சென்னை: அரசுத் துறைகள், பொதுத் துறைநிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அவுட்சோர்சிங் பணியாளர்களை தேர்வு செய்யும் முகமையாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்டும் பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகவும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆகியோர் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வாயிலாகவும், காவல், தீயணைப்பு, சிறைத் துறை பணியாளர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல் செவிலியர் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்கள், மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் (வெளி முகமை) பணி நியமனப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, அரசு பொதுத் துறை நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசாணையில், ‘அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அதுதொடர்பான நிறுவனங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் தேர்வு செய்யும் முகமையாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை ஆளுநர் நியமித்துள்ளார்’ என கூறப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செவிலியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், டெக்னீஷியன்கள் போன்ற பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. அவுட்சோர்சிங் முறையிலான பணிநியமனங்கள் ஓர் அரசு நிறுவனம் மூலமாகவே மேற்கொள்ளப் படும் பட்சத்தில், இனிமேல் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி உள்ளிட்ட வாரியங்கள் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர்அமிர்தகுமார் கூறியது: தவெக ஆட்சிக்கு வந்தால் அவுட்சோர்சிங் முறை பணி நியமனம் ஒழிக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவுட்சோர்சிங் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா, இந்த புதிய நடைமுறையால், அலுவலக உதவியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் என தற்போது தனியார் முகமைகள் மூலம் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்கள் அனைத்தும் இனி அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்படும். எனவே, இளைஞர்களுக்கு அரசுத் துறைகளில் நேரடி நியமன வாய்ப்பு குறையும். அரசைப் பொருத்தவரை இந்த நடவடிக்கை செலவினத்தை குறைக்கக்கூடும். அதே நேரம், அரசு நிர்வாகத்தில் தவறுகள் அதிகரிக்கும். நிரந்தர அரசு ஊழியர்களுக்கு இருக்கக்கூடிய பொறுப்புணர்வு, அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கு இருக்காது. ஏதேனும் தவறு நிகழும் பட்சத்தில் அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது. அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் பணி நியமன முறையால் லட்சக்கணக்கான இளைஞர்களின் ‘அரசு வேலை’ கனவு, கனவாகவே போய்விடும். எனவே, அவுட்சோர்சிங்முறையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனங்களில் ‘அவுட்சோர்சிங்’ முறையில் ஊழியர்களை நியமிக்க முடிவு
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗