தவெக ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக துரை வைகோ எம்.பி. கூறியது குறித்து... முதல்வர் விஜய்யுடன் துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம் தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் திமுகவும் அதிமுகவும் செய்து வருவதாக மதிமுக எம்.பி. துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுடன் துரை வைகோ எம்.பி. பேசியதாவது, "தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் சம்பந்தமான பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக புனல் மின் திட்டம் (Hydel Project) பாதிக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் தடைப்பட்டது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரமும் தடைப்பட்டது. இவை மட்டுமின்றி, இந்தாண்டில் கடந்த அக்டோபர் வரையில் தென் தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருந்ததால் மின்சாரத் தேவையும் அதிகமாக இருந்தது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 17,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால், இந்தாண்டில் அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 21,000 மெகாவாட் மின் தேவை ஏற்பட்டிருக்கிறது. மின்சாரம் தொடர்பான பிரச்னைகளுக்குக் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக நடந்த நிர்வாகச் சீர்கேடுதான் காரணம் என சொல்ல முடியும். குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகால (திமுக) ஆட்சியில் மின்சார உற்பத்திக்கான எந்தவொரு முயற்சியும் அப்போதைய அரசு மேற்கொள்ளவில்லை. கடந்த ஆட்சியில் ஒரு திட்டத்துக்காக (மின்சார உற்பத்தி) ரூ. 13,000 கோடிக்கு திமுக அரசு முதலீடு செய்திருந்தது. ஆனால், அந்த ரூ. 13,000 கோடி எங்கே போனது? கிட்டத்தட்ட ரூ. 6,000 கோடிக்கு உபகரணங்கள் வாங்கினார்கள். அவை அனைத்தும் உப்புக் காற்று பட்டதால் பாழாகி விட்டன. இவற்றுக்கெல்லாம் திமுகவும் அதிமுகவும் பதில் சொல்ல வேண்டும். தவெக ஆட்சி வரக்கூடாது என்பதே திமுக - அதிமுகவின் எண்ணம். சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் ஜனநாயக தீர்ப்பை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனநிலை, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கிடையாது. தவெக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேரும் அளவுக்கு முயற்சித்துள்ளனர். ஆனால், இப்போது எப்படியேனும் இந்த ஆட்சி கவிழ வேண்டும் என நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் மின்சாரம், சென்னையில் வெள்ளப் பெருக்கு என எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளுக்கு பொறுப்பான எதிர்க்கட்சிகளாக தீர்வு எதுவும் கூறாமல், ஏதேனும் ஒரு காரணத்தால் இந்த ஆட்சி கவிழாதா என நினைக்கின்றனர். இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்க்கட்சிகள் செய்கின்றனர்" என்று தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக, அதிமுக முயற்சி: துரை வைகோ
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗