கள், மத்திய அரசின் பாதுகாப்பு அல்லது வெளியுறவு அமைச்சகங்கள் மூலமாகவே கையாளப்படுவது வழக்கம். ராஜஸ்தானில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய இந்தோ–திபெத்திய எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் சிங் கபூர், வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும், அவை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய மோதல்களின்போது, ஆரம்பத்தில் இரு தரப்புப் படைகளும் பின்வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ஆனால், சில நாட்களுக்குப் பிறகு சீனப் படைகள் அதிக எண்ணிக்கையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்து, "இந்தியா தனது உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control - LAC) எனக் கருதும் கோட்டிலிருந்து சுமார் ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தொலைவுக்குள்" கூடாரங்களை அமைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 'உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு' என்பது இந்தியா மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பிரிக்கும் கோடாகும். எனினும், இந்தக் கோடு இரு நாடுகளாலும் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை. சுமார் 3,440 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தச் சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக சிக்கல்கள் தொடர்கின்றன. அருணாச்சலப் பிரதேசம் தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கோருகிறது. ஆனால், அந்த மாநிலம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று வலியுறுத்தும் இந்தியா, சீனாவின் இந்த உரிமைகோரலைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இந்த எல்லைப் பிரச்னை, 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா எதிர்கொண்டு வரும் நீண்டகாலச் சவால்களில் ஒன்றாகும். இந்தப் பிரச்னை 1962-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படவும் வழிவகுத்தது. அந்தப் போரில் இந்தியா கடுமையான தோல்வியைச் சந்தித்தது. ஆறு தசாப்தங்களுக்கு மேலாகியும், எல்லையின் பெரும்பகுதி இன்னும் முறையாக வரையறுக்கப்படவில்லை. இரு நாடுகளும் ஒரே பகுதிகளுக்கு உரிமை கோரும் நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இமயமலைப் பகுதியின் கரடுமுரடான நிலப்பரப்பும் இந்தப் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறது. ஆறுகளின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள், ஏரிகள், பனிமூடிய மலைச்சிகரங்கள் போன்ற இயற்கை அம்சங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைத் துல்லியமாக வரையறுப்பதை கடினமாக்கியுள்ளது. இதன் காரணமாக, இரு நாடுகளின் படைகளும் எல்லைப் பகுதியில் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல்கள் உருவாகின்றன. இத்தகைய சந்திப்புகள் சில நேரங்களில் வன்முறை மோதல்களுக்கும், இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திரப் பதற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கின்றன. பட மூலாதாரம், Anbarasan Ethirajan/BBC இந்தியா–சீனா இடையிலான எல்லைப் பகுதி மலைகள், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை அமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை முழுமையாகவும் துல்லியமாகவும் வரையறுக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே அண்மைக் காலங்களில் ஏற்பட்ட மிக முக்கியமான மோதல், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்தது. இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில், குறைந்தது 20 இந்திய வீரர்களும் நான்கு சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். 1975-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். இந்த மோதலைத் தொடர்ந்து, இந்தியா தனது நிலப்பகுதியைச் சீனாவிடம் இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த மோதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டதுடன், வர்த்தகம் மற்றும் பயணங்களும் முடங்கின. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 2024-ஆம் ஆண்டில் எல்லைப் பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதையடுத்து, நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கவும், மோதல்களுக்குப் பிறகு விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்தன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் செப்டம்பர் மாதம் இந்தியா வந்தார். இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இத்தகைய முன்னேற்றங்கள், இந்தியா–சீனா உறவுகள் முழுமையாகச் சீரடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய மோதல் குறித்த தகவல்கள், எல்லைப் பகுதியில் உண்மையில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன. இந்தோ–திபெத்திய எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் சிங் கபூரின் கருத்துகளைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பிரதமர் மோதி சீனாவுக்கு மீண்டும் சலுகைகளை வழங்குவதாகக் குற்றம் சாட்டியது. "இந்த முக்கியமான விவகாரம் குறித்து பிரதமரும் அவரது ஒட்டுமொத்த அரசாங்கமும் மௌனம் காக்கின்றன" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா தனது எல்லையாகக் கருதும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்குள் பல கிலோமீட்டர் தொலைவு வரை சீனப் படைகள் கூடாரங்களை அமைத்துள்ளதாக சத்ருஜீத் சிங் கபூர் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை இந்திய அரசு வெளிப்படையாக மறுக்கவில்லை. இதற்கிடையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த வாரம் கூறுகையில், "சீனப் படைகள் வழக்கமான ரோந்து நடைமுறைகளிலிருந்து விலகும்போது, எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது பதற்றமான சூழல் உருவாகிறது" என்றார். எல்லைப் பிரச்னைகள் தொடர்பான நிலுவையில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வு காண இரு நாடுகளும் ராணுவ மற்றும் தூதரக வழிகளில் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இதுகுறித்து கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை. மறுபுறம், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் சீனா "தொடர்ந்து உறுதியாகப் பின்பற்றி வருகிறது" என்றார். மேலும், "நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக எல்லைப் பகுதிகளில் வழக்கமான ரோந்து மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை" சீனா மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், LightRocket via Getty Images சத்ருஜீத் சிங் கபூரின் கருத்துகள், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் தீவிரமான ராணுவ நடவடிக்கைகள் குறித்து அரிதான ஒரு பார்வையை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் பல்வேறு இடங்களில் சீனா இத்தகைய சவாலான நடவடிக்கைகளில் ஈடுபடுவது நீண்டகாலமாகவே நடந்து வருகிறது" என்று இந்திய வெளியுறவு முன்னாள் செயலாளர் ஷியாம் சரண் பிபிசியிடம் தெரிவித்தார். 2000-ஆம் ஆண்டுகளின் மத்தியில், சீனாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளின் பல சுற்றுகளுக்கு அவர் தலைமை தாங்கியவர். இத்தகைய நடவடிக்கைகள் "உடனடியாகப் போர் மூளும் அளவுக்குப் பெரியவை அல்ல. ஆனால், எல்லைப் பகுதியில் புதிய சூழலையோ யதார்த்தங்களையோ உருவாக்கும் அளவுக்குப் போதுமானவை" என்று அவர் குறிப்பிட்டார். லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரு பகுதிகளிலும் சீனா தனது இருப்பை விரிவுபடுத்தி வருவதாகவும், இது எல்லைப் பதற்றத்தை அதிகரிப்பதாகவும் இந்திய எதிர்க்கட்சிகள் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டி வருகின்றன. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் ஓய்வுபெற்ற மூத்த கர்னலும், தற்போது பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவருமான ஜௌ போ, 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களிலிருந்து இந்தியாவும் சீனாவும் பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினார். "எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இரு தரப்பினரும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதல்கள் குறித்து சீன ஊடகங்கள் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா–சீனா இடையிலான எல்லைப் பதற்றம், இரு நாடுகளுக்கும் இடையே சிக்கலான பொருளாதார உறவுகள் நிலவும் சூழலில் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்தாலும், அவை முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகளாகத் தொடர்ந்து உள்ளன. கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 151 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இதில் சீனாவுக்குச் சாதகமான வர்த்தகச் சமநிலையே நிலவுகிறது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதி மட்டும் சுமார் 131 பில்லியன் டாலர்களாக இருந்தது. இயந்திரங்கள், அரியவகைக் காந்தங்கள், மின்சார வாகனங்களுக்கான மின்கலங்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு இந்தியா சீன இறக்குமதியைத் தொடர்ந்து சார்ந்துள்ளது. இந்தச் சார்பு காரணமாக, சீனாவுடனான பதற்றங்கள் எல்லைப் பகுதிகளைத் தாண்டியும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இந்தியத் தொழில்துறையிலும் உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். கடந்த வாரம், சுரங்கப் பாதைகள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் துளையிடும் இயந்திரங்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்தது. மெட்ரோ ரயில் மற்றும் நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த இயந்திரங்களுக்கான கட்டுப்பாடுகள், "தேசியப் பாதுகாப்பையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்காக" விதிக்கப்பட்டதாகச் சீனா தெரிவித்தது. இந்தக் கட்டுப்பாடுகள் இந்தியாவை மட்டும் குறிவைத்து விதிக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைப் பாதிக்கக்கூடும். நியூயார்க்கில் உள்ள அல்பானி பல்கலைக்கழகப் பேராசிரியர் கிறிஸ்டோஃபர் கிளாரி பிபிசியிடம் கூறுகையில், "இந்தியாவின் வளர்ச்சியைச் சிக்கலாக்கும் வகையிலேயே சீனா தனது கொள்கைகளை வகுத்துள்ளது. குறிப்பாக, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இந்தியா சில முக்கியத் திறன்களைப் பெறுவதைத் தடுப்பதும் இந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்தார். மின்சார வாகனங்கள், திறன்பேசிகள், காற்றாலைகள், மருத்துவ ஸ்கேனர்கள் உள்ளிட்டவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அரியவகைக் காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா கடந்த ஆண்டு கட்டுப்பாடுகளை விதித்தபோதும் இதேபோன்ற சிக்கல் ஏற்பட்டது. அந்த நடவடிக்கை இந்தியத் தொழில்துறைகளுக்குத் தற்காலிகமாக விநியோகத் தடைகளை ஏற்படுத்தியது. மேலும், முக்கிய மூலப்பொருட்கள் மீதான சீனாவின் கட்டுப்பாடு, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதையும் வெளிப்படுத்தியது. அரியவகைக் காந்தங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திறனை வளர்த்துக்கொள்ள இந்தியா தற்போது முயன்று வருகிறது. இருப்பினும், இந்தத் தொழில்துறையை உருவாக்கி விரிவுபடுத்துவதற்குக் கணிசமான காலமும் முதலீடும் தேவைப்படும். பட மூலாதாரம், Anbarasan Ethirajan/BBC சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, சீனாவுடனான பதற்றத்தின் தாக்கங்கள் அன்றாட வாழ்க்கையிலேயே நேரடியாகத் தெரிகின்றன. "எல்லைப் பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள், சீனாவின் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாகத் தங்களால் மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். இது புதிதல்ல; நீண்டகாலமாகவே இத்தகைய நிலை நீடித்து வருகிறது" என்று 'அருணாச்சல் டைம்ஸ்' இதழின் மூத்த செய்தியாளர் டோங்கம் ரீனா தெரிவிக்கிறார். இதனால் அப்பகுதி மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். வேட்டையாடவும் யாக் எனப்படும் மலைக் கால்நடைகளை மேய்க்கவும் கிராம மக்கள் வழக்கமாகச் செல்லும் பகுதிகள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது அங்கு செல்ல முடியும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த எல்லைப் பிரச்னை, இந்தியாவின் பரந்த மூலோபாயக் கணக்கீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால், எதிர்காலத்தில் இந்தியா–சீனா இடையே மோதல் ஏற்பட்டால், இந்தியாவுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா தயக்கம் காட்டக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவுடன் நேரடிப் போர் தொடங்குவதில் சீனாவுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், எல்லைப் பிரச்னையைத் தீர்க்காமல் தொடர்ந்து நீடிக்கச் செய்வது தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அந்நாடு கருதக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின் பொருளாதார மற்றும் ராணுவ வலிமை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எல்லைப் பிரச்னையில் நீண்டகால முட்டுக்கட்டை நீடிப்பது, எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று சீனா கணக்கிடக்கூடும். இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போதைய மோதல்கள் ஒரு முக்கியமான எச்சரிக்கையாக அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மேம்படுவதால் மட்டுமே, எல்லைப் பகுதியில் நீடித்த அமைதியும் நிலைத்தன்மையும் உறுதியாகிவிடாது என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை