“சில லட்சம் பேர் செய்த தவறு” - தவெக ஆட்சியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“சில லட்சம் பேர் செய்த தவறு” - தவெக ஆட்சியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை: “சினிமாவில் கதாநாயகனாக இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து, சில லட்சம் பேர் செய்த தவறு, ஒட்டுமொத்த மக்களையும் இப்போது பாதித்துக் கொண்டிருக்கிறது,” என்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக நாளை (அக்.31) சென்னையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதே போல மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சினிமாவில் கதாநாயகனாக இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து, சில லட்சம் பேர் செய்த தவறு, ஒட்டுமொத்த மக்களையும் இப்போது பாதித்துக் கொண்டிருக்கிறது. தவெக ஆட்சி அமைவதற்கு முன்னால், அக்கட்சியின் தலைவரும் இன்றைய முதல்வருமான விஜய் அனைத்துக் கூட்டங்களிலும் என்ன பேசினார்? ‘தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சரியில்லை; குழந்தைகள் - பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; போதைப் பொருட்களால் குற்றங்கள் நடக்கிறது’ என்று இதை மட்டும்தான் தொடர்ந்து பேசி ஆட்சிக்கு வந்தார். ‘கத்தி கத்தி’ பஞ்ச் டயலாக் பேசியவரின் ஆட்சியில் இன்றைக்கு என்ன நிலைமை? பட்டப்பகலில் முக்கியச் சாலைகளில் கொடூரக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடிப்பது என எல்லாமே சர்வசாதாரணமாக நடக்கிறது. சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட இந்த அரசின் மீது பயமில்லை. கிரிமினல்கள் இதை அவர்களுக்கான ஆட்சியாகக் கொண்டாடுகிறார்கள். தலைநகரான சென்னையிலேயே மயிலாப்பூர், அடையாறு, தரமணி போன்ற மிக மிக முக்கியப் பகுதிகளிலேயே கொலைகள் நடக்கின்றன. ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகள், காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வரும் வழியிலேயே அரிவாளால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள். நீதிமன்ற வளாகத்தின் எதிரிலேயே வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள். பல மாவட்டங்களில் இரட்டைக் கொலைகள் நடக்கின்றன. கொலை செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். புழல் சிறைச்சாலையில் இருந்தே கைதிகள் தப்பிச் செல்கிறார்கள். தேனி மாவட்டச் சிறைச்சாலையில் இருந்து ஒரே இரவில் 17 பேர் மெயின் கேட்டைத் திறந்து சாவகாசமாக தப்பித்திருக்கிறார்கள். நடுரோட்டில் கொலை செய்துவிட்டு, எந்தப் பதற்றமும் இல்லாமல் பைக் மற்றும் ஆட்டோக்களில் ஏறி குற்றவாளிகள் செல்கிறார்கள். இந்தக் காட்சிகளையெல்லாம் முதல்வர் பார்க்கிறாரா இல்லையா என்று கூட நமக்குத் தெரியவில்லை. இந்தச் செய்திகள் அவர் காதுக்குப் போகிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், தமிழகத்தில் இப்படி எதுவுமே நடக்காதது போலத்தான் அவருடைய செயல்பாடுகள் இருக்கின்றன. எல்லாக் கட்சிகளும் அறிக்கை விடுகிறார்கள்; கண்டனம் தெரிவிக்கிறார்கள்; போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், முதல்வரிடம் இருந்து எந்தவிதப் பதிலுமில்லை. இன்னும் சினிமா படப்பிடிப்பு காலத்தில் கேரவனுக்குள் சென்று மணிக்கணக்கில் உட்கார்ந்து கொள்வது போல, யாராலும் அணுக முடியாத நிலையில் அவர் இருக்கிறார். காவல்துறைக்கு முதல்வர்தானே பொறுப்பு? அவர் பதில் சொல்ல வேண்டுமா இல்லையா? அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமா இல்லையா? ஆனால், இது எதுவுமே நடப்பதில்லை. எல்லாத் துறைகளுக்கும் ஒரு சில அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள். அந்தப் பதிலும் பொறுப்பற்ற பதில்களாக இருக்கின்றன. ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும், எல்லாவற்றிற்கும் ‘திமுக, திமுக’ என்று சொல்வதுதான் இவர்களிடம் இருக்கும் ஒரே பதில். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்குப் பாதி குற்றச் சம்பவங்களில் தவெக கட்சிக்காரர்கள்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் எங்கும் செல்ல வேண்டியதில்லை; தன்னுடைய கட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவில் குறையும். அதாவது, பெண்களை தவெக காப்பாற்ற வேண்டியதில்லை; தவெக-விடம் இருந்துதான் பெண்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. பொதுவாக, எல்லாக் கட்சியிலும் ஒரு சில களைகள் இருக்கலாம். ஆனால், களைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாகப் போய் சேர்ந்திருக்கின்ற கட்சியாக இந்தத் தவெக இருக்கிறது. அதிலும், ‘மெத் பூபாலன்’ என்பவர் சில நாட்களுக்கு முன்னால் ஒன்றிய அரசின் டி.ஆர்.ஐ அமைப்பிடம் மாட்டியிருக்கிறார். தமிழகத்தை போதை உற்பத்தி மையமாக மாற்றி, உலகம் முழுவதும் ‘மெத்’ சப்ளை செய்வதுதான் இவருடைய வேலை. இவர் ஒரு தவெக நிர்வாகி. ஆனால், இந்தச் செய்தியை வெளியிட்டால் கொன்றுவிடுவோம் என்று தவெக ஒன்றியச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்குத் தொலைபேசியில் அழைத்து மிரட்டுகிறார். இதுதான் தூய சக்தியா? தவெக நிர்வாகியான மெத் பூபாலன் போதைப்பொருள் உற்பத்தி மூலமாகச் சம்பாதித்த பணம்தானே, நாகை மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் தவெக-வின் தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும்? அதனால்தான் பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார்களா? இதையெல்லாம் முறையாக விசாரிக்க வேண்டாமா? சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மட்டுமில்லாமல், வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலைவாசியும் உயர்ந்து மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ரேஷன் கடையில் சன்ன ரக அரிசி போடுகிறோம் என்று சொல்லி, ரேஷன் அரிசிக்குப் பாலிஷ் போட்டு ஏமாற்றுகிறார்கள். நியாயவிலைக் கடையில் மலிவு விலை வெங்காய விற்பனை என்று ஏமாற்றுகிறார்கள்; ஆனால், கடைக்குச் சென்றால் அங்கு வெங்காயமே இருப்பு இருப்பதில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கையே இந்த விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தங்கம் வாங்க முடியுமா என்று ஏழை மக்கள் ஏங்கிய காலம் போய், அரிசியே வாங்க முடியுமா என்று ஏங்குகிறார்கள். திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பணவீக்கம் குறைவாக இருக்கும் மாநிலமாகத் தமிழகத்தை வைத்திருந்தோம். ஆனால், இப்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு எந்தத் துறையிலும் நிர்வாகத் திறன் இல்லை. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மூடர் கூட்டத்தின் ஆட்சிதான் இன்றைக்குத் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் தவெக அரசு, சொந்தப் புத்தியும் இல்லாத, சொல் புத்தியும் இல்லாத ‘சோப்ளாங்கி’ அரசு. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் வாங்காத அதிக விலையாக 37 ரூபாய்க்கு மின்சாரம் வாங்குகிறார்கள். காரணம், எந்தவிதத் திட்டமிடலும் தொலைநோக்கும் இல்லை. இப்போது அதிலிருந்து திசைதிருப்புவதற்காக என்ன செய்கிறார்கள்? 41 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப் போவதாகச் செய்தியை வெளியிட்டு, ‘யு-டர்ன்’ அடித்துவிட்டார்கள். ஒரு கோட்டின் பக்கத்தில் அதைவிடப் பெரிதாக இன்னொன்றைப் போட்டால், தானாகவே அந்தக் கோடு சின்னக் கோடாக ஆகிவிடும். அதுபோல, 37 ரூபாயை குறைவாகக் காண்பிக்க வேண்டும் என்று, அந்த 41 ரூபாய் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். மக்களைப் பாதிக்கின்ற இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நாம் பேசினால், ஒரு நல்ல அரசு அதைச் சரிசெய்யப் பார்க்க வேண்டும். ஆனால், இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? இவர்களுடைய ஐ.டி விங்-இல் இருக்கும் கூட்டத்தை வைத்துத் ‘டூல்கிட்’ ஆக்டிவேஷன் செய்கிறார்கள். எந்தக் கட்சி மக்கள் பிரச்சினையைப் பேசினாலும், அந்தப் பதிவுகளுக்குக் கீழே அவர்களைத் திட்டிப் கமெண்ட் போட வைத்தாலே போதும் என்று இருக்கிறார்கள். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி என்று முதல்வர் சொல்கிறாரே. உண்மையில் எந்த இரண்டிற்கு இடையில் போட்டி இருக்கிறது? >> மின்வெட்டு - அரிவாள் வெட்டு >> கரண்ட் பில் - மளிகை பில் >> விலை உயர்வு - கொலை உயர்வு. இதுதான் தமிழ்நாட்டின் யதார்த்தம் ‘அண்ணனாக இருப்பேன், மாமாவாக இருப்பேன், சித்தப்பா, பெரியப்பாவாக இருப்பேன்’ என்று வசனம் பேசினாரே. முதலில் அவர் முதல்வராக இருக்கட்டும். அவர் வேலையை ஒழுங்காகப் பார்த்தால், தமிழகம் எப்படி அனைத்துத் துறைகளிலும் ‘ரிவர்ஸ் கியரில்’ செல்லும்? ஏதாவது ஒரு துறையிலாவது கடந்த திராவிட மாடல் ஆட்சியை விடத் தவெக ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறதா? எல்லாவற்றிலும் சரிவு, வீழ்ச்சி, பின்னடைவு. இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம். இதை எதிர்த்துதான் 31-ம் தேதி திமுக நடத்துகிற ஆர்ப்பாட்டம் என்பது, இந்த அரசுக்கான எச்சரிக்கை மணி. இதை ‘Wake-Up Call’ ஆக எடுத்துக்கொண்டு முதல்வர் செயல்பட வேண்டும். மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம். மக்களும் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம். ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம். முதல்வரையும், தூங்கி வழிகிற ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்புகிற அளவுக்கு, 31-ம் தேதி நமது கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை